திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது: தூத்துக்குடியில் கனிமொழி போட்டி

பட மூலாதாரம், Facebook/M.K.Stalin
வரும் மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை இன்று அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
தூத்துக்குடியில் கனிமொழி, மத்திய சென்னை வேட்பாளராக தயாநிதி மாறன், நீலகிரி தொகுதியில் ஆ.ராசா உட்பட இருபது தொகுதிகளின் வேட்பாளர்களை அவர் அறிவித்தார்.
அறிவிக்கப்பட்ட மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் 13 பேர் புதியதாக போட்டியிடக் கூடியவர்கள் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனுடன் 18 சட்ட மன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார் ஸ்டாலின்.

வாரிசு வேட்பாளர்கள்
தி.மு.க. அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் பல வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் அக்கட்சியிலுள்ள மிகவும் அறியப்பட்ட வாரிசுகளாக உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் கௌதம சிகாமணி, முன்னாள் அமைச்சரும் தி.மு.க. பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோருக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.கவிருந்து பிரிந்துவந்து தி.மு.கவில் இணைந்த மேட்டூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தே.மு.தி.க. என்ற பெயரில் மேட்டூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, 6200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர்.
வேட்பாளர்கள் அறிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், வரும் 19ஆம் தேதியன்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமென்றும் 20ஆம் தேதியன்று திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். பணக்காரர்கள் மட்டுமே போட்டியிடக்கூடிய நிலை தி.மு.கவில் ஏற்பட்டிருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி அல்ல, எல்லாத் தரப்பினருமே போட்டியிடும்வகையில்தான் வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.
தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலில் இஸ்லாமியர் யாரும் இடம்பெறவில்லை.

பட மூலாதாரம், FACEBOOK/ GETTY IMAGES
முன்னதாக தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
தென்சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய எட்டு மக்களவைத் தொகுதிகளில் அதிமுக - திமுக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, தேனி, கரூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் அதிமுக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது.
கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய இரு தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி இருக்கும்.
பாமக போட்டியிடும் ஏழு தொகுதிகளில் விழுப்புரம் தவிர மற்ற ஆறு தொகுதிகளிலும் திமுகவை எதிர்கொள்கிறது. விழுப்புரம் (தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் மோதுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












