மக்களவை தேர்தல் 2019: திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு

பட மூலாதாரம், Thirumavalavan/fb
எதிர்வரும் மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இழுபறியில் இருந்து வரும் இவ்விரு கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இன்னும் முடிவு செய்யப்படாத இந்த இரண்டு மக்களவை தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக கட்சியின் தலைமையகமான சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.


எனினும், தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவை தொகுதிகளில் எந்த இரண்டு தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது தி.மு.கவின் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது கூட்டணியின் நலனை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

பட மூலாதாரம், DMK
இதன் மூலம் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கான தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது.
மேலும், மறுமலர்ச்சி திராவிட கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடனான பேச்சுவார்த்தை இன்று நடத்தப்பட்டு தொகுதி ஒதுக்கீடு இறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திமுகவின் தலைமையகத்தில் அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீட்டு குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி??
எதிர்வரும் மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ஐந்து கட்சிகளுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதாவது, முதலாவதாக காங்கிரஸ் கட்சியுடன் நடத்தப்பட்ட தொகுதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தையில் அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

பட மூலாதாரம், DMK
அதைத்தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் எவை என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 3 தொகுதிகளில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்ட வி.சி.க. இரண்டிலும் தோல்வியடைந்தது. பதிவான வாக்குகளில் 1.5 சதவீத வாக்குகளைப் பெற்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












