ராகுல்-ஸ்டாலின்: புதிய தலைமை, புதிய சூழலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி எப்படி இருக்கும்?

ஸ்டாலின்-ராகுல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்டாலின்-ராகுல்
    • எழுதியவர், ஆர்.மணி
    • பதவி, மூத்த பத்திரிகையாளர்

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் )

''திமுக தலைவர் கலைஞர், 2004 ம் ஆண்டு, 'இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவில் நல்லாட்சி தருக என்று அன்னை சோனியா காந்தியை பார்த்து சொன்னார். இப்போது நான் சொல்லுகிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே வருக, இந்தியாவுக்கு நல்லாட்சி தருக. ஆம். நான் தமிழ் நாட்டிலிருந்து ராகுல் காந்தியின் பெயரை இந்தியாவின் பிரதமர் பதவிக்கு முன் மொழிகிறேன்.

இந்தியாவை காப்பாற்ற கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். பாசிச, நாசிச மோடி அரசை வீழ்த்தக் கூடிய வல்லமை உங்களுக்கு (ராகுல் காந்தி) இருக்கிறது என்று நான் நம்புகிறேன்'' என்று ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நிகழ்ந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு பிறகு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறைகூவல் விடுத்து விட்டார். கடந்த நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, முதன் முறையாக, மோடியை மிக கடுமையாக தாக்கி ஸ்டாலின் பேசியது பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது.

அந்த மேடையில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.ராஜா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.கே. ரங்கராஜன் ஆகியோரும் இருந்தனர். ''மேடையில் இருக்கும் அனைவரும் ராகுல் காந்தியை பிரதமராக நான் முன் மொழிவதை ஆதரிக்க வேண்டும்'' என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார். ஸ்டாலினுக்கு முன்பு பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தையும், இந்தியாவையும் காப்பாற்ற அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று பேசினார்.

கருணாநிதி - மன்மோகன் - சோனியா

பட மூலாதாரம், RAVEENDRAN

திமுக - காங்கிரஸ் உறவின் வரலாறு;

முன்னதாக கருணாநிதியின் சிலையை சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற வண்ணமிகு விழாவில் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேலே குறிப்பிட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு பற்றி எழுதும் போது கடந்த 47 ஆண்டுகாலத்தில் திமுக - காங்கிரஸ் உறவு பற்றியும், 1996 - 2013 ஆண்டு காலத்தில் தேசிய அரசியிலில் திமுக-வின் பங்கேற்பு பற்றியும் பல சுவையான தகவல்கள் என்னுடைய நினைவுக்கு வருகின்றன. முதலில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் - திமுக உறவு பற்றி பார்க்கலாம்.

சோனியா காந்தி அண்ணா அறிவாலயத்திற்கு வருவது இது மூன்றாவது முறையாகும். முதல் முறையாக சோனியா காந்தி அண்ணா அறிவாலயம் வந்தது பிப்ரவரி 13, 2004 ம் ஆண்டு. 2004 ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்து விட்டது என்று அன்றைய தினம் முறையாக அறிவிக்கப் பட்டது. அந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் - இரண்டு இடதுசாரி கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - என்ற மெகா கூட்டணி அமைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் அனைத்திலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றது. பின்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக 2004 ம் ஆண்டு மே மாதம் சென்னை வந்த சோனியா காந்தி அப்போதும் பொதுக் கூட்டத்திற்கு செல்லுவதற்கு முன்பு அண்ணா அறிவாலயம் வந்தார்.

1997 ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதய ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கவிழ்த்த து. காங்கிரஸ் ஆதரவுடன் குஜ்ரால் பிரதமராக இருந்ததால் காங்கிரஸ் ஆதரவை வாபஸ் வாங்கியதால் குஜ்ரால் ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு காங்கிரஸ் அப்போது சொன்ன காரணம், ராஜீவ் காந்தி கொலையின் சதி திட்டம் பற்றி விசாரிக்க நியமிக்கப் பட்ட ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை, ராஜீவ் கொலையின் சதி திட்டத்தில் திமுக வில் சிலருக்கு தொடர்பு இருக்கிறது என்று சந்தேகிக்க பூர்வாங்க ஆதாரம் இருக்கிறது என்று கூறியதுதான். இதனால் அப்போது குஜ்ரால் அமைச்சரவையில் இருந்த திமுக அமைச்சர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் இதற்கு குஜ்ரால் மறுத்ததால் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வாங்கி அரசை கவிழ்த்தது.

இதுபற்றி, பிப்ரவரி, 13, 2004ல் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது சோனியா காந்தி கீழ் கண்டவாறு கூறினார்; ''ஜெயின் கமிஷன் அறிக்கை பற்றி சில தவறான புரிதல்கள் முதலில் ஏற்பட்டன. அது இடைக்கால அறிக்கை. ஆனால் ஜெயின் கமிஷன் தன்னுடைய இறுதி அறிக்கையில் குறிப்பிட்ட நபர்கள் பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை'' என்றார். இங்கே நாம் சம்மந்தப்பட்ட நபர்கள் என்று சோனியா காந்தி சொன்னதை திமுக வை பற்றித்தான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக - காங்கிரஸ் உறவு எந்த ஒரு அரசியல்/வரலாற்று மாணவனுக்கும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் தான். 1971 ம் ஆண்டு தேர்தல் தொடங்கி இன்று வரையில், அதாவது கடந்த 47 ஆண்டு காலத்தில் திமுக - காங்கிரஸ் இரண்டும் கூட்டணி அமைத்து நான்கு மக்களவை தேர்தல்களை - 1971, 1980, 2004 மற்றும் 2009 சந்தித்தன. சட்டமன்றத் தேர்தல்களை பொறுத்த வரையில் 1971, (சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்கள் ஒன்றாக வந்தன), 1980, 2006. 2016 என்று நான்கு சட்டமன்ற தேர்தல்களையும் இந்த இரு கட்சிகளும் இணைந்து சந்தித்திருக்கின்றன. இதில் 1971 மற்றும் 2006 சட்டமன்ற தேர்தல்களில் வென்று தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. 1980 மற்றும் 2016 தேர்தல்களில் இந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது.

கருணாநிதி -சோனியா

பட மூலாதாரம், PRAKASH SINGH

இதில் 1971 ம் ஆண்டு தேர்தல் முக்கியமானது. அப்போது மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஒன்றாக வந்தன. அப்போது காங்கிரஸ் இரண்டாகப் பிளந்து, பழைய காங்கிரஸ், புதிய காங்கிரஸ் என்று இரண்டாக இருந்தது. புதிய காங்கிரஸ் தலைவராக இருந்த பிரதமர் இந்திரா காந்தி திமுக வுடன் கூட்டணி வைத்தார். தொகுதி பேரம் கடுமையாக இருந்தது. எந்தளவுக்கு மக்களவை தொகுதிகளை பெற முடியுமோ அந்தளவுக்கு பெற்று, அதில் வென்று, அரசியல் ரீதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, இந்திரா காந்தி மிக கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். சட்டமன்ற தொகுதிகளை விட மக்களவை தொகுதிகளை மட்டுமே இந்திரா காந்தி குறி வைத்து பேரம் பேசிக் கொண்டிருந்தார்.

இறுதியில் உடன்பாடு ஏற்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 மக்களவை தொகுதிகளில், பத்து தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கிய திமுக, மீதமிருந்த 30 தொகுதிகளில் தானே போட்டியிட்டது. இதை விட முக்கியம், தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தமிருந்த 234 தொகுதிகளில் ஒரு தொகுதி கூட காங்கிரசுக்கு ஒதுக்கப் படாத விவகாரம் தான். ஆம். காங்கிரசுக்கு 10 மக்களவை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றால், சட்டமன்றத் தேர்தலில் ஓர் இடம் கூட தர முடியாது என்று கடுமையாக திமுக பேரம் பேசியதை, தன்னுடைய தேசிய அரசியலின் நலன் கருதி இந்திரா காந்தி ஏற்றுக் கொண்டார்.

ஏனெனில் இந்திரா காந்தியின் அன்றைய நோக்கம், அந்த காலகட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களாக இருந்த நிஜலிங்கப்பா, காமராஜர் போன்றவர்களால் நடத்தப் பட்ட பழைய காங்கிரஸை என்ன விலை கொடுத்தும் 1971 மக்களவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். பழைய காங்கிரஸ் துளிர்த்து விட்டால் தன்னுடைய அரசியல் அஸ்தமனம் துவங்கி விடும் என்று நன்றாகவே இந்திரா காந்தி புரிந்து கொண்டிருந்தார். இந்திரா காந்தியின் இந்த பலவீனத்தை தெளிவாக அறிந்திருந்த கருணாநிதியின் ராட்சஸ அரசியல் மூளை தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட புதிய காங்கிரசுக்கு வேண்டாம் என்று இந்திரா காந்தியை சொல்ல வைத்தது.

இந்த உறவு 1974 வரையில் இருந்தது. பிறகு கொஞ்சங் கொஞ்சமாய் உரசல் வந்தது. 1975 ல் அவசர நிலையை இந்திரா காந்தி பிரகடனம் செய்தார். 1976 ஜனவரியில் தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப் பட்டது. மு.க. ஸ்டாலின், முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட பல திமுக-வினர் கைது செய்யப்பட்டனர். சிறைச்சாலையில் அவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பின்னர் 1977 ல் மத்தியில் இந்திரா காந்தி தோற்று, ஜனதா அரசு வந்தது. ஆனால் இரண்டரை ஆண்டுகளில் ஆட்சி கவிழ்ந்தது.

1980 மக்களவைத் தேர்தலில், இந்திரா காந்தியின் காங்கிரசுடன் திமுக தேர்தல் கூட்டணி வைத்தது. ''நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியை தருக" என்று கருணாநிதி முழக்கம் வைத்தார். தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளில் 37 தொகுதிகளை இந்த கூட்டணி வென்றது. இரண்டே தொகுதிகளை அப்போதய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் அஇஅதிமுக வென்றது.

கருணாநிதி -சோனியா

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR

அடுத்த சில மாதங்களில் எம்ஜிஆர் ஆட்சியை இந்திரா காந்தி கலைத்தார். பின்னர் ஜூன் 1980 சட்டமன்ற தேர்தலில் திமுக-வும், காங்கிரசும் தலா 110 இடங்களில் கூட்டணி அமைத்து நின்றன. எந்த காங்கிரசுக்கு 1971 தேர்தலில் ஒரு சீட் கூட கருணாநிதி தர மறுத்தாரோ, அதே காங்கிரசுக்கு 110 இடங்களை அவர் ஒதுக்கியது காலத்தின் கோலம்தான்.

ஆனால் இந்த கூட்டணி படு தோல்வி அடைந்தது. திமுக 32 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 130 இடங்களுக்கும் மேல் பெற்று எம்ஜிஆர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். இந்த திமுக - காங்கிரஸ் உறவு 1983 வரை நீடித்தது. பின்னர் 1984 ல் இந்திரா காந்தி கொல்லப் பட்ட பிறகு நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அஇஅதிமுக வுடன் கூட்டணி வைத்தது.

இதில் முக்கியமான ஒரு விஷயம் எப்போதெல்லாம் காங்கிரசுடன் திமுக தேர்தல் உறவு கொண்டதோ அதெல்லாம் குறைந்தது மூன்றாண்டுகள் முதல் ஒன்பது ஆண்டுகள் வரையில் நீடிப்பதாகவே இருந்தன. உதாரணத்திற்கு 2004ல் காங்கிரசுடன் ஏற்பட்ட திமுக வின் உறவு 2013 வரையில் நீடித்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோற்றாலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக தொடர்ந்தது. ஏழு மத்திய அமைச்சர்கள் பிரதமர் மன்மோகன் சிங் அரசில் தொடர்ந்தனர்.

ஸ்டாலின்-ராகுல்

பட மூலாதாரம், DMK

கடைசியாக 2014 மக்களவை தேர்தல்களுக்கு சரியாக ஓராண்டுக்கு முன்பு, அதாவது, மார்ச், 2013 ல் திமுக மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து விலகியது. சொல்லப் பட்ட காரணம், இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கிறது என்பதுதான். ஆனால் எந்த காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர்களுக்கு தொடர் துரோகங்களை செய்து கொண்டிருக்கிறது என்று முழங்கி, கருணாநிதி வெளியே வந்தாரோ அதே காங்கிரஸ் கட்சியுடன் தான் 2016 சட்டமன்ற தேர்தலில் அவர் கூட்டணி அமைத்து காங்கிரசுக்கு 41 இடங்களையும் ஒதுக்கினார். ஆனாலும் கருணாநிதியால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் ஒரு முக்கியமான விஷயம் - இது தற்செயலானதாகவும் இருக்கலாம் - எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக பெண்கள் இருக்கிறார்களோ அப்போதெல்லாம் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவானதாகவும், சில ஆண்டுகளாவது தொடர்ந்து நீடிப்பதாகவும் இருந்திருக்கிறது. உதாரணம் இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இருந்ததை சொல்லலாம்.

ராஜீவ் காந்தி காலத்தில், அது வெறும் ஏழு ஆண்டுகள் - 1984 - 1991 - என்று இருந்தாலும், காங்கிரஸ் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுகவுடன்-தான் கூட்டணி வைத்தது. திமுக வுடன் கூட்டணி வைக்கவில்லை. இதற்கு தனி மனித ஆளுமைகளின் தன்முனைப்பு (Ego) வும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இதில் அறுதியிட்டு எதையும் நாம் உறுதியாக இப்போது சொல்ல முடியாது.

ஆனால் தற்போது கடந்த 47 ஆண்டுகாலத்தில் இல்லாத ஒரு புதிய சூழலில் காங்கிரசும், திமுக வும் அடியெடுத்து வைத்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கும் புதிய தலைவர் வந்துவிட்டார். அது ராகுல் காந்தி. திமுக-வில் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தலைவராகி விட்டார். கருணாநிதி இருக்கும் போதே நாற்பது ஆண்டு கால அனுபவம் பெற்றவர்தான் ஸ்டாலின். ஆனால் அவர் தற்பொழுது கருணாநிதி இல்லாத திமுக வின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல் நிலை அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை.

ராகுல்

கிட்டத்தட்ட எல்லா முடிவுகளும் ராகுல் காந்தியால்தான் எடுக்கப் படுகின்றன. ஆகவே ராகுல் காந்தி தலைமையிலான் காங்கிரசுக்கும், ஸ்டாலின் தலைமையிலான திமுக-வுக்குமான அரசியல் உறவு, குறிப்பாக தேர்தல் கூட்டணி உறவு, அதிலும் குறிப்பாக, எத்தனை இடங்கள் யாருக்கு என்று முடிவு செய்யப்படுவது என்பதெல்லாம் எப்படி நடந்தேறப்போகிறது என்பது கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய விஷயமாகவே தற்போது இருக்கிறது.

நடந்த முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் மூன்று முக்கிய மாநிலங்களில் - மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் - காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருப்பது அதனது பேரம் பேசும் திறனை வலுவாக்கியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் தொகுதி ஒதுக்கீட்டில் பிரச்சனைகள் எப்படி வடிவம் எடுக்கப்போகின்றன என்பது பற்றி நாம் இப்போது ஏதும் சொல்ல முடியாது. ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் வெளிப்டையாகவே ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்து விட்டதால் தொகுதி ஒதுக்கீட்டில் பெரிய சிக்கல்கள் எழாது என்றும் ஒரு கருத்து தற்போது எழுந்திருக்கிறது.

ஸ்டாலின்

பட மூலாதாரம், Hindustan Times

மத்திய அரசும் திமுகவும்

இந்த இடத்தில் கடந்த 22 ஆண்டுகாலத்தில் தேசிய அரசியலில் திமுக வின் பங்கேற்பு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்வது பொறுத்தமானது என்றே நினைக்கிறேன். 1996 முதல் 2013 வரையில் மத்தியில் இருந்த மூன்று வெவ்வேறு விதமான அரசியல் அணிச்சேர்கைகளில் அங்கம் வகித்து, மத்திய அமைச்சரவையில் பங்கேற்று, அதுவும் வளம் கொழிக்கும் இலாக்காக்களை பெற்று, அதிகாரத்தை சுவைத்தது இந்தியாவில் உள்ள அத்தனை மாநில கட்சிகளிலும் ஒரே ஒரு கட்சி திமுக மட்டும் தான்.

1996 ஜூன் முதல் 1998 பிப்ரவரி வரையில் மூன்றாவது அணியின் பிரதமர்களான தேவே கவுடா மற்றும் ஜ.கே. குஜ்ரால் அமைச்சரவையில் திமுக இருந்தது. பின்னர், 1999 செப்டம்பர் முதல் 2003 டிசம்பர் வரையில் வாஜ்பாய் தலைமையிலான தேசீய ஜனநாயக கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தது.

ஸ்டாலின் -ராகுல்

பட மூலாதாரம், DMK

அதன் பிறகு 2004 மே முதல் 2013 மார்ச் வரையில் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஒன்பதாண்டுகள் திமுக பங்கு பெற்றது. ஆகவே 14 ஆண்டுகளுக்கும் மேல், மத்தியில் மூன்று வெவ்வேறு விதமான அரசியல் அணிச்சேர்க்கைகளில் பங்கேற்ற, இந்தியாவின் ஒரே மாநிலக் கட்சி திமுக மட்டும்தான்.

இது திமுக வின் அரசியல் சாதுர்யமா? அல்லது அளவற்ற பதவி வெறியா? அல்லது சந்தர்ப்பவாத அரசியலின் உச்சகட்ட செயற்பாடா? என்ற கேள்விக்கான விடை கடினமானதாகவே எனக்கு தற்போது தெரிகிறது. ஏனெனில் அரசியலை பற்றி சொல்லும் போது மேலை நாட்டு அறிஞர்களாகட்டும் அல்லது சாணக்கியனாகட்டும் சொல்லும் இரண்டு விஷயங்களில் ஒன்று, போரிலும் (இங்கு இதனை அரசியல் என்றே நாம் பொருள் கொள்ளலாம்), காதலிலும் எல்லாமே நல்லதுதான் (Everything is good in love and war). இரண்டாவது, அரசியல் என்பது சாத்தியமானதை செய்யும் கலை (Politics is nothing but an art of possible).

ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். காலம் எல்லாவற்றையும், எல்லோரையும் எப்படி ஈவு இரக்கமில்லாமலும், சரியாகவும், துல்லியமாகவும் எடை போடுமோ அது போலவே திமுக-வையும், மறைந்த திரு. மு.க வையும் இந்த விவகாரத்தில் எடை போடும் ….. சரியான தீர்ப்பை வரலாறு எழுதும் ….. இதிலிருந்து எவரும், எதுவும் தப்ப முடியாது. காரணம் இது என்றும் மாறாத இயற்கையின் விதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: