எகிப்தில் 4,400 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், AFP / getty images
கடந்த சில மணிநேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
எகிப்தில் கண்டறியப்பட்ட பழங்கால கல்லறை

பட மூலாதாரம், Reuters
எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட, சுமார் 4,400 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மதகுரு ஒருவரின் கல்லறையில் அகழ்வாராய்ச்சியாளர்கள் இன்று முதல் அகழ்வாய்வைத் தொடங்குகின்றனர்.
'வாய்த்தே' எனும் அந்த மதகுருவின் கல்லறையில் அவரது தாய், மனைவி மற்றும் பிற உறவினர்களும் புதைக்கப்பட்டுள்ளனர்.
அழகிய பழங்கால ஓவியங்களும், பாரோ மன்னர்களின் சிலையும் அந்த மிகப்பெரிய கல்லறையின் உட்புறத்தில் நிறுவப்பட்டுள்ளன.

'அமெரிக்காவின் வெற்றிக் கோப்பை'

பட மூலாதாரம், AFP / getty images
பிலிப்பைன்ஸ் - அமெரிக்கப் போரின்போது பிலிப்பைன்ஸ் படையினரால் 1901ஆம் ஆண்டு 48 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, மூன்று தேவாலய மணிகளை அமெரிக்கா எடுத்துச் சென்றது.
அந்த வெண்கல மணிகள் பிலிப்பைன்ஸில் விடுதலையின் சின்னமாக பார்க்கப்படுவதால், அதைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் அரசு பல ஆண்டுகளாக கோரி வந்தது. ஆனால், அவை தங்கள் வெற்றிக் கோப்பைகள் என அமெரிக்கத் தரப்பில் போரில் ஈடுட்டவர்கள் கூறியிருந்தனர்.
117 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மணிகளைத் திரும்ப ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

பிரான்ஸ் - தொடரும் போராட்டம்

பட மூலாதாரம், Reuters
தொடர்ந்து ஐந்தாவது சனிக்கிழமையாக பிரான்சில் 'மஞ்சள் ஜாக்கெட்' போராட்டக்காரர்கள் தலைநகர் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் கூடி, போராட்டம் நடத்தினர்.
அதிகரிக்கும் பெட்ரோல் - டீசல் விலைக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம், பல்வேறு கோரிக்கைகளுக்காக இன்னும் தொடர்கிறது.
மரபுசாரா எரிசக்தியில் முதலீடு செய்ய இந்த விலையேற்றம் தவிர்க்க இயலாதது என்று கூறிய அரசு பின்னர் போராட்டக்காரர்களுக்கு செவி சாய்த்தது.
எனினும், பிற கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படும் இந்தப் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

பருவநிலை ஒப்பந்தம் - இறுதி உடன்படிக்கை

பட மூலாதாரம், Reuters
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020க்குள் செயல்படுத்த போலாந்தில் கூடிய பேச்சுவார்த்தையாளர்கள் , பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர்.
முன்னர், கார்பன் சந்தையின் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல்கள் காரணமாக கூட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில் இந்த கூட்டம் மேற்கொண்டு தொடருமா என்றிருந்த நிலையில், இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட புதிய விதிகள், உலக நாடுகள் உறுதியேற்றுள்ள கார்பன் வெளியேற்ற கட்டுப்பாட்டை நிச்சயப்படுத்தும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட பிரநிதிகள் நம்புகின்றனர்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












