அமெரிக்காவுக்கு தஞ்சம் கோரி வந்த 7 வயது சிறுமி தடுப்புக் காவலில் மரணம்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க எல்லை காவல் படையினரின் காவலில் இருந்தபோது, 7 வயது சிறுமி மரணமடைந்தது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவை நோக்கி சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்த 7,500க்கும் அதிகமான தஞ்சம் கோரிகள், அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படாததால் அமெரிக்க - மெக்சிக எல்லையில் தங்கியுள்ளனர்.
அவர்களில் சிலர் அமெரிக்க எல்லைக்குள் நுழையவும் முயற்சி செய்து வருகின்றனர்.
குவாட்டமாலாவை சேர்ந்த சிறுமி ஜகெலின் கால் மாகுயின், தனது தந்தையோடு சேர்ந்து கடந்த வாரம் அமெரிக்க-மெக்சிக எல்லையை கடந்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டார்.
நீர்சத்து குறைந்து விட்டதால் அந்த சிறுமி இறந்து விட்டதாக முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தடுப்புக்காவலில் இருந்தபோது அவர்களுக்கு உணவும், நீரும் கொடுக்கப்பட்டது என்று எல்லையிலுள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இறுதி அறிக்கை வெளியிடுவதற்கு முன்னால் அரசு கண்காணிப்பு அமைப்பு ஒன்று இந்த சம்பவத்தை புலனாய்வு செய்கிறது.


கடுமையான குடியேற்றக் கொள்கை மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து, குடியேறும் நோக்கத்தோடு அமெரிக்க எல்லைக்கு பயணம் மேற்கொண்டு வரும் குடியேறிகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காட்டி வரும் கடுமையான நடவடிக்கைகளில் இருந்த அதிக கவனத்தை இந்த சிறுமியின் இறப்பு மீண்டும் புதுப்பித்துள்ளது.
தங்களில் தாயகங்களில் அனுபவிக்கின்ற சித்திரவதை, ஏழ்மை மற்றும் வன்முறைகளில் இருந்து தப்பியோடி வருவதாக குடியேறிகள் கூறுகின்றனர்.
சட்டப்பூர்வமற்ற வகையில் அமெரிக்காவில் நுழைவோர் நாடு கடத்தப்படுவர் என்று அமெரிக்கா வழங்கியுள்ள எச்சரிக்கைக்கு பின்னரும், அமெரிக்காவில் குடியமரும் நோக்கத்தோடு வருவதாக பல குடியேறிகள் கூறுகின்றனர்.
என்ன நடந்தது? அமெரிக்க அதிகாரிகளின் தகவல்

பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் 6 தேதி அமெரிக்க எல்லையை சட்டபூர்வமற்ற முறையில் கடந்த இந்த சிறுமியின் தந்தையும், சிறுமியும் தடுத்து வைக்கப்பட்டதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு சேவை தெரிவிக்கிறது.
அதன் பின் செய்யப்பட்ட பரிசோதனையில், இந்த சிறுமிக்கு உடல்நல பிரச்சனைகள் எதுவும் இருக்கவில்லை.
94 மைல் (151 கி.மீ) தொலைவிலுள்ள எல்லை பாதுகாப்பு நிலையத்திற்கு பேருந்தில் அனுப்பப்படும் வரை உணவு, நீர் மற்றும் கழிவறை வசதிகள் இருந்த ஓர் இடத்தில்தான் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


ஆனால், பேருந்தில் இருந்தபோதே இந்த சிறுமி வாந்தி எடுக்க தொடங்கினார் என்று கூறுகின்ற அதிகாரிகள் பின்னர் சிறுமி இறந்து விட்டர் என்று தெரிவித்துள்ளனர்.
எல்லை பாதுகாப்பு நிலையத்தை இந்த பேருந்து சென்றடைந்தவுடன் அவசர மருத்துவ பராமரிப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எல் பாசோவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் இருமுறை அவருக்கு நினைவு திரும்பியது என்று மத்திய எல்லை பாதுகாப்பு படை தெரிவித்தது.

இதயத்தின் இயக்கம் நின்றுவிட்டதால் இந்த சிறுமி இறந்துவிட்டதாக கூறியுள்ள மத்திய எல்லை பாதுகாப்பு படை, மூளையில் வீக்கம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது.
"அவசர மருத்துவ உதவி வழங்குவதற்கு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் இயன்ற அனைத்தையும் செய்துள்ளனர்," என்ற இந்த படையின் ஆணையாளர் கெவின் கே. அலீனான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"அமெரிக்க உள்துறையின் புலனாய்வை நாங்கள் வரவேற்கிறோம். இதில் நடந்தவற்றை மீளாய்வு செய்து, இந்த சோக நிகழ்வில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வோம்," என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் பதவி விலக வேண்டுமென சில ஜனநாயக கட்சியினர் கூறியுள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் வெளிநாட்டு செயலர் ஹிலரி கிளிண்டன் உள்பட பலரும் எல்லையில் நிலவும் மனிதநேய நெருக்கடியின ஒரு பகுதி இதுவென கூறியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












