வடகொரிய அமைச்சர் சொத்துகளை பறிமுதல் செய்ய அமெரிக்கா நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images
ஒரு வடகொரிய அமைச்சர் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
இவர்களில் ஒருவர் வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்-னுக்கு மிகவும் நெருக்கமானவர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதையை நிரந்தரமாக மூடிவிடும் என்று வடகொரியா கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்த ஓர் அறிக்கையில் இந்த மூவர் மீதும் அடுக்கடுக்கான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த கோடைகாலத்தில் அமெரிக்க - வடகொரிய அதிபர்களிடையே சிங்கப்பூரில் நடந்த நேரடிப் பேச்சுவார்த்தை இரு நாடுகளின் உறவில் புதிய பாதையின் தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அது முதல் வடகொரியா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் பதற்றத்தைத் தணிப்பதாக இருந்தன. ஆயினும் சில தருணங்களில் கோபமான பேச்சுகளில் வடகொரியா ஈடுபட்டே வந்தது.
இரு நாட்டுத் தலைவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்பட்டது. இந்த யோசனை தமக்கு சம்மதம் என்றபோதும் அந்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு அவசரம் ஏதும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
புதிய தடைகள் என்பவை என்ன?
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அவ்வப்போது வடகொரியா குறித்து அறிக்கை தயாரிக்கும். அப்படித் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
இதன்படி, கிம்மின் வலதுகரமாக செயல்படும் சோ-ரியோங்-ஹே, வட கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜோங் க்யோங்-தாயெக், தகவல் பரப்பல் துறை அலுவலர் பாக் க்வாங்-ஹோ ஆகிய மூவரின் அமெரிக்க சொத்துகளைப் பறிமுதல் செய்யப்போவதாக அமெரிக்கா கூறுகிறது.
"உலகில் மோசமாக மனித உரிமை மீறப்படும் இடங்களில் ஒன்றாக வடகொரியா இருக்கிறது. நீதிவிசாரணை இல்லாமல் கொல்வது, பலவந்தமாக உழைக்கவைப்பது, கொடுமைப்படுத்துவது, விருப்பம்போல நீண்ட காலத்துக்கு அடைத்துவைப்பது, வன்புணர்வு உள்ளிட்ட பாலியல் வன்முறைகள், கட்டாயப் படுத்தி கருக்கலைப்பு செய்வது போன்றவை அங்குள்ள மனித உரிமை மீறலின் வடிவங்கள்," என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ கூறியுள்ளார்.
வடகொரியா என்ன சொல்கிறது?
இந்த தடை குறித்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் "அதிர்ச்சியையும், கோபத்தையும்" வெளிப்படுத்தியுள்ளது வடகொரியா. அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.வில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.


"அமெரிக்க - வட கொரிய உறவினை, கடந்த ஆண்டு இருந்ததைப் போல கடுஞ்சொற்கள் பறிமாறிக்கொள்ளும் நிலைக்கு மீண்டும் கொண்டுவந்து நிறுத்துவது என அமெரிக்க வெளியுறவுத் துறை தலைகீழாக நிற்கிறது" என அந்த அறிக்கையில் கூறியுள்ளது வடகொரியா.
அமெரிக்கா - வடகொரியா இடையே கடந்த ஆண்டு நிலவிய சூடான சொற்போரில் ஒரு கட்டத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் 'குட்டி ராக்கெட் மனிதன்' என்றும், அவரது அச்சுறுத்தல்களை உலகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் தீப்பிழப்புகளாலும், சினத்தாலும் எதிர்கொள்ளப்போவதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்பை "வயதான பைத்தியம்" என்று ஒரு கட்டத்தில் வடகொரியா விமர்சித்தது.
"வடகொரியா மீது அதிகபட்ச அழுத்தம் தருவது என்ற அமெரிக்க கோட்பாடு மிகப்பெரிய தவறான கணக்கீடாக மாறும். சிங்கப்பூரில் நடந்த இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்புக்குப் பின் எதிர்பார்க்கப்பட்ட பரஸ்பரம் நம்பிக்கையை அளிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கவேண்டும்" என்று தற்போதைய வடகொரிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட - தென் கொரிய உறவில் இணக்கம்
சிங்கப்பூரில் நடந்த அமெரிக்க-வடகொரிய தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு வடகொரிய-தென் கொரிய உறவிலும் பல இணக்கமான நிகழ்வுகள் நடந்தன. கடந்த வாரம்தான் வடகொரிய, தென் கொரிய சிப்பாய்கள் தங்கள் நாட்டு எல்லைகளைக் கடந்து மற்றவரின் எல்லைக்குள் நட்புரீதியாக பல முறை சென்று வந்தனர். இரு நாடுகளும் பிரிந்த பிறகு இதுபோல நடப்பது இதுவே முதல் முறை. இரு நாட்டு எல்லைப்புறத்தில் உள்ள ராணுவ நீக்கம் செய்யப்பட்ட பகுதியில் உள்ள பாதுகாப்பு அரண்கள் இடிக்கப்படுவதை மேற்பார்வையிடுவதற்காக அவர்கள் சென்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












