''தமிழ் கலாசாரம் மற்றும் பண்பாட்டை மத்திய அரசு அழிக்கிறது'' - ராகுல் காந்தி
தமிழ்ப் பண்பாட்டை மத்திய அரசு அழிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நேற்று கருணாநிதியின் சிலை திறப்புக்கு பிறகு ஒய்எம்சிஏ மைத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு தமிழ்ப் பண்பாட்டை அழிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
"இன்று மத்தியில் உள்ள அரசு மக்களின் குரலை ஒடுக்குகிறது. தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அழிக்கிறது." என்று ராகுல் காந்தி தன் உரையில் குறிப்பிட்டார்.
"மத்திய அரசு மக்களின் குரலை மதிக்கவில்லை, கருணாநிதியை நினைவில் கொண்டு நாடு முழுவதும் உள்ள மக்களின் குரலை ஒன்று திரட்டி இப்போதுள்ள பாஜக அரசை அகற்றுவோம்." "மத்திய அரசு இந்தியாவின் ஒருமைப்பாட்டை அழிக்க நாம் விடப்போவதில்லை." என்றார் ராகுல்.

இன்று மூன்று காங்கிரஸ் முதல்வர்கள் பதவியேற்பு

பட மூலாதாரம், NURPHOTO / getty
சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மூன்றில் வென்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். இந்நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், சத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளனர்.
பாஜகவிடம் இருந்து மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றினாலும் யாரை முதல்வராக அறிவிப்பது என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவிய நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பிறகு மூன்று மாநில முதல்வர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ராகுல் காந்தி இம்மூன்று மாநிலங்களிலும் நடக்கும் பதவியேற்பில் பங்கேற்பார் என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அணி மாறப்போவது யார்?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த காரணமும் சொல்லாமல் திமுகவில் சேர்ந்தார்.
அதன்மூலம் டிடிவி அணியில் இருந்து கட்சித் தாவலுக்கான முதல் புள்ளியை வைத்துள்ளார் செந்தில் பாலாஜி.
''அமமுகவின் வெற்றியை பார்த்து பயந்துள்ள திமுக, எங்கள் அணியில் இருந்து ஆட்களை இழுக்க எண்ணுகிறது. எங்கள் பலம் தேர்தல் நேரத்தில் தெரியும். எங்கள் உறுப்பினர்கள் யாரும் எந்த அணியிலும் சேரமாட்டார்கள் '' என்கிறார் அமமுகவின் செய்தி தொடர்பாளர் வெற்றிவேல்
விரிவாக படிக்க - செந்தில் பாலாஜியை தொடர்ந்து அணி மாறப்போவது யார்?

ஆடு மேய்ப்பவர் உலகின் மிகப் பெரிய டைனோசர்களின் கல்லறையை எப்படி கண்டுபிடித்தார்?

பட மூலாதாரம், Getty Images
தனது இறந்துபோன குடும்பத்தினர் புதைக்கப்பட்டுள்ள கல்லறைக்கு செல்லும் வழக்கமான வழியில் ஒருநாள் செல்லும்போது எதேச்சையாக ஆடு மேய்ப்பவரான டுமங்வ் தைபெயேகா என்பவர் 200 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர்களின் புதைபடிமங்களை தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கண்டறிந்தார்.
"என்னுடைய கொள்ளு தாத்தா-பாட்டிகள் இறந்ததும் இந்த இடத்தில்தான் புதைக்கப்பட்டனர். அவர்களுடைய கல்லறையையும், அது இருக்கும் இடத்தையும் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமை" என்று 54 வயதாகும் டுமங்வ் கூறுகிறார். தனது கண்டுபிடிப்பிற்கு பிறகு அவர் தனது ஊரில் ஹீரோ போல பார்க்கப்படுகிறார்.
விரிவாக படிக்க - டைனோசர்களின் கல்லறையை ஆடு மேய்ப்பவர் கண்டறிந்தது எப்படி?

"என்னை கொல்ல வருபவர்களை நான் தடுக்க மாட்டேன்" - இலங்கை அதிபர் சிறிசேன

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும், பிரதமராக ஏற்கப் போவதில்லை என்ற அரசியல் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
"கடாபியைப் போல் இழுத்துச் சென்று என்னைக் கொல்வதாக ஐக்கிய தேசியக் கட்சிக் காரர்களும், என்.ஜி.ஓ. காரர்களும் எச்சரித்தனர். என்னைக் கொல்ல முயற்சிப்பவர்களுக்கு எனது வீட்டுக் கதவு என்றும் திறந்தே இருக்கிறது'' என சிறிசேன குறிப்பிட்டார்.
விரிவாக படிக்க - "என்னை கொல்ல வருபவர்களை நான் தடுக்க மாட்டேன்" - சிறிசேன

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












