நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது எங்கள் கையில் இல்லை - காஷ்மீர் ஆளுநர்

ஆளுநர் சத்யபால் மலிக்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜுபைர் அஹமத்
    • பதவி, பிபிசி செய்தியாளர், ஸ்ரீநகர்

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் மெல்லத் தணிய ஆரம்பித்துவிட்டாலும், எல்லைப் பகுதியில் குண்டுகளின் ஓசை இன்னமும் அடங்கவில்லை. ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை தடை செய்திருப்பதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் நிலைமை கொந்தளிப்பாகவே இருக்கிறது. பிப்ரவரி 14ஆம் தேதியன்று புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே மோதல் நிகழ்வது தினசரி வாடிக்கையாகிவிட்டது. எல்லைக்கு அருகில் காஷ்மீரின் வடக்கு பகுதியில் வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய என்கவுண்டர் 72 மணி நேரத்திற்கு பிறகே முடிவுக்கு வந்தது. அதில் ஐந்து பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.

புல்வாமா தற்கொலை தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 40 பேர் கொல்லப்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மனக்கசப்பும், அழுத்தங்களும் அதிகரித்தன. இந்தியாவில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போதைய நிலைமை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பிபிசி செய்தியாளர் ஜுபைர் அஹமத், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மலிக்கிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டார். நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறும் நிலையில், காஷ்மீரில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெறுமா என்று கேள்வி எழுப்பினார். 

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

தேர்தல் நடைபெறுவது எங்கள் கையில் இல்லை. தற்போது நிலைமை சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. நாட்டின் எல்லையில் துப்பாக்கிச்சூடு தொடர்கிறது. அத்துடன், பல்வேறு விஷயங்களையும் கருத்தில் வைத்துதான் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். தேர்தல் நடத்துவது உகந்ததாக இருக்கும் என்று ஆணையம் முடிவு செய்தால், தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்காகத் தான் இங்கு கூடுதல் படைகளை வரவழைத்திருக்கிறோம் என்று சத்யபால் மலிக் பதிலளித்துள்ளார்.

மேலும் அவர், தற்போது பி.எஸ்.எஃப் மற்றும் துணை ராணுவப் படைகள் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளன பஞ்சாயத்து மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல்களை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடத்தி முடித்தோம். தேர்தல் ஆணையம் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் நிலையில் இருக்கிறோம் என்றார்.

ஆளுநர் சத்யபால் மலிக்

பட மூலாதாரம், FACEBOOK/SATYAPAL.MALIK.35/BBC

பிபிசி: பிப்ரவரி 14ஆம் தேதியன்று புல்வாமா தற்கொலைத் தாக்குதல், எதாவது மாற்றத்தை உணர்த்துகிறதா? இதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதல் நடக்கும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கவில்லையா?

ஆளுநர் சத்யபால் மலிக்: இதற்கு முன்பும் தற்கொலை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் கடந்த ஆறு மாதங்களில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஏனெனில் தீவிரவாத அமைப்பில் ஆட்கள் சேர்வதும், கல்வீச்சு சம்பவங்களும் கட்டுபடுத்தப்பட்டிருந்தது. மக்களிடையே பதற்ற நிலை குறைந்து இயல்பு நிலை திரும்பத் தொடங்கியிருந்தது. பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெற்றன. எனவே இதுபோன்ற தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இங்கு நிலைமை கட்டுக்குள் வருவது பாகிஸ்தானில் இருப்பவர்களின் அழுத்தத்தை அதிகரித்ததால், பாகிஸ்தானும், ஐ.எஸ்.ஐயும் திட்டத்தை தீட்டின.

பிபிசி: ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு மீது மத்திய அரசு தடை விதித்திருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்? தடையை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வதாக அந்த அமைப்பு சவால் விடுத்திருக்கிறதே? இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஆளுநர்: இந்த அமைப்பு போன்று உலகம் முழுவதும் பல அமைப்புகள், மக்களுக்கு கல்வி மற்றும் உதவிகளை வழங்குவதாக கூறிக்கொண்டு தீவிரவாதத்தை ஊக்குவிக்க நிதியுதவி அளிக்கின்றன. தங்கள் மதரசாக்கள் மூலம் ஜமாத் போன்ற அமைப்புகள் தீவிரவாதத்தை வளர்க்கின்றன.

ஜமாத்-இ-இஸ்லாமி

பட மூலாதாரம், Getty Images

பிபிசி: ஜமாத் அமைப்பின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எதிராக வழக்குகள் பதியப்படவில்லை என்ற நிலையில் எந்த அடிப்படையில் அமைப்பு தடை செய்யப்பட்டு, தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்?

ஆளுநர்: இதைப் பற்றி நிர்வாகமும், பாதுகாப்பு அமைப்புகளும் தான் கருத்து தெரிவிக்க முடியும். ஆனால், கடந்த அரசு, ரஹ்பர்-இ-தாலிம் (அரசு ஆசிரியர் நியமனம் செய்யும் அரசின் திட்டம்) என்ற திட்டத்தின் கீழ், பெருமளவு தீவிரவாதிகளை ஆசிரியர்களாக நியமித்தது. இதனால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் அரசுக்கோ அல்லது அரசமைப்புக்கோ விசுவாசமாக இல்லை. தங்கள் கொள்கைப்படியே செயல்படுகிறார்கள். மெக்பூபா முஃப்தியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆசிரியர் சேர்க்கை பட்டியலைப் பார்த்தால், ஜமாதின் எத்தனை பேர் அதில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

காஷ்மீர் துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், Getty Images

பிபிசி: அமைப்புகளுக்கு தடை விதிப்பது அவற்றை பிரபலமாக்கவே உதவும் என்று நடுநிலை கருத்துக் கொண்ட அறிவுஜீவிகள் கூறுகிறார்களே?

ஆளுநர்: டெல்லியில் 2000 காஷ்மீர் நிபுணர்கள் இருக்கிறார்கள். காஷ்மீரில் பெரும்பாலான அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். அனைவருக்கும் பல்வேறுவிதமான கருத்து இருக்கும். எந்தவொரு அமைப்பையும் தடை செய்வது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதை நான் ஏற்றுக் கொண்டாலும்கூட, ஒரு கட்டத்தில் தீவிரவாத அமைப்பை தடை செய்வது என்பது அவசியமாகிறது. ஜமாத் அமைப்பு இத்துடன் முடிவடைந்துவிடாது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதன் நடவடிக்கைகளுக்கு ஓரளவாவது கடிவாளம் இடப்படும். இதனால் அவர்களின் கருத்தும் சித்தாந்தமும் மாறாது என்றே வைத்துக் கொண்டாலும், தீவிரவாதம் பரவுவதை தடுக்கலாம். தற்போது 15 பேராக இருப்பது நாளை 10 பேராக குறையலாம். ஜன்னத் கிடைக்கும் என்று ஆசைகாட்டி மக்களின் கைகளில் துப்பாக்கியை கொடுக்கும் விஷயம் முடிவுக்கு வரும். அவர்களின் சித்தாந்தங்களிலும் மாற்றம் ஏற்படும். வங்கதேசத்தில் ஜமாத்தின் தலைவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அங்கு யாரும் அதை எதிர்த்து குரல் எழுப்பவில்லை.

மெஹ்பூபா முஃப்தி

பட மூலாதாரம், Getty Images

பிபிசி: ஜமாத் மீது தடை விதித்தது சரியான முடிவு இல்லை என்று தலைவர்கள் கூட கூறுகிறார்களே?

ஆளுநர்: மெஹ்பூபா முஃப்தி கூறுவது எனக்கு வருத்தமளிக்கிறது. ஜமாத் மற்றும் பிரிவினைவாதிகளின் கருத்துக்கும் அவர் தெரிவிக்கும் கருத்துக்கும் வித்தியாசமே இல்லை. அவர்களை நாங்கள் முக்கிய அரசியல் கட்சியாக மதிக்கிறோம். உமர் அப்துல்லாவாவது ஒருசில சமயங்களில் சரியான கருத்தை முன்வைக்கிறார். ஆனால் முஃப்தி சையதின் மகள் மெஹ்பூபா முஃப்தி, கட்டுப்படுத்தாமல் வார்த்தைகளை வெளியிடுகிறார் என்பது வருத்தமாக இருக்கிறது.

பிபிசி: காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுதானே அவர் கோருகிறார்?

ஆளுநர்: காஷ்மீர் விவகாரம் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கபப்டவேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், தேர்தல் நெருங்கும் சமயமாக இருப்பதால் இவர்கள் கண்டபடி பேசுகிறார்கள். இவர்களிடம் விவேகமான நடுநிலையிலான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது.

பிபிசி: பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெறும் "ஆல் அவுட்" நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் உறுதியான அரசியல் நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு என்ன நினைக்கிறது?

ஆளுநர் சத்யபால் மலிக்: போதும்.. இதுதான் கடைசி கேள்வி என்று நீங்கள் கேட்டதற்கு நான் ஏற்கனவே பதிலளித்துவிட்டேன். நான் சொன்ன பதில்களே போதுமானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :