இந்தியா - பாகிஸ்தான் மோதல்: ''பாதுகாப்பு படையின் நம்பிக்கையை சிதைக்கும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்கின்றன''- நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images
உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மோதி நவீன துப்பாக்கிகள் இல்லாதது நமது பாதுகாப்பு படைக்கு பெரும் தடையாக உள்ளது என்றார்.
இந்த பொதுக் கூட்டத்தில் மோதியுடன், உத்தர பிரதேச முதவர் யோகி ஆதித்யநாத் மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி மற்றும் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மோதி, "2009 -2014 இடையிலான காலக்கட்டத்தில் குண்டுகள் துளைக்காத ஜாக்கெட்டுகள் வாங்கப்படவில்லை. ஆனால், இந்த ஆட்சியில் 230,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன" என்றார்.

பட மூலாதாரம், Hindustan Times
ரபேல் தொடர்பாக எதிர்க்கட்சிகளை குற்றஞ்சாட்டிய அவர், "பல ஆண்டுகளாக ரபேல் விவகாரத்தில் பெரும் தடையாக அவர்கள் இருந்தனர். சிலர் அதனை வாங்குவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் நமது முடிவுக்கு ஆதரவாகவே உள்ளது" என்றார் மோதி பேசினார்.
பா.ஜ.க அரசின் பல திட்டங்களை குறிப்பிட்டு பேசிய அவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வை உயர்த்துவதற்காக தாங்கள் உழைப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர், "நாங்கள் தேர்தலில் தோற்று இருக்கலாம், மக்கள் மனதை வென்று இருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்மிரிதி இந்த பகுதிக்காக கடுமையாக பணியாற்றி உள்ளார். வெற்றி பெற்ற ஒருவரை விட இந்த பகுதியின் வளர்ச்சிகாக கடுமையாக உழைத்துள்ளார்." என்றார்.
முன்னதாக பாட்னாவில் பேசிய மோதி இந்திய பாதுகாப்பு படையின் நம்பிக்கையை சிதைக்கும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்கின்றன என்று குற்றஞ்சாட்டினார்.
மோதி பாட்னாவில் நடந்த பிரசார கூட்டத்தில் 'சங்கல்ப் பேரணி'யில் நரேந்திர மோதியும், பிகார் முதல்வர் நித்திஷ் குமாரும் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நித்திஷ் குமாரின் ஒன்றுப்பட்ட ஜனதா தளமும் கூட்டணியில் உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின் பிரதமரும் மோதியும், நித்திஷ் குமாரும் கூட்டாக கலந்து கொள்ளும் அரசியல் நிகழ்வு இது.
உங்கள் காவல்காரர் விழிப்புடன் இருக்கிறார்
இந்தக் கூட்டத்தில் பேசிய மோதி, "பிகாரில் கல்வியறிவை மேம்படுத்துவது, கல்வியறிவற்றவர்கள் யாரும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதும், அனைவருக்கும் சுகாதாரத்தை ஏற்படுத்தித் தருவதும்தான் தேசிய ஜனநாயக் கூட்டணியின் குறிக்கோள்." என்றார்
உங்கள் காவல்காரரை கிண்டல் செய்ய அனைவரும் போட்டி போடுகிறார்கள். ஆனால், நான் உறுதி அளிக்கிறேன், உங்கள் காவல்காரர் மிகவும் விழிப்புடன் இருக்கிறார் என்றார்.

பட மூலாதாரம், Twitter
தீவன ஊழலை குறிப்பிட்டு பேசிய அவர், "தீவனத்தில் பெயரில் நடந்த அனைத்தும் உங்களுக்கு தெரியும். எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் இந்த நாட்டில் பல ஆண்டுகளாக நிலவிவந்த முறைகேடு கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது" என்று பேரணியில் பேசினார்.
சந்தேகிக்கும் எதிர்க்கட்சிகள்
''இந்திய விமானப் படையின் வெற்றிகரமான பாலகோட் தாக்குதலை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நம்மவர்கள் சிலரே இந்த தாக்குதல் குறித்து சந்தேகிக்கின்றனர்'' என எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் அவர், "இப்போது விமானத் தாக்குதல் குறித்து சாட்சிகள் கேட்கின்றனர். ஏன் பாதுகாப்பு படையின் நம்பிக்கையை சிதைக்கும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்கின்றன? ஏன் எதிரிகளுக்கு பலனளிப்பது போல கட்சிகள் அறிக்கைகளை தருகின்றன?" என்றார்.
இந்தப் பேரணியில் முன்னதாக பேசிய நித்திஷ் குமார், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு நன்றி தெரிவித்தார். நமது பாதுகாப்பு படையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தாக மோதியை புகழ்ந்தார்.
பாட்னாவிலிருந்து உத்தர பிரதேச மாநில அமேதியில் நடக்கும் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக சென்றார் மோதி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












