உலக வன உயிர் நாள்: அச்சுறுத்தலில் கடல் உயிர்கள் - ஆபத்தை உண்டாக்கும் மனிதர்கள்

World Wildlife Day

பட மூலாதாரம், Shutterstock

    • எழுதியவர், அகிலா இளஞ்செழியன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உலகில் அழியும் தருவாயில் உள்ள உயிர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உயிர்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துணர்த்தவும் மார்ச் 3ஆம் தேதி உலக வன உயிர்கள் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த வருடத்திற்கான கருப்பொருள் 'நீருக்கு கீழுள்ள வாழ்க்கை - புவிக்கும் மக்களுக்கும்' என ஐ.நா அறிவித்துள்ளது.

மனித செயல்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்ற இடமாக கடலே இருக்கின்றது. உலகின் எந்த மூலையில் தூக்கி வீசப்படுகின்ற கழிவும் கடைசியில் சென்று சேருகின்ற இடம் கடல்தான்.

கடல் என்பது தண்ணீர் மட்டும் அல்ல, கடல் என்பது உயிர். மிகச் சிறிய கடல்வாழ் நுண்ணுயிர்கள் தொடங்கி மிகப்பெரிய திமிங்கலம் வரை பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் இடம். கடலை நீல நிறக் காடு என்று கூறலாம்.

World Wildlife Day

பட மூலாதாரம், Getty Images

ஆனால் , சமீப காலமாக கடல்வாழ் உயிர்கள் மிகப் பெரும் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன.பல கடல்வாழ் உயினங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன, எனவே, இந்த வருடம் வன உயிர்கள் தினம், கடல் உயிர்ச் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடலியல் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் ராஜாவிடம் பேசிய பொழுது, "முன்பு கடலோரப்பகுதிகளில் மட்டும் மாசுகள் அதிகம் கலந்திருப்பதாகக் கூறினர். ஆனால், இப்போது கடலின் அடியாழம் வரை சூழல் மாசுகள் சென்று சேர்ந்துவிட்டது. கடலை சென்றடையும் மாசுகள் பெரும்பாலும் உயிர்ப்பொருளற்ற மாசாக இருப்பதால் அது நீர்த்து போகும் தன்மையுடையவனாக இல்லை. மேலும், பெருவெள்ளம் ஏற்படுகின்ற காலங்களில் நகரங்களில் உள்ள கழிவுகள் எல்லாம் அடித்து சென்று கடலில் கலந்து விடுகின்றது," என்கிறார்.

World Wildlife Day

பட மூலாதாரம், AFP

கடலின் மிகப்பெரிய எதிரி நுண் பிளாஸ்டிக் துகள்கள். தெற்கு பசிபிக் கடலில் 2.5 சதுர கிலோ மீட்டருக்கு பிளாஸ்டிக் தீவு ஒன்றே உள்ளது என்கின்றனர். இந்த பிளாஸ்டிக் சிறிது சிறிதாக உருவ மாறுபாடு அடைந்து மைக்ரோ பிளாஸ்டிக் அல்லது நானோ பிளாஸ்டிக் ஆக மாறும் பொழுது , கடலின் மேற்பரப்பு நீரில் மிதக்க ஆரம்பிக்கின்றன. அதே பரப்பில்தான் மிதவை வாழிகள் வாழ்கின்றன.

எனவே, இந்த பிளாஸ்டிக் துகள்களால் அவற்றின் ஒளிச்சேர்க்கை தடையுறுகிறது. இதனால் கடல் வாழ் உயிர்களின் உணவுச் சங்கிலி பெரிதும் பாதிப்படைகிறது.

கடலோர பகுதிகளில்தான் இனப்பெருக்கம் தொடங்குகிறது. மேலும், கடல் வாழ் உயிரினங்களுக்குத் தேவையான உணவும் இங்குதான் பெரும்பாலும் உற்பத்தியாகிறது. ஆனால், இந்த இடத்தை நாம் முழுவதுமாக மாசுபடுத்தி விட்டோம்.

கடலை ஒரு சுற்றுலா செல்லும் இடமாகவும், கேளிக்கைக்குரிய இடமாகவும் மட்டும் பார்க்கின்ற நாம், கடற்கரைகளில் ஏராளமான குப்பைகளை தூக்கி எறிகின்றோம். நாம் தூக்கி எறிகின்ற பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் மிதக்கும் பொழுது அதனை தனக்குத் தேவையான உணவு என எண்ணி அந்த உயிர்கள் சாப்பிட்டு விடுவதால், அவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன. இதே நிலை நீடித்தால் 2050ல் அனைத்து கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து விடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

World Wildlife Day

பட மூலாதாரம், AFP

கடலில் சூழல் மாசுபாட்டினை சரிசெய்வது எளிதல்ல. ஒரு துளி நீருக்கு அண்டார்டிக்கில் இருந்து ஆர்டிக் வரை தொடர்பு உண்டு என்பர். கடலில் மிக வேகமாக மாசு பரவிவிடும்.

கடல் மாசுபாடு மேலாண்மை செய்ய இயலாத அளவு அதிகமாக இருப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன என்று பல ஆய்வுக்கட்டுரைகள் கூறுகின்றன. மன்னார் வளைகுடா பகுதிகளில் கடற்பசுக்கள் அடிக்கடி இறந்து கரை ஒதுங்குகின்றன. திமிங்கலங்கள் மற்றும் சுறா மீன்கள் அதிகமாக அழிந்து வருகின்றன. ஏனெனில், இதனுடைய உணவுச் சங்கிலி மனிதர்களால் ஆபத்துக்கு உள்ளாகிவிட்டது.

கடலோர பகுதிகளில் விழிப்புணர்வு கொடுத்தால் மட்டும் இதனை மாற்றி விடலாம் என்று நினைத்தால் அது தவறு. நம்மைக் காட்டிலும் மீனவர்களுக்கு கடலைப் பற்றிய அறிவியல் அறிவு அதிகமாக இருக்கும். அவர்களின் வாழ்வாதாரமே கடல்தான். எனவே, அதனை அவர்கள் அழிக்க நினைக்க மாட்டார்கள்.

உலகில் கடல் உயிர் சூழல்தான் மிகப்பெரிய உயிர் சூழல். தரைப்பகுதியில், நன்னீர் பகுதியில் வாழ்கின்ற உயிர்களைக் காட்டிலும் கடல்வாழ் உயிர்கள்தான் மூதாதையர்கள். கடல் உயிர் சூழல்தான், மற்ற உயிர் சூழலுக்கு அடிப்படையாக உள்ளது. இங்கு ஏற்படும் அழிவு நமது வாழ்விலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை உணர்ந்து செயல்பட வேண்டும்," என்றார் ராஜா.

World Wildlife Day

பட மூலாதாரம், Google

அமெரிக்க பள்ளி மாணவி டேகன் யார்ட்லி தனது நண்பர்களுடன் உலக வன உயிர்கள் நாளுக்காக ஒரு காணொளியை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

அதில், நமது கடல்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. மனிதர்களின் தோற்றத்திற்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னரே நீருக்கு அடியில் உயிர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றன.

ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் மனிதர்கள் இந்த கடல் உயிர் சூழலை பெரும் ஆபத்துக்கு உள்ளாக்கி விட்டோம். கடல் நாம் சுவாசிக்க காற்றினை சுத்தப்படுத்தி தருகிறது. சுமார் 70 சதவீத ஆக்ஸிஜன் கடலால்தான் கிடைக்கின்றது. மனிதர்களுக்கு உணவினைத் தருகின்றது, பருவ நிலையினை சீராக்குகிறது, பல லட்சம் மனிதர்களுக்கு வாழ்வளிக்கிறது.

ஆனால், நாம் பதிலுக்கு என்ன செய்து இருக்கின்றோம். உலகின் பல இடங்களில் சரிசெய்யவே இயலாத அளவுக்கு கடல் பாதிப்பு அடைந்து இருக்கின்றது. கடந்த 40 வருடங்களில் புவியில் வாழ்ந்த பாதி அளவுக்கும் அதிகமான வன உயிர்களை நாம் தொலைத்து இருக்கின்றோம், என அந்தக் காணொளியில் டேகன் யார்ட்லி தெரிவித்துள்ளார்.

நம் அனைவருக்கும் இதனை புரிந்து கொள்ள வலிமை உள்ளது, அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டிய கடமையும் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது என அந்தக் காணொளியில் பேசும் சிறுவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :