பாலகோட் விமான தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியாது: இந்திய தளபதி

பட மூலாதாரம், DD
இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் எல்லை தாண்டி விமானத் தாக்குதல் நடத்திய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்திய முப்படைகளின் பிரதிநிதிகள், எல்லையில் பதற்றம் தணியும் என்று கூறுவதைத் தவிர்த்தனர்.
அதைப் போல வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானி அபிநந்தனை அமைதி நிமித்தம் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதையும் அவர்கள் தவிர்த்தனர்.
அதைப் போல, இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் பாலகோட்டில், ஜெய்ஷ்-இ-மொஹம்மது அமைப்பின் தளத்தின் மீது நடத்தியதாக கூறப்பட்ட தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர், விரும்பிய இலக்கு தாக்கப்பட்டது. ஆனால், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்றார்.
பாகிஸ்தான் விமானப்படை இந்திய விமான தளங்களை தாக்க முயற்சித்தது. ஆனால், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கபூர் மேலும் தெரிவித்தார்.
அபிநந்தன் திரும்புவது பற்றி கேட்டபோது, "மகிழ்ச்சி" அடைவதாக அவர் கூறினார். ஆனால், அமைதிக்கான நல்லெண்ண நடவடிக்கையாக அவரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளதுபற்றி கேட்டபோது, அவர், "ஜெனிவா ஒப்பந்தத்தின்படியே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்".
பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை வழங்கியது. முதலில் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தினோம், மூன்று பேரை கைது செய்தோம் என்றது. பின் இரண்டு பேர் என்றது. இறுதியில் ஒரு விமானி மட்டுமே தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்தது என்றார் அவர்.

பட மூலாதாரம், TWITTER.COM/OFFICIALDGISPR
"இந்திய கப்பற்படை தயார்நிலையில் உள்ளது. இந்திய மக்களின் பாதுகாப்புக்காக ராணுவம் மற்றும் விமானப்படையுடன் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்" என்று ரியர் அட்மிரல் டல்பிர் சிங் குஜ்ரால் தெரிவித்தார்.
ராணுவத்தின் மேஜர் ஜெனரல் சுரேந்தர் சிங் பஹால், விமானப்படையின் வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர் மற்றும் கப்பற்படையின் ரியர் அட்மிரல் டல்பிர் சிங் குஜரால் ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் கும்பலாக நுழைந்து ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்க முயன்றதாகவும், இந்திய விமானங்கள் பதிலடி தந்ததாகவும் கூறிய கபூர், பாகிஸ்தான் அமெரிக்கத் தயாரிப்பான F16 ரக விமானங்களை தாக்குதலில் பயன்படுத்தவில்லை என்று மறுத்தது. ஆனால், F16 ரக விமானங்களை பயன்படுத்தியதற்கான டிஜிடல் பதிவுகள் இருப்பதாக கபூர் குறிப்பிட்டார்.
அத்துடன், புதன்கிழமை நடந்த மோதலில் இந்திய விமானம் மட்டுமில்லாமல் பாகிஸ்தானின் F16 ரக விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கு ஆதாரமாக உடைந்த அம்ராம் ஏவுகணையின் உடைந்த பாகம் ஒன்றையும் அவர் செய்தியாளர்களிடம் காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்:
- பாகிஸ்தானில் வைரலாகப் பரவுகிறது வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் போலி புகைப்படங்கள்
- ‘போர் வேண்டாம்’: இணையத்தில் டிரெண்டாகும் #SayNoToWar ஹாஷ்டாக்
- LIVE: இந்திய விமானப்படை ஜெய்ஷ்- இ-முகமது முகாம் மீது தாக்குதல் நடத்தியது எப்படி?
- இந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் சொல்வதென்ன? - BBC EXCLUSIVE
- இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திய பாலகோட் எங்கிருக்கிறது?
- இந்திய விமானப் படை தாக்குதல் குறித்து என்ன சொல்கின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்?
- இந்தியா விமான படை தாக்குதல்: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன?
- பாலகோட் தாக்குதல்: வரவேற்கிறது புல்வாமாவில் இறந்த சுப்ரமணியன் குடும்பம்
- வித்தியாசமான பதிலடி வரப்போகிறது: இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்
- பாலகோட் விமான தாக்குதல்: பாகிஸ்தானிலிருந்து இந்திய விமானங்கள் எப்படி வெளியேறின?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












