ஹைதராபாத்தில் திருடனின் குழந்தைக்கு 'தாய்ப்பால்' தந்த பெண் காவலர்

பிரியங்கா

பட மூலாதாரம், Priyanka

ஹைதராபாத்தில் பேகம்பெட் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் பெண் காவலரான பிரியங்கா, அப்சல் குன்ஜ் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் தனது கணவனிடமிருந்து அலைபேசி வாயிலாக அழைப்பு வந்தவுடன் கைவிடப்பட்ட ஓர் குழந்தைக்கு 'தாய்ப்பால்' அதாவது முலைப்பால் கொடுத்திருக்கிறார்.

காணொளிக் குறிப்பு, தாய்ப்பால் ஊட்டும்போது குழந்தைகள் உயிரிழப்பது ஏன்?

இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பிபிசி தெலுங்கு சேவையைச் சேர்ந்த வேணுகோபால் பொல்லம்பள்ளி, பிரியங்காவிடம் அன்று இரவு நடந்தது என்ன என்பது குறித்து பேசியிருக்கிறார்.

''அப்போது இரவு ஒரு மணி இருக்கும். அப்சல் குன்ஜ் காவல்நிலையத்தில் இருந்து எனது கணவன் என்னை அழைத்தார். அவர் பேசும்போது பின்னணியில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே, 'இந்த நேரத்தில் அழுவது யார்?' என எனது கணவனிடம் கேட்டேன்.

யாரோ ஒருவர் ஒன்றரை மாத வயது குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும், ஒரு இளைஞர் அக்குழந்தையை காவல்நிலையத்துக்கு கொண்டு வந்ததாகவும் எனது கணவர் என்னிடம் கூறினார்.

ஒரு எட்டு மாத குழந்தையின் தாயாக இருக்கும் என்னால் அக்குழந்தையின் வேதனையை புரிந்துகொள்ள முடிந்தது. இதனால் உடனடியாக நான் எனது குழந்தையை என் அம்மாவிடம் விட்டுவிட்டு என் கணவர் பணிபுரியும் காவல்நிலையத்துக்குச் சென்றேன்.

நான் அங்கே சென்றடைந்த சமயத்திலும் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. அவளுக்கு சரியான உடை இல்லாததால் குளிர் காரணமாக அவதிப்பட்டிருந்தாள். என்னால் அந்நிலையில் அச்சிறு பிஞ்சுக் குழந்தையை பார்க்க முடியவில்லை, என் கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே நான் கம்பிளி உடை உடை அணிவித்து குழந்தைக்கு முலைப்பால் கொடுக்கத் துவங்கினேன்'' என்கிறார் பிரியங்கா.

'' அக்குழந்தை பசியால் அழுவதாக நான் சந்தேகப்பட்டேன். அவள் சுமார் 40 நிமிடங்களுக்கு என்னை விட்டு நீங்கவில்லை'' என்ற பிரியங்கா தான் மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்ததாக கூறுகிறார்.

'' அவள் என்னிடம் பால் குடிக்கத்துவங்கிய பிறகு, முழுமையாக வயிறு நிறைந்ததும்தான் தனது கண்களை திறந்து அழுகையை முழுமையாக நிறுத்தினாள். அதன்பிறகு நாங்கள் குழந்தையை உஸ்மானியா மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் விட்டுவிட்டு நாங்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டோம்'' என விவரிக்கிறார் பிரியங்கா.

பிரியங்கா

பட மூலாதாரம், Priyanka

என்ன நடந்தது?

ஐதராபாத்தின் பழைய நகரத்தில் அப்சல் குன்ஜ் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிகிறார் ரவீந்திரா.

பிபிசியிடம் பேசிய அவர், '' கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி, இரவு 11.30 மணியளவில் யாகத் புரா பகுதியில் இருந்து ஒரு இளைஞர் கைகளில் சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு காவல் நிலையம் வந்தார். புர்கா அணிந்த ஒரு பெண் தனது கைகளில் குழந்தையை திணித்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கிறார்.

அதன் பிறகு அக்குழந்தை அழத்துவங்கியிருக்கிறது. ஆனால் அதன் தாய் திரும்ப வரவே இல்லை. இதையடுத்து அந்த இளைஞர் தனது வீட்டுக்கு குழந்தையை எடுத்துச் சென்று பாக்கெட் பால் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அக்குழந்தை அதனை குடிக்க மறுத்து தொடர்ந்து அழுதுள்ளது. இதையடுத்து அவர் காவலநிலையத்துக்கு குழந்தையை எடுத்துவந்துள்ளார்'' என விவரித்தார்.

'' காவல்நிலையத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் வீட்டுக்கு அலைபேசியில் தொடர்புகொண்டேன். நிலவரத்தை அறிந்த என் மனைவி காவல் நிலையத்துக்கே வந்து முலைப்பால் கொடுத்துவிட்டுச் சென்றார்'' என கூறுகிறார் ரவீந்திரா.

பிரியங்கா

பட மூலாதாரம், Ani

யார் இந்தப் பெண் குழந்தை?

இந்த குழந்தை யாருடையது என அறிய காவல்துறை விசாரணையில் இறங்கியபோது, அக்குழந்தையின் தந்தை ஃபெரோஸ் கான் எனும் ஒரு நபர் திருட்டு குற்றச்சாட்டுக்காக சன்சல்குண்டா சிறையில் இருப்பது தெரியவந்தது.

ஆல்கஹால் கலந்த பானம் அருந்திய ஃபெரோஸ் மனைவி முன்பின் அறியாத நபரிடம் குழந்தையை கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டது காவல்துறைக்குத் தெரியவந்தது.

உஸ்மானியா மருத்துவமனைக்கு அருகே ஒரு குடிசையில் அப்பெண் வசித்துவருவது தெரியவந்தது. காவல்துறை குழந்தையை அதன் பெற்றோர்களிடம் ஒப்படைத்தது. மேலும் குழந்தையின் உடல்நலன் குறித்து காவல் நிலையத்தில் தினமும் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

காவலர்களின் மனிதநேயமிக்க செயலுக்கு ஹைதராபாத் காவல்துறை ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: