மும்பை தாக்குதல்: கசாபை அடையாளம் காட்டியவருக்கு இன்னமும் வெகுமதி தராத அரசு

இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தினமலர்: மும்பை தாக்குதல்: அடையாளம் காட்டிய பெண்ணுக்கு 10 ஆண்டாகியும் வெகுமதி கொடுக்காத அரசாங்கம்
மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடத்திய, பாக்., பயங்கரவாதிகளில் ஒருவனான, அஜ்மல் கசாபை, நீதிமன்றத்தில் அடையாளம் காட்டிய பெண், 10 ஆண்டுகள் கடந்த பின்னும், அரசு உதவி கிடைக்காமல், பரிதாப நிலையில் உள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
"கடந்த, 2008, நவ., 26ல், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை நகருக்குள், பாக்.,கில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள், நுாற்றுக் கணக்கானோரை கொன்றனர்.மும்பை ரயில்வே ஸ்டேஷனில், பயங்கரவாதி அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்டதில், 9 வயது சிறுமி, தேவிகா ரோதவான், காலில் குண்டு பாய்ந்து விழுந்தாள். தீவிர சிகிச்சைக்கு பின், அவள் உயிர் பிழைத்தாள்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில், அஜ்மல் கசாபை தவிர, மற்றவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றனர். கசாப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, நேரில் பார்த்த சாட்சியாக, ஊன்றுகோல் உதவியுடன், தட்டு தடுமாறி நடந்து சென்று, தேவிகா சாட்சி கூறினாள்.
அவள் குடும்பத்திற்கு வீடு உட்பட பல உதவிகளை வழங்குவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது, 19 வயதாகும் தேவிகாவுக்கு, அரசிடமிருந்து, இன்னும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.தேவிகா கூறுகையில், ''அஜ்மல் பற்றி சாட்சி கூறியதால், பள்ளியில் சக மாணவியரால் நான் புறக்கணிக்கப்பட்டேன். அரசு கூறிய படி, வீடு உட்பட எந்த உதவியும் அளிக்கப் படவில்லை'' என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் இந்து - "ராமர் கோயில் கட்டும் தேதி ஜனவரியில் அறிவிப்பு"

பட மூலாதாரம், Hindustan Times
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதி பற்றி, வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கும்பமேளா நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும் என நிர்மோகி அகாரா அமைப்பின் மூத்த தலைவர் ராம்ஜி தாஸ் தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
"அயோத்தியில் நேற்று விஎச்பி சார்பில் 'தர்ம சபை' கூட்டம் நடைபெற்றது. விஎச்பி துணைத்தலைவர் சம்பத் ராய் குத்துவிளக்கேற்றி தர்ம சபை கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது, சம்பத் ராய் கூறும்போது, "ராமர் கோயில் கட்டுவதற்கு இங்குள்ள நிலம் முழுவதும் வேண்டும். நிலத்தை பிரித்துக் கொள்ள வேண்டும் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோயில் கட்டுவதற்கான பணியை தாமதப்படுத்துவது நல்லதல்ல" என்றார்.
இக்கூட்டத்தில் நிர்மோகி அகாரா அமைப்பின் மூத்த தலைவர் ராம்ஜி தாஸ் பேசும்போது, "பிர யாக்ராஜ் (அலகாபாத்) நகரில் 2019 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கும்பமேளாவில் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதி அறிவிக்கப் படும். இதற்கு இன்னும் சில நாட்கள்தான் உள்ளன. அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என்றார்.
ராம் ஜென்மபூமி நியாஸ் தலைவர் நிரித்ய கோபால்தாஸ் பேசும்போது, "நீதிமன்றத்தை நாங்கள் மதிக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மீது நம்பிக்கை வைத்துள் ளோம். ராமர் கோயில் கட்டுவதற் கான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

தினத்தந்தி: "பள்ளி மாணவர்களின் புத்தகப்பை எடை எவ்வளவு?"

பட மூலாதாரம், Getty Images
1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும்? என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்தியாவில் பள்ளி மாணவர்கள் குறைந்த பட்சமாக 6.2 கிலோ முதல் அதிகபட்சமாக 15 கிலோ எடை வரை புத்தகப்பையை சுமந்து செல்வதாகவும், அவர்களின் உடல் எடையில் 30 முதல் 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியாக புத்தகப்பையை சுமந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, மாணவ-மாணவிகளின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும்? பாடங்கள் பயிற்றுவித்தலை ஒழுங்குபடுத்துவது ஆகியவை தொடர்பான வழிமுறைகளை உருவாக்கி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது.
1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 1½ கிலோ, 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எடை 2 முதல் 3 கிலோ, 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 4 கிலோ, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை எடை 4½ கிலோ, 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்கக்கூடாது" என்று அந்த சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'ஆஸ்திரேலியாவை விட நாங்கள் திறமை வாய்ந்தவர்கள்' - விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images
'ஒட்டு மொத்த திறமை என்று கணக்கிட்டால் ஆஸ்திரேலியாவைவிட இந்திய அணி திறமை வாய்ந்தது' என்று இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளது குறித்த செய்தியை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற சமன் செய்தது. இந்த போட்டியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய கோலி இதனை தெரிவித்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. குருனால் பாண்ட்யா 4 விக்கெட்டுக்களை எடுத்தார்.
பின்னர் பேட் செய்த இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. 41 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த கோலியின் ஆட்டம் பெரிதும் உதவியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












