பழங்குடிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கரின் உடலை பெறுவதில் தொடர்ந்து சிக்கல்

பட மூலாதாரம், Facebook
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
பழங்குடிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கரின் உடலை பெறுவதில் தொடர்ந்து சிக்கல்
இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவு கூட்டத்தில் ஒன்றான வடக்கு சென்டினல் தீவிற்கு வெளியுலகுடன் தொடர்பில்லாத பழங்குடிகளை சந்திப்பதற்கு சென்று கொல்லப்பட்டதாக அறியப்படும் அமெரிக்க மதபோதகரின் உடலை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதபோதகரின் உடலை மீட்பதற்காக சனிக்கிழமையன்று வடக்கு சென்டினல் தீவிற்கு காவல்துறையினர் படகில் சென்றபோது, பழங்குடிகளை கண்டனர். ஆனால், பழங்குடிகளுடனான மோதலை தவிர்க்கும் வகையில் அங்கிருந்து பின்வாங்கிவிட்டனர்.
இந்த பழங்குடியினரை சந்தித்து அவர்களுக்கு கிறிஸ்துவ மதம் குறித்து பிரசங்கம் செய்ய ஜான் ஆலன் என்ற அந்த இளைஞர் விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகரிகத்தில் இருந்து அப்பாற்பட்டு வாழும் சென்டினல் தீவு பழங்குடியினர் 50ல் இருந்து 150 எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியாது.

கண்ணீர் புகைக்குண்டு வீசும் அமெரிக்கா; குண்டுக்கட்டாக வெளியேற்றும் மெக்ஸிகோ - தவிக்கும் குடியேறிகள்

பட மூலாதாரம், Reuters
தனது நாட்டின் எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற கிட்டத்தட்ட 500 குடியேறிகளை நாடு கடத்த உள்ளதாக மெக்ஸிகோவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோ எல்லை வழியே அமெரிக்காவுக்குள் 'வன்முறையுடனும்', 'சட்டவிரோதமாகவும்' ஞாயிற்றுக்கிழமையன்று நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான குடியேறிகளை தங்களது படைகள் சுற்றி வளைத்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாட்டு எல்லையை நிர்ணயிக்கும் திஜுவானா என்ற நகரத்திற்கு அருகிலுள்ள வேலியை நோக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் ஓடும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மெக்ஸிகோ வழியாக தங்களது எல்லைப்பகுதியை நோக்கி வருபவர்களை நோக்கி அமெரிக்க ராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி துரத்தினர்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது ரசாயன குண்டு தாக்குதல்

பட மூலாதாரம், AFP
சிரியாவின் அரசு கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போ நகரத்தில் ரசாயன தாக்குதல் நடத்தியதாக தான் கருதும் கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல்களை ரஷ்யா தொடுத்துள்ளது.
சிரியா மற்றும் அதன் கூட்டாளியான ரஷ்யாவின் விமானப்படைகள் நச்சு காற்று நிரம்பிய குண்டுகளை சனிக்கிழமையன்று கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் பகுதியில் வீசியதில் 100 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூச்சுவிடுவதற்கு சிரமப்படும் அலெப்போ வாசிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தங்களது மீதான குற்றச்சாட்டுகளுக்கு கிளர்ச்சியாளர்கள் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

யுக்ரேனின் கப்பல்களை கைப்பற்றிய ரஷ்யா

பட மூலாதாரம், Photoshot
கிரிமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்கிடையேயான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு நாடுகளும் ஒன்றையொன்று பழி சுமத்தியுள்ளன.
பிற செய்திகள்:
- 'என் வாழ்நாளில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை' - சிறிசேன
- விஸ்வரூபம் எடுக்கும் ராமர் கோயில் விவகாரம்: அயோத்தியில் திரண்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள்
- முகப்பருவுக்கு உணவு முறையை குறை சொல்வதை நிறுத்தும் காலம் வந்துவிட்டதா?
- ஏ.டி.எம் முன் நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் மீண்டும் வருமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












