என் குழந்தையை ஏரியில் வீசியது ஏன்? - தாயின் வாக்குமூலம்

பட மூலாதாரம், Cristian Sabau
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: 'பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே ஏரியில் வீசி கொலை'
வேளச்சேரியில், வீட்டில் பெற்றோருடன் தூங்கிய குழந்தை மாயமானதாக கூறப்பட்ட வழக்கில் பெற்ற தாயே, தனது குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தை கடத்தப்பட்டதாக நாடகம் ஆடிய அவரை போலீசார் கைது செய்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"சென்னை வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் 5-வது தெருவில் வசிப்பவர் வெங்கண்ணா (வயது 30). இவர், தரமணியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உமா (26).
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 35 நாட்களுக்கு முன்பு சர்விக் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர்களுடன் உமாவின் தாய் மற்றும் தங்கையும் வசித்து வருகின்றனர்.
கடந்த 5-ந் தேதி இரவு பெற்றோருடன் படுத்து இருந்த பச்சிளம் குழந்தை, மறுநாள் காலை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், வீடு மற்றும் அக்கம்பக்கம் முழுவதும் தேடியும் குழந்தையை காணவில்லை. காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்திச்சென்றிருக்கலாம் என சந்தேகித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் அடையாறு துணை கமிஷனர் சேஷஷாங் சாய், கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
நள்ளிரவில் நைட்டி அணிந்த பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் அந்த வழியாக நடந்து சென்றதை கண்டதாக ரோந்து போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர்.
அதில் குழந்தையுடன் சென்ற பெண்ணின் உருவம் உமாவைப் போன்று இருந்தது. இதனால் உமாவின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், தனது குழந்தையை ஏரியில் வீசி கொன்று விட்டு, கடத்தப்பட்டதாக நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து உமாவை போலீசார் கைது செய்தனர்." என்கிறது அந்த செய்தி.
"குழந்தை பிறந்ததில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும்போது எனக்கு மார்பகத்தில் கடுமையான வலி ஏற்பட்டு வந்தது. இதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. மருத்துவமனையில் காண்பித்து மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்று பயந்தோம்.
குழந்தையை வேறு யாருக்காவது தத்து கொடுத்துவிடலாம் என்று கூறினேன். அதை எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் ஏற்காததால் மனமுடைந்து இருந்தேன். கடுமையான வலியால் துடிதுடித்தேன். ஆனால் என் வேதனையை குடும்பத்தினர் புரிந்து கொள்ளவில்லை.
குழந்தைக்கு பால் கொடுக்கமுடியாமல் மனக்குழப்பத்தில் இருந்த நான், குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். 5-ந் தேதி இரவு வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிய பிறகு குழந்தையை தூக்கிச்சென்று பாலித்தீன் பையில் போட்டு அருகில் உள்ள ஏரியில் வீசினேன்." என்று அவர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'இடைத்தேர்தலை தள்ளிப்போடாதீர்கள்'
வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி திருவாருர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தள்ளிப்போட வேண்டுமென தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
முன்பே 2016 நவம்பர் மற்றும் 2017 டிசம்பர் ஆகிய காலக்கட்டங்களில் இடைத்தேர்தல் நடந்துள்ளது. இப்போது தேர்தலை தள்ளிப்போட வேண்டிய அவசியமென்ன? இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: 'முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த கோயில் தந்திரிகள் மறுப்பு'
சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என உறுதி அளித்தால்தான் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவோம் என கோயிலின் தந்திரிகள் (தலைமை அர்ச்சகர்கள்) குடும்பத் தினர் நிபந்தனை விதித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வலுத்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு காண கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக, பந்தளம் மன்னர் மற்றும் கோயில் தந்திரிகள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பினராயி விஜயன் விரும்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, 8-ம் தேதி (இன்று) திருவனந்தபுரத்துக்கு நேரில் வருமாறு அந்த குடும்பத் தினருக்கு அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமணி: 'மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு'
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. இதற்கிடையே இந்த தேர்தல் தொடர்பாக, ஏபிபி செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது.

பட மூலாதாரம், Getty Images
அதில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 142 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதேசமயம், பாஜக 56 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக 36 சதவீத வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சச்சின் பைல்ட்டுக்கு வாக்களித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 122 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கரில் 47 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கலில் முறையே 108 மற்றும் 40 இடங்களை பாஜக கைப்பற்றும் என்று கணிக்கப்படுகிறது.
வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் 42.2 சதவீதம் மற்றும் பாஜக 41.5 சதவீத வாக்குகள் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் 38.9 சதவீதம் மற்றும் 38.2 சதவீத வாக்குகள் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் ஆதிக்கத்தை செலுத்துகிறது. அங்கு, காங்கிரஸ் கட்சிக்கு 49.9 சதவீத மக்கள் வாக்களிப்பர் என்றும் பாஜகவுக்கு 34.3 சதவீத மக்கள் வாக்களிப்பர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி உறுதியாக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையிலான வாக்கு சதவீதம் மிகச் சிறிய அளவிலேயே வித்தியாசம் இருப்பதால் தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கான வாய்ப்புகள் கூட இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பு வெளிப்படுத்துகிறது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
ஆனால் முதல்வரை சந்திக்கப் போவதில்லை என பந்தளம் மன்னர் மற்றும் தந்திரிகள் குடும்பத்தினர் நேற்று தெரிவித்தனர். முன்னதாக, அவர்கள் 'நாயர் சர்வீஸ் சொசைட்டி' (என்எஸ்எஸ்) பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் நாயரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசி உள்ளனர். நாயரின் அறிவுரைப்படியே முதல்வரை சந்திக்க அந்தக் குடும்பத்தினர் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












