செல்ஃபி எடுக்கும்போது மரணம் அதிகமாக இருப்பது எந்த நாட்டில்?

பட மூலாதாரம், Getty Images
தங்களை செல்ஃபி எடுக்கும் முயற்சிகளின்போது அக்டோபர் 2011 முதல் நவம்பர் 2017 வரை உலகெங்கும் 259 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அளவிலான சமூக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வாளர்கள் செல்ஃபி மரணங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ள இடங்களில் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வுகளில் இறந்தவர்களில் பெரும்பாலும் 20 முதல் 29 வயதினராக உள்ளனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது. அடுத்தபடியாக 10 முதல் 19 வயத்துள்ளவர்கள் இறந்துள்ளனர்.
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலகட்டத்தில், உலகெங்கும் செல்ஃபி எடுக்கும் முயற்சிகளில் இறந்தவர்களில் சுமார் 50% பேர் இந்தியர்கள் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
உயரமான கட்டடங்கள் மற்றும் மலைகளில் இருந்து கீழே விழுதல், பயணங்களின்போது செல்ஃபி எடுத்ததால் கீழே விழுதல், நீரில் மூழ்குதல், மின்சாரம் தாக்கி உயிரிழத்தல் ஆகியன இந்த மரணங்களுக்குக் காரணமாக உள்ளன.
செல்ஃபி எடுக்கும்போது விலங்குகள் தாக்கியதால் இறந்தவர்கள், தவறுதலாக துப்பாக்கி விசையை அழுத்தியது ஆகியவையும் செல்ஃபி மரணங்களுக்கு காரணமாக உள்ளன.
பெரும்பாலும் ஊடகங்கள் மூலம் வெளியான செய்திகள் மூலம் ஆய்வாளர்கள் இந்தத் தரவுகளைத் திரட்டியுள்ளனர்.

பட மூலாதாரம், WILDLIFE PERSONALITIES/DAVID J SLATER
இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் செல்ஃபி எடுக்கும்போது அதிகம்பேர் இறந்துள்ளனர்.
உலகங்கும் செல்ஃபி எடுக்கும்போது இறந்தவர்களில் 72.5% பேர் ஆண்கள் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2011இல் வெறும் மூன்றாக இருந்த செல்ஃபி மரணங்களின் எண்ணிக்கை 2016இல் 98 மற்றும் 2017இல் 93 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
பல மரணங்களில், இறப்புக்கான காரணமாக செல்ஃபி எடுத்ததை அறிவிக்கப்படவில்லை என்பதால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












