நீதிபதி கே.எம். ஜோசப் நியமனம் - மத்திய அரசு முறையின்றி தலையிட்டதா?
- எழுதியவர், ஜெ.வெங்கடேசன்
- பதவி, சட்ட விவகார செய்தியாளர்
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவது தொடர்பான ஏழு மாத கால சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை நீதிபதி கே.எம் ஜோசப் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.

பட மூலாதாரம், PTI
அவரோடு இன்னும் இரண்டு நீதிபதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மிகவும் ஏதிர்பார்க்கப்பட்ட இந்தப் பதவியேற்பு நிகழ்வு, தலைமை நீதிபதியின் நீதிமன்றமான நீதிமன்றம் 1-இல் நடைபெற்றது.
பல வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் நுழைய முடியாத வகையில், அவர்கள் பதவியேற்ற நீதிமன்றம் மக்களால் நிறைந்திருந்தது.
கடந்த வாரம் இந்திய குடியரசு தலைவரால் கையெழுத்திடப்பட்ட நியமன ஆவணத்தில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் வினீத் சரன் ஆகியோரின் பெயர்கள் முதல் இரண்டு இடங்களில் இருந்ததால் நீதிபதி கே. எம். ஜோசப்புக்கு முன்னதாக அவர்கள் பதவியேற்றனர்.
கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி இந்த மூன்று நீதிபதிகளின் நியமனத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், சர்ச்சைக்குரிய வகையில், இந்த நீதிபதிகள் பதவியேற்கும் வரிசையில், நீதிபதி கே. எம். ஜோசபை மூன்றாவதாக குறிப்பிட்டு மத்திய அரசு தகவல் வெளியிட்டிருந்தது.
பிரபலமான கே.எம். ஜோசப்
உத்தராகண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜோசப், 2016ம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவரின் ஆட்சியை கொண்டு வருவதற்கு எதிராக தீர்ப்பளித்த பின்னர் ஏதாவது ஒரு காரணத்திற்காக தேசிய அளவில் தலைப்பு செய்தியாக வலம்வந்தார்.
முதலில், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு தலைமை நீதிபதியாக ஜோசப்பை இடம்மாற்றம் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் தீர்மானப்படி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டுமென கே. எம். ஜோசப்பின் பெயர் முதல்முறையாக பரிந்துரை செய்யப்பட்டது.
அனைத்திந்திய அளவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒருங்கிணைந்த மூப்புப்பட்டியலில் 45வதாக அவரது பெயர் இடம்பெற்றிருந்தது.
2004ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே. எம். ஜோசப், 2014ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார்.
2023ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக கே. எம். ஜோசப் ஓய்வுபெறுவார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை
இந்த ஆண்டு அதே தேதி (ஜனவரி 10ம் தேதி) பார் கவுன்சிலில் இருந்து நேரடியாக இந்து மல்கோத்ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக்குவதற்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது. அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் ஆனார்.
விடுபட்டுள்ள பல நீதிபதிகளுக்கு மிகவும் இளையவர்கள் என்பதை சுட்டிக்காட்டி, ஏப்ரல் 26ம் தேதி நீதிபதி கேம். எம். ஜோசப்பின் கோப்பை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
மத்திய அரசின் ஆட்சேபணையை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஜூலை 16ம் தேதி கூடிய கொலிஜியம், அனைத்திந்திய அளவில் உயர்நீதிமன்ற ஒருங்கிணைந்த மூப்புப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்த நீதிபதி பானர்ஜி, 5வது இடத்தில் இருந்த நீதிபதி வினீத் சரன் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தது,

இவர்களோடு சேர்த்து நீதிபதி கே. எம். ஜோசப்பின் பெயரும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், ஆகஸ்ட் 3ம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியானபோது, வரிசையில் முதலிடம் பெற வேண்டிய நீதிபதி கே. எம். ஜோசப்பின் மூப்பு நிலை நியமன அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டு, அவருக்கு 3வது இடம் அளிக்கப்பட்டிருந்த்து மூத்த நீதிபதிகளை எரிச்சலடைய செய்தது.
எட்டு மதத்திற்கு முன்னரே பரிந்துரைக்கப்பட்டு, இழுபறிக்கு பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நீதிபதி கே. எம். ஜோசபின் மூப்பு நிலையில் திருத்தம் செய்கின்ற அரசின் முயற்சியை பார்த்து எரிச்சலடைந்துள்ளதை ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்த நீதிபதிகள் குழுவினர் தெரிவித்தனர்.
இவர்களின் எதிர்ப்பை மத்திய அரசிடம் தெரிவிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வாக்குறுதி அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மூப்பு - முக்கியத்துவம்
இந்திய தலைமை நீதிபதியாக வருவதை தீர்மானிப்பதாலும், நீதிபதிகளின் அமர்வை தலைமையேற்கும் நீதிபதியின் திறனையும் பாதிப்பதாக அமைவதாலும், இந்த மூப்பு முக்கியத்துவத்தை பற்றி பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
நீதிபதி ஆர். பானுமதியை எடுத்துகொண்டால், இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில், 4 ஆண்டுகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓர் அமர்வை தலைமையேற்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.
ஒரு நீதிபதி கொலிஜியத்தின் உறுப்பினராக ஆவதும், எவ்வளவு காலம் உறுப்பினராக இருந்துள்ளார் என்பதும் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதித்துறை நியமனங்களை முடிவு செய்கின்றன.
இந்த மூப்பு நிலை, நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் நியமனம் பெறுவதன் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.


ஒரே நாளில் 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டால், அவர்களின் நியமன வரிசையை வைத்து மூப்பு நிலை முடிவு செய்யப்படுகிறது. மூப்பு நிலையை தீர்மானிப்பதற்கு இந்த முறைதான் நடைமுறையில் உள்ளது.
இரண்டு நீதிபதிகள் ஒரே நாளில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த நீதிபதி மூப்பு பெறுபவராக கருதப்படுகிறார்.
இதன் அடிப்படையில், 'நுட்ப சிக்கல்' என்று அரசு தெரிவித்திருக்கும் கருத்துப்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பதவியேற்றதில் தவறு ஏதும் கிடையாது. நீதிபதிகள் பானர்ஜியும், சரனும் நீதிபதி கே. எம் ஜோசப்பை (உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீண்டகாலம் பணிபுரிந்தாலும்) விட நீண்டகாலம் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், நீதிபதி ஜோசப்பின் பெயர் கொலிஜியத்தால் 2018 ஜனவரி 10ம் தேதியே பரிந்துரை செய்யப்பட்டுவிட்டது. பிற 2 நீதிபதிகளின் பெயர்கள் ஜூலை 16ம் தேதியே கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை பதவியேற்ற 3 நீதிபதிகளில் கே. எம். ஜோசப்பை கடைசியாக வரிசைப்படுத்தியுள்ளதை அரசு நியாயப்படுத்தியுள்ளது.
ஆனால், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரன் ஆகியோர் பரிந்துரை செய்யப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே பரிந்துரைக்கப்பட்டதால் நீதிபதி கே. எம். ஜோசப்பின் மூப்பு வரிசையில் அரசு தலையிடுவது தவறானது என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆர். எம். லோதா உள்பட பல ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் தலையீட்டுக்கு கண்டனம்
அரசின் ஆட்சேபணைகள் நீதிபதிகளின் அமர்வால் நிராகரிக்கபட்ட பின்னர், நீதிபதி ஜோசப்பின் பெயரை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதற்காக அரசு மேற்கொண்டுள்ள 'அப்பட்டமான குறுக்கீடு மற்றும் அற்பத்தனமான செயல் இதுவென' அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மூப்பு நிலை மட்டுமே உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிப்பதற்கான காரணியல்ல என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதனால்தான் மூப்பு பற்றிய அரசின் கருத்தை நிராகரித்த கொலிஜியம், நீதிபதி ஜோசப்பை பரிந்துரை செய்ததில் உறுதியாக நின்றது.
இந்திய குடியரசு தலைவரின் ஆட்சியை உத்தராகண்டில் அமல்படுத்துவதற்கு எதிராக 2016ம் ஆண்டு நீதிபதி ஜோசப் வழங்கிய தீர்ப்பு, அங்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உதவியது. மத்திய அரசின் இந்த செயல்பாடு உத்தராகண்ட் தீர்ப்போடு தொடர்புடையது என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை எல்லாம் அரசு மறுத்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா மற்றும் அவரை வெளிப்படையாக விமர்சித்த ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் இருவரின் முன்னுதாரணம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், DDNEWS
நீதிபதி செல்லமேஸ்வருக்கு ஓராண்டுக்கு முன்னரே நீதிபதி மிஸ்ரா உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆகிவிட்டார், ஆனால், நீதிபதி செல்லமேஸ்வர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகிய இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்தான் நீதிபதி மிஸ்ரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்திய குடியரசு தலைவர் அவர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்த ஆணையில் கையெழுத்திட்டபோது, நீதிபதி மிஸ்ராவின் பெயர் முதலாவது இடம்பெற்றதால், முதலில் பதவியேற்றார். அதனால், மூப்பு அடிப்படையில் இந்தியாவின் தலைமை நீதிபதியாகவும் ஆனார்.
சந்தர்ப்பவாத தீர்வு
இந்திய உச்சநீதிமன்றத்தில் மூப்பு நிலை நிர்ணயிப்பதில் இன்னும் இருண்ட அம்சங்கள் உள்ளன. இது சட்டப்படி பார்க்கப்படுவதைவிட சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் நியமனம் பெறுகின்ற தேதிதான் அந்த நீதிமன்றத்தின் மூப்பு நிலையை முடிவு செய்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது, அதிலும், நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நியதிகளுக்கு மாறாக செல்வதற்கும் வாய்ப்புள்ளதையும் இது காட்டுகிறது. சரியாக சொல்லப்போனால், சந்தர்ப்பவாத தீர்வுதான் எடுக்கப்படுகிறது.

பட மூலாதாரம், PTI
இந்தியாவின் மத்தியில் ஆளும் அரசு நீதித்துறையில் தலையிட தொடங்கினால், இத்தகைய பிரச்சனைகள் எதிர்காலத்திலும் எழுவது தொடரும்.
நீதித்துறை நியமனங்களிலும், மூப்பு நிலையை முடிவு செய்வதிலும் விருப்பு வெறுப்புகளை அகற்றி, இதற்கான செயல்முறை குறிப்பாணையை இறுதி செய்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
இத்தகைய பிரச்சனைகளை பற்றி விவாதித்து, செயல்முறை குறிப்பாணையை இறுதி செய்வது இப்போதைய அவசர தேவையாகும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












