கருணாநிதி: தன் வாழ்க்கையால் வரலாற்றை மாற்றிய தலைவர்!

    • எழுதியவர், சல்மா
    • பதவி, கவிஞர்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

கலைஞர். சமகாலத்தில் இந்தியா என்கிற ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு சொல்.

கருணாநிதி: தன் வாழ்க்கையால் வரலாற்றை மாற்றிய தலைவர்!

ஐம்பதாண்டு கால தமிழக அரசியலைத் கலைஞரைச் சுற்றியே அமைந்திருக்கிறது என்று சொல்வார்கள். அது வெறும் பகட்டு வார்த்தை அல்ல. வரலாற்று உண்மை.

அந்த அளவிற்கு அர்த்தமுள்ளதொரு வாழ்வை வாழ்ந்து காட்டியவர் என்று வரலாற்றில் என்றென்றும் அவர் பெயர் நிலைக்கும்.

அவர் தான் நம்பிய, தான் ஏற்றுக்கொண்ட சமூக நீதி எனும் தத்துவத்திற்காக, அதனைச் செயலாக்கிக் காட்டுவதற்காகத்தனது வாழ்நாளின் எண்பது வருடங்களைச் செலவிட்டவர் என்பதனை அதற்கான சில நூறு சான்றுகளோடு அவரது எதிரிகளால்கூடச் சொல்ல முடியும்.

தான் ஏற்ற பதவியின் வழியே அவர் மகளிருக்கான ஏராளமான திட்டங்களைத் துவக்கி வைத்தார்.அதன் மூலம் அவர்களது விடுதலையை உறுதி செய்தார். மற்ற பல மாநிலங்களில் பெண்கள் நிலை தாழ்ந்துகொண்டிருந்தபோது தமிழகத்தில் பெண்கள் சிறகுகளை விரித்துப் பறந்துகொண்டிப்பதற்கான காரணகர்த்தாவாக அவர் இருக்கிறார்.

நாட்டின் சரிபாதியான பெண் இனம், இந்தச் சமூகம் உண்டாக்கியிருந்த தளைகளால் கட்டுண்டு கிடந்தபோது அவர்களது உரிமைகளை மீட்டுக்கொடுக்கும் திராவிட இனத்தின் நாயகனாக அவரே இருந்தார். தந்தை பெரியாரின் எண்ணங்களில், கொள்கைகளில் ஒலித்துக்கொண்டிருந்த பெண் விடுதலைக்கான வேட்கையை நிறைவேற்றும் தலைவராக அவர் உருவெடுத்தார் .

குரலற்றவர்களின் குரலாகத் திகழ்பவர் அவர். அதனால்தான் இடஒதுக்கீட்டின் வழியே விளிம்பு நிலையில் வாழக்கூடிய எண்ணற்ற பிரிவினருக்கான சட்டங்களை தனது ஆட்சி காலத்தில் தீட்டி நடைமுறைக்கு கொண்டுவந்தார்.

பெண்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதென்பது அத்தனை எளிதான காரணமல்ல வரலாற்றில் பெண்ணின் இடம் எதுவென இந்தத் தந்தைவழிச் சமூகம் பலநூற்றாண்டுகளாக வரையறுத்து வைத்திருக்கிறது. அந்தஇடத்திலிருந்து பெண்ணை வெளியே கொண்டுவருவதுஎன்பது அத்தனை எளிதானதல்ல. அதனைஉடைத்தெறிவதற்கான முதல் முயற்சியாக பெண்ணுக்குச்சொத்துரிமை உண்டென்பதைச் சட்டமாக்கினார்.

கருணாநிதி: தன் வாழ்க்கையால் வரலாற்றை மாற்றிய தலைவர்!

நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்காரைத்தோற்க வைத்த இந்தச் சட்டத்தை மாநிலத்தில் இயற்றி வெற்றி கண்டார் . அதன் பின்னணியில் எளிய கிராமப் பின்னணி கொண்ட அந்த மனிதனுக்குள் நிரம்பியிருந்த பகுத்தறிவுச் சிந்தனையும் அவரை இயக்கிய திராவிட இயக்கச் சித்தாந்தமும் இருந்தன. அந்தச் சித்தாந்தம் பெண்களது விடுதலைக்கான சட்டங்களை இயற்ற அவரைத் தூண்டியபடியே இருந்தது.1929இல் நடந்த செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உயிர் கொடுக்கும் மனிதராக அவர் மாறினார். அதற்கான கடும் உழைப்பைச் செலுத்தினார்.

பெண்களைச் சமயலறையில் பூட்டி வைத்த ஒரு சமூகத்திடம் பெண்களைக் காவல் துறைக்கும் ஆசிரியப்பணிக்கும் அனுப்பச் சொல்லிச் சட்டமியற்றினார். அரசுப்பணியில் 30 சதவீதவீதத்தை ஒதுக்கீடு செய்தார்என்பது இன்றைக்குச் சாதாரணமான செய்தியாக இருக்கலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் அது எளிய செய்தியல்ல.

பெண்களுக்குக் கல்வி கிடைக்காத அவலத்தைப்போக்குவதற்காக, எட்டாம் வகுப்பு முடிக்கும் பெண்களுக்கு அரசிடமிருந்து திருமண உதவித் தொகை கிடைக்கும் என்கிற சட்டத்தை உருவாக்கிச் செயல்பாட்டுக்குக்கொண்டுவந்தார்.

திருமண உதவித் தொகை என்பதைப் பெண்களின் கல்விவளர்ச்சிக்கான விஷயமாக மாற்றினார். பல்லாயிரம் பெண்குழந்தைகளது கல்விக்கு அதுவே அடிகோலிற்று. வட மாநிலங்களில் பலவும் இப்போதுதான் பெண்களின் கல்வி உரிமை பற்றி பேசிக்கொண்டிக்கின்றன.

அதே போல சுயஉதவிக் குழுக்கள் , உள்ளாட்சி அமைப்பில் 33 சதவீத இடஒதுக்கீடு ஆகிய இரு சட்டங்களும் இந்தியாவில் முதல் முறையாக நடைமுறைக்கு வந்து பெண்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பெண்களது சமூக மதிப்பை உயர்த்தவும் அடிப்படையாக மாறின.

இப்படியாக அவர் கொண்டு வந்த சட்டங்களின் வழியே பெண்களது முன்னேற்றம் மாபெரும் பாய்ச்சலைக் கண்டது. பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இந்தச் சட்டங்கள் அமைந்தன. இந்தச் சட்டங்களால் இன்று பெண்களது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாம் கண்கூடாகப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். கூடவே பிற மாநிலங்களுக்கும் நிர்பந்தத்தைஉண்டாக்கி இதுபோன்ற சமூக மாற்றத்தைப் பரவலாக்குவதற்கான முன்னுதாரணமாகவும் திகழ்கிறோம்.

ஐந்தாவது முறையாக அவர் முதல்வராக பொறுப்பேற்ற போது தன்னைப் போலவே பெண்களது நலன் சார்ந்து இயங்கக்கூடியவராக ஸ்டாலினை உருவாக்கி இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக உள்ளாட்சித் துறையை அவரது பொறுப்பில் ஒப்படைத்தார் . அதன் வழியே மகளிர் மேம்பாடு சுயஉதவி குழுக்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிற சமூக கடமையில் அவரையும் பங்கு கொள்ளச்செய்தார்.

எப்போதுமே கட்சிக்குள் மகளிரின் பங்களிப்பை அவர் மிக முக்கியமானதாகக் கருதினார். கட்சிப் பொறுப்புகளில் அவர்களுக்குப் பரவலாக இடம் தந்தார். பொதுக்குழு நிகழ்வுகளிலும் ஏனைய கட்சிக்கூட்டங்களிலும் இந்த இயக்கத்திற்குப் பெண்கள் ஆற்றிய பணிகளையும் அவர்களது பெயர்களையும் சொல்லி நினைவுகூர்வார்.அதன் வழியே போராட்டத்திற்க்கான மனநிலையை எங்களிடம் உருவாக்குவார். முத்துலெட்சுமி ரெட்டி , சற்குணபாண்டியன், சத்யவாணி முத்து, நூர்ஜஹான் பேகம் என்று தனித்தனியே பெயர்களைச் சொல்லி அவர்களது பங்களிப்பை மெச்சுவார். பெண்களால் மட்டும்தான் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் எனும் தன்னம்பிக்கையை அவர் கொண்டிருந்தார் என்பதை அவர் எங்களுக்கு தருகிற முக்கியத்துவத்தை வைத்தே எங்களால் புரிந்து கொள்ள முடியும் .

கருணாநிதி: தன் வாழ்க்கையால் வரலாற்றை மாற்றிய தலைவர்!

இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஒரு பெண்ணை முன்மொழியும் அளவுக்கு கலைஞரிடம் பெண்விடுதைலைக்கான தாகம் இருந்தது.

அவர் என்றைக்குமே ''நான் '' என்ற வார்த்தையைப்பயன்படுத்தியதில்லை நாம் இணைந்து பணியாற்றுவோம் என்பதையே வலியுறுத்துவார். எல்லாச் சாதனைகளையும் கழகத்தின், தொண்டர்களின் ,சாதனையாகவே முன்னிறுத்துவார். ஆனால்,அவர்தான் எல்லாமும் என்பதை நாங்கள் அறிந்தேதான் இருக்கிறோம்.

கட்சியின் மகளிர் அணியினர் மகளிர் தினத்திற்காகவோ அல்லது அவரது பிறந்த நாளிலோ அவரை சந்திக்க நேரும்போதெல்லாம் மிகுந்த உற்சாகம் கொள்வார். என்ன,''படை '' திரண்டு வருகிறீர்களே என்ன விசேஷம் என்று கிண்டலாகக் கேட்பார். அந்த கிண்டலுக்கு பின்னணியில் ஒரு வாஞ்சை நிரம்பியிருக்கும்.

எனது வெளிநாட்டுப் பயணங்களை அவரிடம் சொல்லாமல் நான் துவக்கியதில்லை என்பதனால் நான் அவரைக் காணச்செல்லும் போதெல்லாம் அடுத்த வெளிநாட்டுப் பயணம் எப்போது என்று கிண்டல் செய்வார். அந்த கிண்டலுக்குப்பின் எனக்கான வாழ்த்து இருக்கும் .

அவர் தொடர்ச்சியாய் உரையாடக்கூடியவராக இருந்தார். தலைவரின் குரலாக அல்லாமல் தந்தையின் குரலாக உரையாடி நம்மை இயல்பாக உணரவைப்பார்.

அவர் பெண்களுக்காகவும் சமூக நலனுக்காகவும் தொடர்ச்சியாக இயற்றிய சட்டங்களும் , திட்டங்களும் பெரும் மாற்றத்தைத் தமிழ் நாட்டில் கொண்டுவந்தன என்பதை உணர்ந்ததனால்தான் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவர் உருவாக்கிய சட்டமன்றத்தையும்நூலகத்தையும் பாலங்களையும் முடக்க முயன்றாரேதவிர இந்தத் திட்டங்களை முடக்க முயலவில்லை. அப்படிமுடக்கினால் அது தனக்கு மாபெரும் அவப்பெயரையும்சமூகப் பின்னடைவையும் உருவாக்கும் என்று உணர்ந்ததால்அமைதிகாத்தார் .அவற்றின் தரத்தை உயர்த்த முடியுமாவென முயன்றார். .

எளிதில் கைக்கொள்ள இயலாதென எதனை நினைத்தோமோ அதனை எல்லாம் சட்டத்தின் துணையோடு கைக்கொள்ள வைத்த ராஜதந்திரி .அண்ணாவின் மறைவிற்கு பிறகு திராவிட இயக்கத்திற்கென தனித்த அடையாளத்தையும் போக்கையும் அவரே அமைக்க வேண்டிய பொறுப்பையும் கட்சியையும் தனது தோள்களில் சுமந்து காட்டினார் ஒரு தலைவராக ஒரு முதல்வராக அவரது செயல்பாடுகள், நிர்வாகத்தில் வெளிப்படுத்திய ஆற்றல், சுறுசுறுப்பு நினைவாற்றல் , இலக்கியங்களிப்பு ,அரசியல் நாகரீகம் , தேர்தல் கூட்டணிகளின் கணக்கீடு , சமூகநலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அவரது சிந்தனை இதெல்லாமும் அவர்குறித்து இந்த நேரத்தில் நாம் ஒப்பீடு செய்வதற்கான ஆளுமை யாரும் இல்லை .

எழுத்தாளர்கள் புதிய விஷயம் குறித்து நமக்கு சிந்திக்க கற்றுத்தருகிறார்கள் என்பது அறியப்பட்ட உண்மை .இவரது எழுத்தாளர் எனும் தனித்துவம் இந்த சமூக மேம்பாட்டிற்கான சிந்தனைகளை கொண்டதாக இருந்தது..

பல அரசியல் தலைவர்களையும் போல அவர் மீதான எதிர்மறை அரசியல் விமர்சனனங்கள் இருக்கலாம் .ஆனால் அவற்றையெல்லாம் நீர்த்துபோவதற்கான அனேக விஷயங்களை அவர் செய்திருக்கிறார் .அதில் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடும் ,திருநங்கைகள் நலவாரியமும் குறிப்பிட்டு செல்லக்கூடியவை .அவர்களுக்கான ராஜபாட்டையை அவர் போட்டுத்தந்தார்.

எளிய பின்னணியிலிருந்து வந்து, அளப்பரிய சமூக மாற்றத்திற்கு வித்திட்டு, அதனைத் தனது காலத்திலேயே பார்த்து மகிழும் வரலாற்றுத் தலைவர் கலைஞர். சிறிய கிராமத்திலிருந்து வந்து தனக்கென ஒரு வரலாற்றைப் போராடி எழுதி, அதன் வழியாக எண்ணற்ற மக்களின் தலையெழுத்தை மாற்றி எழுதியதில் அவர்போல ஒருவரை இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்த உலகம் காணுமா என்பது சந்தேகமே.

அவரை நீங்கள் புறம் தள்ள விரும்பினீர்கள் என்றால் நீங்கள் சமூக நீதியை புறம் தள்ளியவர்களாக காலத்தால் அறியப்படுவீர்கள் .

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :