You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி
திருப்பூரில் அரசு பள்ளி மாணவி உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கி அசத்தியுள்ளார். இந்நிலையில் இத்திட்டத்தை அதிகமானோருக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிசக்தி அதிக அளவில் பயன்பாட்டில் இல்லாத நிலையில் ஆட்டோமொபைல் மற்றும் இவை சார்ந்த நிறுவனங்கள் மாற்று எரிசக்திகளை உருவாக்குகின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற இன்றைய சவால்களையும் கவனத்தில் கொண்டு புதிதாக கண்டுபிடிக்கப்படும் மாற்று எரிசக்தி இருக்க வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இத்தகைய மாற்று எரிசக்திக்கான முயற்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு சார்ந்த துறைகளில் நடைபெற்று வருவது ஒருபுறம் இருக்கையில், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவ மாணவியர் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அசத்தல் கண்டுபிடிப்பு
திருப்பூரிலுள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10 வகுப்பு படித்துவரும் யோகேஸ்வரி கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் ஹைட்ரஜன் வாயுவில் இரு சக்கர வாகனத்தை இயக்கி மாநில அளவில் முதல் பரிசு பெற்றார்.
சமீப காலமாக சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்ந்து நிகழ்ந்து வருவதையும், தற்போதுள்ள சூழ்நிலையில் பெட்ரோல், டீசலுக்கு தினம் ஒரு விலை என்ற நிலைமை இருப்பதையும் பற்றி கவலை கொள்கிறார் யோகேஸ்வரி.
எனவே பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு ஏற்படும் அபாயகரமான சூழல் உள்ளதாகவும், உலகில் அதிக பரப்பளவில் விரிந்து கிடக்கும் கடல் நீரை பயன்படுத்தி அதிலுள்ள ஹைட்ரஜன் வாயுவை பிரித்து எடுத்து, அதனை கொண்டு வாகனங்களை இயக்கினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்து பாதுகாக்க முடியும் என்கிறார்.
தன்னுடைய திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லிட்டர் உப்பு தண்ணீரை பயன்படுத்தி வாகனத்தை இயக்கும்போது சுமார் 35 முதல் 40 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம் என்று யோகேஸ்வரி கூறுகிறார்.
உப்பு நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் முயற்சியில் 1 மாத காலத்திற்கும் மேலாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட இவர், 4 முறை தோல்வியை சந்தித்துள்ளார்.
தொடர்ந்து 5வது முறையாக பித்தளை, எஃகு, லெட், கிராஃபைடு ஆகிய இந்த நான்கு கனிமங்களை பயன்படுத்தி உப்புத்தண்ணீரில் மின்சாரத்தை செலுத்தும்போது ஹைட்ரஜன் வாயுவை முறையாக பிரித்தெடுத்து வெற்றி கண்டுள்ளார்.
மேலும் ஹைட்ரஜனுடன் பிரிகின்ற ஆக்சிஜன் சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாததால் பொதுவெளியில் விடப்படுகிறது. தொடர்ந்து ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி இருசக்கர வாகனம் இயக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், வாகனத்தில் உள்ள பேட்டரியை (மின்கலத்தை) பயன்படுத்தி ஹைட்ரஜனை பிரித்து எளிதில் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த மாணவி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அரசின் உதவியும் முயற்சியும் கட்டாயத்தேவையாக உள்ளது.
சோதனை முயற்சியாக இருசக்கர வாகனத்திற்கான தனது மாற்று எரிசக்தி திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொழிற்சாலை அமைத்து முறையாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார் மாணவி யோகேஸ்வரி.
தாயின் மகிழ்ச்சி
யோகேஸ்வரியின் இந்த கண்டுபிடிப்பு குறித்து யோகேஸ்வரியின் தாய் அம்சவள்ளியிடம் கேட்டபோது பிபிசி தமிழிடம் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டார்.
எனது இரு மகள்களும் அரசு பள்ளியில்தான் படிக்கின்றனர். கணவன் இல்லாததால் பிரின்ட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து இருவரையும் படிக்க வைக்கிறேன்.
குடும்ப செலவு, படிப்பு செலவு போக யோகேஸ்வரி அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்கான செலவை பார்ப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும் அவளின் விருப்பத்தை நிறைவேற்றும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு நாள் கடைக்கு போய்விட்டு நானும் யோகேஸ்வரியும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது சாலையில் ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தை நகர்த்திக்கொண்டு பெட்ரோல் என்ன தண்ணீரிலா ஓடுகிறது என்று விவாதித்து சென்றனர்.
அதை பற்றி நாங்களும் தண்ணீரில் வாகனங்கள் இயங்கினால் நன்றாகத்தான் இருக்கும் என்று பேசிக்கொண்டு வந்தோம். அதையே மனதில் வைத்துக்கொண்டு யோகேஸ்வரி உப்புத்தண்ணீரில் இருந்து ஹைட்ரன் வாயு மூலம் வாகனத்தை இயக்கி காட்டியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அதனை அறிவியல் கண்காட்சிக்கு கொண்டு சென்று பரிசும் வாங்கி வந்ததார். எனக்கு தற்போது நிறைய பேர் போனில் தொடர்பு கொண்டு என் மகளை பற்றியும் அவளது கண்டுபிடிப்பு பற்றியும் கேட்கின்றனர்.
எனக்கு சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவளின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு பொருளாதார உதவி கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார் மாணவி யோகேஸ்வரியின் அம்மா அம்சவல்லி.
அறிவியல் ஆசிரியை பெருமிதம்
ஜெய்வாபாய் பள்ளியின் அறிவியல் ஆசிரியை சுதா மாணவி யோகேஸ்வரியின் அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி பிபிசியிடம் தெரிவித்தபோது, "ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் இன்ஸ்பையர் அறிவியல் கண்காட்சி அமைப்பு சார்பில் நடத்தப்படும் கண்காட்சிக்கு மூன்று மாணவிகளின் கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை தேர்வு செய்து இன்ஸ்பையர் அமைப்பிற்கு அனுப்பி வைப்போம்.
இந்தாண்டு அனுப்பப்பட்ட மூன்று திட்டங்களில் யோகேஸ்வரியின் திட்டம் தேர்வாகி அதனை செயல்படுத்துமாறு எங்களுக்கு இன்ஸ்பையர் அமைப்பிடம் இருந்து அனுமதி வந்தது.
அதோடு திட்டத்தை செயல்படுத்த அந்த அமைப்பின் சார்பில் பத்தாயிரம் ரூபாய் பணமும் அனுப்பி வைக்கப்பட்டது," என்றார்..
கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் யோகேஸ்வரியின் கண்டுபிடிப்பு முதலில் தேர்வானது.
அதன் பின்னர், ஜூன் 20, 21 தேதிகளில் காஞ்சிபுரத்தில் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் யோகேஸ்வரியின் கண்டுபிடிப்புக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.
"எலக்ட்ரோல் புராஸஸ் எனப்படும் யோகேஸ்வரியின் இந்த கண்டுபிடிப்பு ஆறாம் வகுப்பு முதலே பாடப்புத்தகத்தில் மாணவ மாணவியர் படிக்கும் அறிவியல்தான். அதனை யோகேஸ்வரி நுணுக்கமாக கையாண்டு பயனுள்ள விஷயமாக மாற்றியுள்ளார் என்று தெரிவித்தார்," ஆசிரியை சுதா.
மாணவியின் கண்டுபிடிப்பு குறித்து அறிவியல் ஆசிரியை சுதா கூறும்போது இந்த திட்டத்தில் மின்சாரம் என்பது நேரடியாக வாகனத்தின் இன்ஜினுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. உப்புத் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனையும், ஆக்ஸிஜனையும் பிரித்தெடுக்க லெட், பித்தளை, கிராஃபைடு, எஃகு ஆகிய உலோகங்களின் ஊடே செலுத்தப்படுகிறது. இதில் 12 வோல்ட் பேட்டரியின் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு மின்னாற் பகுப்பு (எலெக்ட்ரொலிசிஸ்) நடைபெறுவதன் மூலம் ஹைட்ரஜன் பிரிக்கப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்படும் ஹைட்ரஜன் மூலமாகவே வாகனத்தை மாணவி யோகேஸ்வரி இயக்கிக் காட்டியுள்ளதாக கூறுகிறார்.
மேலும் இது ஒரு முதற்கட்ட முயற்சி மட்டுமே. பெட்ரோல் ஒரு டேங்க் மூலமாக இன்ஜினுக்குள் செலுத்தப்படுவது போல ஹைட்ரஜன் ஒரு பாதுகாப்பான சிலிண்டருக்குள் அடைக்கப்பட்டு இன்ஜினை இயக்குவது போன்ற அடுத்தகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்