You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: தண்ணீரில் அதிகரிக்கும் யுரேனியம் அளவு, ஓர் எச்சரிக்கை
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி : தண்ணீரில் அதிகரிக்கும் யுரேனியம் அளவு
நிலத்தடி நீர் குறைவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தலையங்கள் எழுதி உள்ளது தினமணி நாளிதழ்.
16 மாநிலங்களில் தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது அவற்றில் அளவுக்கு அதிகமாக யுரேனியம் கலந்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மிகவும் ஆபத்தான ஆர்சனிக் சில பகுதிகளில் கலந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இவை மிகப்பெரிய ஆபத்துக்கான அறிகுறி என்கிறது தினமணி தலையங்கம்.
மேலும், "இந்திய தர நிர்ணய ஆணையம், தண்ணீரின் தரத்தை நிர்ணயிப்பதில் யுரேனியம் அளவு கணக்கிடப்படுவதில்லை. அதனால் அது குறித்து நாம் கவலைப்படாமலே இருந்து வந்திருக்கிறோம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தண்ணீரில் யுரேனியம் கலந்திருப்பதால் இந்தியா முழுவதும் தண்ணீரில் யுரேனியம் இப்போது அதிகரித்துக் காணப்படுகிறது. சமீபத்தில் தென்னிந்தியாவில் நடத்திய பல்வேறு ஆய்வுகளில் குறைந்தபட்சம் லிட்டருக்கு 500 மைக்ரோ கிராமும், சில இடங்களில் அதிகபட்சம் லிட்டருக்கு 2,000 மைக்ரோ கிராமும் யுரேனியம் தண்ணீரில் காணப்பட்டது தெரியவந்திருக்கிறது.
யுரேனியம் கலந்த தண்ணீர் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து நாம் அவசர நடவடிக்கை மேற்கொண்டாக வேண்டும். யுரேனியமோ, வேறு உலோகங்களோ தண்ணீரில் அளவுக்கு அதிகமாக கலந்திருந்தால் அவை சிறுநீரகத்தை பாதிக்கும். இதற்கு யுரேனியத்தின் கதிர்வீச்சு மட்டும் காரணமல்ல, அதன் வேதியியல் தாக்கமும்கூட காரணம் என்று கூறப்படுகிறது." என்று வவரிக்கிறது அந்நாளிதழ் தலையங்கம்.
தி இந்து: 'மும்பையில் தொடரும் கனமழை'
மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் கனமழை குறித்து செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து நாளிதழ். கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக கூறும் அந்த செய்தி, தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்ற் 37 பம்புகளை நிர்வாகம் பயன்படுத்திவருவதாகவும் , மழையின் காரணமாக ஒருவர் இறந்தார் என்றும் விவரிக்கிறது அச்செய்தி.
இந்து தமிழ்: 'நடிகர் விஜய்க்கு எதிரான வழக்கு'
சர்கார் படத்துக்கான விளம்பரத்தில் நடிகர் விஜய் புகை பிடிப்பது போல காட்சி வெளியாகியுள்ளதால், அதற்காக நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சன் பிக்சர்ஸ் படநிறுவனம் தலா ரூ. 10 கோடி வீதம் ரூ. 30 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டுமென தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது என்கிறது இந்து தமிழ் செய்தி.
"சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்.சிரில் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் விளம்பரத்தில் அவர் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. இது சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரம் தடை, ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிரானது. மேலும், தமிழ்நாடு விளம்பரப் பொருள் கட்டாய தணிக்கை சட்டம் 1987-ன் கீழ் இதற்கு தணிக்கைச் சான்று பெறவில்லை. புற்றுநோயாளிகளின் நலனுக்காக பொது நிதியை உருவாக்கி நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து தலா ரூ.10 கோடி வீதம் ரூ. 30 கோடியை இழப்பீடாக வசூலித்து அதை ராயப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனை நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்" என விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'விரைவில் தமிழ்நாடு அரசு பேருந்துகளிலும் தட்கல் வசதி'
விரைவில் தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் தட்கல் வசதி கொண்டுவர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
விழா காலங்களில் சொகுசு பேருந்துகளில் இந்த தட்கல் முன்பதிவு வசதியை கொண்டுவர ஏற்பட செய்யப்பட உள்ளது. இந்த வகை முன்பதிவுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் இருக்கலாம் என்று ஓர் அதிகாரி கூறியுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தினத்தந்தி: 'ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - கிராம மக்கள்'
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு கொடுத்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது, தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள், கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் 'எங்கள் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்தது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் கிராம மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். எங்களது அடிப்படை வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வசதி இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம்.'" என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
- குழந்தைகளை மகிழ்விக்க மருத்துவமனை சென்ற வொண்டர்வுமன்
- உப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி
- ‘சர்வம் ராணுவமயம்’: நசுக்கப்படும் ஊடக சுதந்திரம்
- ட்விட்டர் டிரெண்டிங்கிலிருந்து காணாமல் போன 'அமித் ஷாவே திரும்பிப் போ'!
- போதுமான அதிகாரங்கள் இன்றி நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா: எதிர்கட்சிகள் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :