அமித்ஷா வருகை: பாஜக எடுக்கப் போகும் அரசியல் பாதை எது?

சமூக ஊடகங்களில் நடந்த 'அமித்ஷாவே திரும்பிப்போ' பிரசாரங்களுக்கு மத்தியில் தமிழகத்துக்கு வருகை புரிந்த பாஜக தலைவர் அமித்ஷா, கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விட நிதிக்கமிஷன் மூலம் தமிழகத்துக்கு பாஜக ஆட்சி அதிகம் நிதி ஒதுக்கியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அத்துடன், தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம் என்று கூறியதோடு கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் ஊழலில் சிறை சென்றதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், அவர் குறிப்பிட்டது ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த ஆ.ராசா, கனிமொழியையா அல்லது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த ஜெயலலிதாவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அரசியல் பாதை எது?

பொதுவில் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம் என்று குறிப்பதன் மூலமும், சிறை சென்றதைக் குறிப்பதன் மூலமும் ஒரே நேரத்தில் அவர் திமுக, அதிமுக இரண்டையும் எதிர்க்கும் உபாயத்தை கையாள்கிறாரா என்ற ஐயம் எழுகிறது.

இது உண்மையானால், வழக்கமாக அதிமுக அரசுடனும், கட்சியுடனும் இணக்கமான உறவைப் பேணும் பாஜக, புதிய பாதையை தேர்வு செய்ய முயல்வதாகக் கருதலாம். ஒருவேளை, தமிழகத்தில் பாஜக சந்திக்கும் வழக்கமான எதிர்ப்புடன், அதிமுக ஆட்சி மீதான அதிருப்தியையும் தாங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டியதில்லை என்று பாஜக யோசனை செய்வதன் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம் என்று தெரிகிறது.

சென்னையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், கட்சியை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்த உறுதியேற்க வேண்டுமெனக் கூறியிருப்பதையும் இதோடு இணைத்துப் புரிந்துகொள்ளலாம். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளோடு விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இது. எனவே, தமிழகத்தில் இருந்து கூடுமானவரை நாடாளுமன்ற இடங்களைப் பெறவே பாஜக முயலும் என்பதால், அதிமுக உறவை உதறிவிட அத்தனை எளிதாக முயலுமா என்பதும் கேள்வியாகவே உள்ளது.

நிதி ஒதுக்கீடு

"இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் தி.மு.க. கூட்டணியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. அவர்கள் 13வது நிதி கமிஷனின் கீழ் தமிழகத்திற்குக் கொடுத்த தொகை, 94,540 கோடி. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் 14வது நிதி கமிஷனின் கீழ் தமிழகத்திற்கு 1,99,096 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது," என்று கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார் அமித்ஷா.

இதுதவிர மத்திய அரசின் திட்டங்களின் மூலம் 1,35,000 கோடி தரப்பட்டுள்ளது. சொட்டு நீர்ப் பாசனத் திட்டங்களுக்காக 340 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்திற்காக 2,875 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. மோனோ ரயில் திட்டத்திற்காக 3,267 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 3,200 கி.மீ.க்கு ரயில் தண்டவாளம் அமைப்பதற்காக 20,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2017ல் தமிழகத்தில் வறட்சிக்கா 1750 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வர்தா புயலுக்காக 265 கோடி ரூபாய் தரப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக இந்த நான்காண்டுகளில் 5 லட்சத்து 10,000 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தப் பட்டியலை அவர் அடுக்கியதோடு, "இதற்கு முன்பாக ஆட்சியில் இருந்தவர்கள் தமிழகத்திற்காக என்ன செய்தீர்கள் என கணக்குக்கொடுங்கள். சென்னையிலே எனக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன், கடந்த ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது," என்ற அரசியல் கணையையும் வீசினார்.

இதற்கான பதில்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து வரலாம் என்பதால், இந்த விவாதம் இன்னும் சில நாளைக்குத் தொடரக்கூடும்.

"கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, சிறை சென்றார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளால், இந்த நான்காண்டு ஆட்சி மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டும் சுமத்த முடியவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தை நினைத்தால் வருத்தம்...

ஆனால், தமிழகத்தைப் பற்றி நினைக்கும்போது மிகவும் வருத்தம் ஏற்படுகிறது. இந்த நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்திலும் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவருவோம் என இங்கிருக்கும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் ஊழலை வெளியேற்றும் பணியில் நாம் ஈடுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

"தமிழுக்கு பாரதீய ஜனதாக் கட்சி நிறைய செய்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ரயில்வே டிக்கெட்டுகள் இந்தியில்தான் அச்சடிக்கப்பட்டன. ஆனால், பாஜக ஆட்சியில் தமிழிலில் கொண்டு வந்துள்ளோம். இது நரேந்திர மோதியின் ஆட்சியில்தான் நடக்கும். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தமிழகத்தில் பா.ஜ.க. எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்றும் அமித் ஷா பேசினார்.

அமித் ஷா இந்தியில் பேசியதை அக்கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா தமிழில் மொழிபெயர்த்தார். அவர் மைக்ரோ இரிகேஷன் என்று என்று கூறியதை எச். ராஜா 'சிறுநீர்ப் பாசனம்' என்று மொழிபெயர்த்தது, சமூக வலைதளங்களில் உடனடியாக கேலிக்குள்ளானது. #சிறுநீர்பாசனம் என்ற ஹாஷ்டாகுடன் பலரும் இதுதொடர்பான பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர்.

இதற்கு முன்பாக, காலையில் #gobackamitsha என்ற ஹாஷ்டாக் சென்னை மற்றும் இந்திய அளவில் சிறிது நேரத்திற்கு ட்ரெண்ட் ஆனது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :