உலக அளவில் ட்ரெண்டிங் ஆன #GoBackModi ஹேஷ்டேக்

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோதியின் தமிழக வருகையை" கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அறிவித்த கருப்புக் கொடி போராட்டத்தால் வியாழக்கிழமையன்று சென்னையே ஸ்தம்பித்து போனது.

இது தொடர்பாக இணையத்திலும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த இளைஞர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் மோதியின் வருகையை கண்டித்து #GoBackModi என்ற ஹேஷ் டேகுடன் தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்தனர். இந்த ஹேஷ் டேக் உலக அளவில் டிரெண்டிங் ஆனது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோதியை 'தமிழகம்' ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை ஒட்டு மொத்த இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், உலகிற்கே இந்த ஹேஷ்டேக் மூலம் எடுத்துரைத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

#GoBackModi என்ற ஹேஷ் டேகில் வியாழக்கிழமை பிற்பகல் வரை மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன.

களத்தில் எந்த அளவிற்கு போராட்டம் நடக்கிறதோ அதன் வீரியத்தை இவர்கள் இணையத்தில் பிரதிபலிக்கச் செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கருப்பு உடை அணிந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டும், தங்கள் எதிர்ப்புகளை நெட்டிசன்கள் பதிவு செய்தனர். இதில் சில அரசியல் தலைவர்களும் அடங்குவர்.

எப்படி இந்த #GoBackModi ஹேஷ் டேக் உலகளவில் டிரெண்ட் ஆனது? இது தமிழகத்தில் உள்ள தமிழர்களால் மட்டும் சாத்தியமில்லை. வட மாநில மக்களும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலரும் தமிழர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தெலுங்கு பேசும் மாநிலம் ஒன்றைச் சேர்ந்த ஒருவர் இட்ட பதிவு:

அமெரிக்கா, பிரிட்டன், சௌதி, ஜப்பான், கென்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும், இது குறித்து ட்வீட் செய்து, இங்கு நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தந்துள்ளனர்.

தமிழக மக்களின் மீது பயம்

#GoBackModi ஹேஷ் டேகை பயன்படுத்தி, மோதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல பதிவுகளை இட்ட சென்னையை சேர்ந்த கனிமொழியிடம் இது குறித்து கேட்ட போது, "இந்த ஹேஷ் டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆகும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. விவசாயிகள் மட்டுமின்றி பிரதமர் மோதியால் சாமானிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான வெளிப்பாடுதான் இது" என்று கூறினார்.

இப்படியான எதிர்ப்பால், தற்போது பிரதமர் மோதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், தமிழக மக்களின் மீதான பயம் அவருக்கு அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார் கனிமொழி.

தமிழக மக்களின் ஒற்றுமையானது ஒரு நாள் உலகறிந்த எழுச்சியாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சாரம்

இது முற்றிலும் தமிழகத்தில் பா.ஜ.கவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் செயல் என்று கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன்.

#GoBackModi என்பது சமூக வலைதளங்களில் எதிர்கட்சிகளால் உருவாக்கப்பட்ட செயற்கையான பிரச்சாரம் என்றும், ஊடகங்களும் இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாகவும் வானதி குறிப்பிட்டார்.

திமுக பங்கு

காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் கோபமாக இதை பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த வானதி, மக்களிடம் ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திமுகவின் தொழில்நுட்ப பிரிவுக்கும் இதில் பங்குள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பா.ஜ.கவிடம் நியாயம் இருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகள் நலன் மீதும் பா.ஜ.க அக்கறை கொண்டிருப்பதாகவும் வானதி கூறினார்.

காவிரி விவகாரம் குறித்து பிரதமர் மோதி வாய் திறந்தால் மட்டும் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா என்று கேள்வி எழுப்பிய அவர், தங்களின் தோல்வியை மறைக்கவே எதிர்கட்சிகள் இந்த செயலை கையில் எடுத்திருக்கிறார்கள் என்றார்.

"தமிழகத்திற்குள் பா.ஜ.க வந்துவிடும் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது" என்றும் வானதி கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: