You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விண்ணிலிருந்து பார்த்தால் இந்தியாவின் காற்று வித்தியாசமாக தெரிவது ஏன்?
- எழுதியவர், ஜோனதன் அமோஸ்
- பதவி, பிபிசி
இந்தியா மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளின் காற்றை விண்வெளியிலிருந்து பார்த்தால் ஏதோ தனியாகத் தெரிகிறது.
இதற்கு காரணம் ஃபார்மால்டிஹைடு என்ற வாயு. தாவரங்களிலிருந்து இயற்கையாக வெளியேறும் அல்லது பலவித மாசுபடுத்தும் நடவடிக்கைகளின் காரணமாக வெளிப்படும் நிறமற்ற வாயுவே இது.
உலக நாடுகளின் காற்றுத் தரத்தை அளவிடுவதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு அக்டோபரில் விண்ணில் ஏவிய சென்டினல்-5பி என்னும் செயற்கைகோள் இந்த வாயுவின் அடர்த்தி திடீரென அதிகரித்துள்ளதை கண்டறிந்துள்ளது.
வளி மண்டலத்தை சுத்தம் செய்வதற்குரிய கொள்கைகளை உருவாக்குவதற்கான தகவலாக இது பார்க்கப்படுகிறது.
நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற முக்கிய வாயுக்களுடன் ஒப்பிடுகையில், ஃபார்மால்டிஹைடின் சமிக்ஞை மிகவும் சிறியதாகும்; ஒரு பில்லியன் காற்று மூலக்கூறுகளில் ஃபார்மால்டிஹைடு மூலக்கூறுகள் ஒருசில மட்டுமே இருக்கும். ஆனால், பல பொதுவான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளின் அறிகுறியாக இது இருக்கலாம் என்று கூறுகிறார் பெல்ஜிய விண்வெளிக் கழகத்தை சேர்ந்த இசபெல் டி ஸெம்ட்.
"வேறுபட்ட, எளிதில் ஆவியாகிற கரிம சேர்மங்களை ஃபார்மால்டிஹைடு உருவாக்குகிறது. இதன் மூலம் இயற்கையாக தாவரங்களிலிருந்து மட்டுமல்லாமல், பெரும் தீ மற்றும் மாசுபாடு போன்றவற்றிலிருந்தும் இது உருவாகிறது" என்று பிபிசியிடம் பேசிய அவர் கூறினார்.
"இதன் அளவானது பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடுகிறது. ஆனால், 50-80 சதவீதம் வரையிலான சமிக்ஞைகள் குறிப்பிட்ட சில உயிரினங்களிலிருந்து வெளிப்படுகிறது. ஆனால், அதற்கும் மேல் மிகப் பெரிய விடயமாக தீயும், சுற்றுச்சூழல் மாசுபாடும் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான தீ சம்பவங்கள் நிலக்கரி சுரங்கங்களிலும், காட்டுத்தீயினாலும் மற்றும் குறிப்பாக விவசாய நிலங்கள் எரிவதாலும் ஏற்படுகிறது."
மேலும், இந்தியாவில் இன்னமும்கூட சமைப்பதற்கும், வெப்பமூட்டுவதற்கும் குறிப்பிடத்தக்க அளவு மரங்களே பயன்படுத்தப்படுகின்றன.
எளிதில் ஆவியாகிற கரிம சேர்மங்கள், நைட்ரஜன் மற்றும் சூரிய ஒளியுடன் சேர்ந்து வினைபுரியும்போது அது ஓசோனை உற்பத்தி செய்யும்.
இது மோசமான மற்றும் எரிச்சலூட்டும் சுவாச கோளாறுகளை உண்டாக்குவதுடன், குறிப்பிடத்தக்க சுகாதார பிரச்சனைகளையும் உண்டாக்கும்.
இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் உற்பத்தியாகும் இதுபோன்ற தீமை விளைவிக்கும் வாயுக்களை இமயமலைத் தொடர் எப்படி தடுக்கிறது என்பதை வரைபடத்தில் காணலாம்.
மிகவும் குறைந்தளவு தாவரங்கள் மற்றும் மக்கள் உள்ள வடமேற்கு இந்திய மாநிலமான ராஜஸ்தானில் ஃபார்மால்டிஹைடின் செறிவு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஃபார்மால்டிஹைடு மட்டுமல்லாமல் வளிமண்டலத்திலுள்ள வாயுக்களான நைட்ரஜன் டையாக்ஸைடு, ஓசோன், சல்பர் டையாக்ஸைடு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு மற்றும் வாயுத்தொங்கல்களை (சிறிய துளிகள் மற்றும் துகள்கள்) கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வாயுக்களுமே நாம் சுவாசிக்கும் காற்றை பாதிப்பதால் நமது உடல் பாதிப்படைவதோடு, பருவ நிலை மாற்றத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது.
இதுபோன்ற தரவுகளை பெறுவதற்கு ஏற்கனவே செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்பட்ட ஸ்பெக்ட்ரோமீட்டர் அமைப்பான ஓமினியை விட, தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள ட்ரோபோமி ஆறு மடங்கு வேகமாக செயல்படக்கூடியது.
"தகவல்களை வேகமாக பெறுவதற்கும், சிறியளவிலான மாசு மற்றும் குறிப்பிட்ட நகரங்களின் தரவுகளை பெறுவதும் இதன் மூலம் சாத்தியமாகிறது. டெஹ்ரானை சுற்றியுள்ள மாசுபாட்டை ஆய்வு செய்வதற்கு எங்களுக்கு 10 வருடத் தரவுகள் தேவைப்பட்டன. ஆனால், ட்ரோபோமி அமைப்பின் மூலம் வெறும் நான்கு மாத தரவுகளை கொண்டே ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வரவியலும்" என்று அவர் மேலும் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்