You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை: சீனாவை மீண்டும் முந்தியது அமெரிக்கா
தற்போதுள்ள உலகின் முன்னணி சூப்பர் கம்ப்யூட்டரை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான அளவு சக்திவாய்ந்த 'சம்மிட்' என்னும் சூப்பர் கம்ப்யூட்டரை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
இந்த கணினியால் நொடிக்கு 200,000 ட்ரில்லியன் அல்லது 200 பெட்டாஃபிளாப்ஸ் கணக்கீடுகளை மேற்கொள்ள முடியும்.
தற்போது வரை உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரான சீனாவின் சன்வே டைஹுலைட் ஒரு நொடிக்கு 93 பெட்டாஃபிளாப்ஸ் கணக்கீடுகளை மேற்கொள்ளும் திறனை கொண்டுள்ளது.
அமெரிக்காவின் சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் வானியல், இயற்பியல், உயிரியல் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படும்.
ஐபிஎம் மற்றும் என்விடியா நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர் அமெரிக்காவின் டென்னீஸி மாகாணத்திலுள்ள ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அளவில் மிகப் பெரியதாகவும், விலையுயர்ந்ததாகவும் இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் சிறப்புவாய்ந்த மற்றும் தீவிரப் பணிகளை செய்வதற்காக ஆயிரக்கணக்கான ப்ராசசர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டரில் 4,608 கம்ப்யூட் சர்வர்கள் மற்றும் 10 பைட்ஸ்க்கும் மேற்பட்ட நினைவகத்தையும் கொண்டுள்ளது.
சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கப்படும்போதே மரபணு குறியீட்டை ஒப்பிட்டு பார்த்து கணக்கீடுகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக அந்த ஆய்வகத்தின் இயக்குனரான தாமஸ் சாச்சாரியா தெரிவித்துள்ளார்.
மீண்டும் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா
கடந்த 2017ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட உலகின் 500 முன்னணி சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் அமெரிக்காவின் 143 கம்ப்யூட்டர்களும், சீனாவின் 202 கம்ப்யூட்டர்களும் இடம்பிடித்திருந்தன.
அமெரிக்காவின் இதற்கு முந்தைய சூப்பர் கம்ப்யூட்டரான டைட்டன் அந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருந்தது.
"இந்த பட்டியலில் யார் முதலிடத்தை பெறுகிறார் என்பது எவ்வளவு முக்கியம் என்றும், அதற்கான போட்டியில் நாங்கள் தற்போது நாங்களும் இருக்கிறோம் என்றும் எங்களுக்கு தெரியும்" என்று இந்த சூப்பர் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமெரிக்காவின் எரிசக்தித்துறை செயலர் ரிக் பெர்ரி கூறினார்.
"ஒரு சாதாரண மேசை கணினியில் சேமிக்கப்பட்டுள்ள 30 வருட தரவுகளை ஒரேயொரு மணிநேரத்தில் கணக்கீடு செய்யும் திறனுடையது" என்று அவர் மேலும் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்