உலகப் பார்வை: கிம் ஜோங் - உன்னை தேடிய தென் கொரியா மக்கள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

முதல்முறையாக டிரம்ப் - கிம் சந்திப்பு : உற்றுநோக்கும் உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் நடைபெற்று வரும் நிலையில், அது குறித்த செய்திகள், காணொளி மற்றும் படங்கள் உலகம் முழுவதும் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த சந்திப்பு குறித்த ட்வீட் செய்திகளை தென் கொரியா அதிபர் உள்பட பல தலைவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தென் கொரியாவில் மிகவும் பிரபலமான இணைய தேடுதளமான 'நேவர்' -ல் இன்று அதிகம் தேடப்பட்ட வார்த்தை கிம் ஜோங் - உன் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மாநாடு நடக்கும் இடத்தில் சந்தித்து கொண்ட டிரம்ப் மற்றும் கிம் ஆகிய இருவரும் முதல்முறையாக கைகுலுக்கி கொண்டனர்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அமெரிக்கா தஞ்சம் மறுப்பு

தனது முன்னாள் கணவனால் பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட எல் சால்வடோர் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தஞ்சம் கோரிய விண்ணப்பத்தை அமெரிக்க அரசு முதன்மை வழக்கறிஞர் (அட்டார்னி ஜெனரல்) நிராகரித்துள்ளார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்ற தீர்ப்பாக இது கருதப்படுகிறது.

குடும்ப வன்முறை மற்றும் ஒரு குழுவினால் நடத்தப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் புகலிடம் அளிப்பது கட்டாயம் அல்ல என்று அமெரிக்க அரசு முதன்மை வழக்கறிஞரான ஜெஃப் செஷன்ஸ் தெரிவித்தார்.

மேலாடையின்றி குளிப்பதற்கு கேட்டலோனியா பெண்கள் ஆதரவு

பார்சிலோனா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்கள் அங்குள்ள பொது நீச்சல் குளங்களில் மேலாடை இன்றி குளிப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அங்கு இது தொடர்பாக நிலவும் உள்ளூர் தடை உத்தரவுக்கு எதிராக இப்பெண்கள் வாக்களித்துள்ளனர்.

மேலாடை இன்றி குளிப்பதற்கு ஆதரவாக 61 சதவீதமும், அதற்கு எதிராக 39 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ரோஜர் பெடரரின் சாதனை மட்டுமே நோக்கமல்ல: நடால்

ரோஜர் பெடரரின் சாதனையான 20 கிராண்ட்ஸ்லாம்களை முறியடிக்க தான் விரும்பிய போதிலும், அது மட்டுமே தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று இல்லை என ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த பிரென்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் பிரிவு இறுதியாட்டத்தில் வென்ற ரஃபேல் நடால் , 11-ஆவது முறையாக ஃபிரென்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இது அவரது 17-ஆவது கிராண்ட்ஸ்லாம் ஆகும்.

''எனக்கும் பெடரரின் சாதனை குறித்த லட்சியம் உள்ளது. ஆனால், அது மட்டுமே என் மனதை ஆக்கிரமிக்கவில்லை'' என்று ரஃபேல் நடால் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: