‘உயரம் குறைவாக இருக்கிறீர்கள், ஆசிரியர் ஆக முடியாது’ - விநோத விதிமுறை

குள்ளமாக இருக்கிறார் என்பதற்காக சீனாவில் இளம் பெண் ஒருவருக்கு ஆசிரியர் ஆகும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. லி என்ற அந்தப் பெண் 150 சென்டி மீட்டர் அதாவது 4 அடி 9 அங்குலத்திற்கு கீழ் இருந்ததால் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறுகிறது ஷாங்க்ஸி நியூஸ் என்ற இணையதளம்.

லி மட்டுமல்ல சீனாவின் பல மாகாணங்களில் உள்ள குள்ளமான பெண்களுக்கும் இதுதான் நிலைமை.

இது போன்ற விதிமுறைகள் பாகுபாடு கொண்டதாக உள்ளதாக பொங்குகின்றனர் சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள். சீன கல்வி கட்டமைப்பில் உள்ள பிரச்னைகளை இந்த செய்தி வெளிச்சம் போட்டு காட்டுவதாக பலர் கூறுகின்றனர்.

முக்கியமான விஷயங்களில் போதிய கவனம் செலுத்தாமல் உயரம் போன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கலைந்து போன கனவுகள்

ஷாங்க்‌ஸி நார்மல் பல்கலைக்கழகத்தில் 2014ல் சேர்ந்த லி இந்தாண்டு ஆசிரியர் படிப்பை முடிக்கவிருந்தார். ஆங்கிலம் அவரது முக்கிய பாடமாக இருந்தது.

ஆனால் இந்தாண்டு மே மாதம் அதாவது படிப்பு முடிய சற்று முன்தான் அந்த அதிர்ச்சியான செய்தி வெளியானது. லி ஆசிரியர் ஆக முடியாது என்பதுதான் அது.

வடக்கு ஷாங்க்ஸி மாகாணத்தை பொறுத்தவரை ஒரு ஆண் ஆசிரியாக வேண்டுமென்றால் 155 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேல் இருக்கவேண்டும். பெண் என்றால் 150 சென்டி மீட்டருக்குமேல் இருக்கவேண்டும்.

சிறாருக்கான ஆசிரியராக வேண்டுமென்றால் 5 சென்டிமீட்டர் தளர்வு உண்டு. ஆனால் 140 சென்டிமீட்டர் அதாவது 4 அடி 6 அங்குலம் உயரமே உள்ள லி 2 பிரிவிலும் தகுதிபெறவில்லை.

"நான் படித்த நான்கு ஆண்டுகளில் எனக்கு உயரத் தகுதி இல்லை என்பது ஒருவருக்கு கூட தெரியவில்லை" என்று ஷாங்க்ஸி நியூஸ் சேனலிடம் கூறினார் லி.

"இதனால் எனது ஆசிரியர் கனவே தகர்ந்துபோனது" என்கிறார் லி.

இந்த விமர்சனம் குறித்து ஷாங்க்‌ஸி பல்கலைக்கழகம் பதில் எதுவும் தரவில்லை. இதுபோன்ற விதிகள் சீனாவின் மற்ற பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் உண்டு. ஆனால்

இந்த விதிமுறை மாணவர்கள் நலன் கருதி கொண்டுவரப்பட்டவை என்கின்றன அம்மாநில அரசுகள். ஆசிரியர்களுக்குகரும்பலகை உயரம் எட்ட வேண்டுமல்லாவா என இந்த விதிக்கு விளக்கம் தருகிறார்கள் அதிகாரிகள்.

எனினும் இது போன்ற விதிகளுக்காக அவர்கள் அண்மைக்காலமாக கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சிச்சுவான், ஜியாங்க்ஸி, குவாங்க்ஸி மாகாண அரசுகள் சர்ச்சைக்குரிய விதியை நீக்கிவிட்டன. ஆனால் அதை தொடர்ந்து கடைபிடித்து வரும் ஷாங்க்ஸி அரசு சமூக ஊடகங்களில் பெரும் வசைபாடல்களை சந்தித்து வருகிறது.

"இது என்ன அழகிப் போட்டியா?"

பிரபலமான சைனோ வைபோ மைக்ரோபிளாக்கில் லி- யின் அவல நிலை குறித்து வேதனை தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் எழுதியுள்ளனர். ஆசிரியர் ஆவதற்கான அளவுகோலில்

திறமை, ஒழுக்கம் போன்ற முக்கியமான தகுதிகளை விட உயரம் போன்ற அற்ப விஷயங்களில் கவனம் செலுத்துவது குறித்து அரசை அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இது போன்ற விதிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆசிரியர்கள் திறமை, தரம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்; உயரத்தை கணக்கிட இது ஒன்றும் அழகிப் போட்டி இல்லை என கூறியுள்ளார் மற்றொரு பதிவர்.

குள்ளத்தன்மை உள்ளவர்களுக்கு எதிரான பாகுபாடு இது என மற்ற பலர் தெரிவித்துள்ளனர். "யாருமே குள்ளமாக பிறக்கவிரும்புவதில்லை...அவ்வாறு பிறப்பவர்கள் மனிதர்கள் இல்லையா என்றும் காட்டமாக வினவியுள்ளார் ஒருவர்.

இந்த விதி ஆசிரியர்கள் தேர்வு முறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இது போன்ற சந்தேகங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாகவே எழுப்பப்பட்டு வருகின்றன.

ஷாங்காயில் ஒரு காப்பகத்தில் குழந்தைகள் மோசமாக நடத்தப்படும் வீடியோ பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் தேசிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதே மாதத்தில் பெய்ஜிங்கில் ஒரு மையத்தில் குழந்தைகளை தூங்கவைக்க ஊசிகள் போடப்பட்டு மருந்துகள் தரப்பட்டதாகவும் சர்ச்சைகள் வெடித்தன.

தவறாக நடந்துகொண்டதாக கூறி ஒரு சின்னஞ்சிறு குழந்தைக்கு ஆசிரியை கட்டாயப்படுத்தி கொதிக்கும் சுடுநீரை புகட்டும் காட்சியும் மே மாதம் சமூகத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்னஞ்சிறுவர்களுக்கான பள்ளிகளில் ஆசிரியர்களின் தரம் வெகுவாக குறைந்துவிட்டது என எழுதியுள்ளார் ஒருவர். இவர்கள் எப்படி ஆசிரியர் ஆனார்கள் என கொதிக்கிறார் மற்றொருவர்.

இதுபோன்றவர்களால்தான் ஆசிரியப்பணிக்கே கெட்ட பெயர் என ஆதங்கப்படுகிறார் மற்றொருவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :