8 வழிச்சாலை: கால்நடைகளுக்கு கறுப்புக் கொடி கட்டி போராட்டம்

காணொளிக் குறிப்பு, கடவுளே 8 வழிச்சாலை வேண்டாம்: வழிபாடு நடத்தி எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

சேலம் மாவட்டம் குள்ளம்பட்டியில், எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கால்நடைகளுக்கு கறுப்புகொடி கட்டி அப்பகுதி விவசாயிகள் கோயிலில் வழிபாடு நடத்தினர்.

சென்னை - சேலம் இடையே அமைக்க திட்டமிடப்படும் புதிய எட்டு வழி சாலைக்கு விவசாயிகளிடையே எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், குள்ளம்பட்டி பகுதியில் விவசாயிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறனர்.

இதனிடையே அக்கிராம மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு கறுப்பு துணிகளை கட்டி அரசின் புதிய விரைவு சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் விளைநிலங்களை சுரண்ட வேண்டாம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க வேண்டாம் என்ற வாசகங்களை கொண்ட தட்டிகளை கையில் ஏந்தியபடி அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் வழிபாடும் நடத்தினர்.

போராட்டம்
போராட்டம்

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சார்பாக பேசிய விவசாயி தமிழ் செல்வன், "தமிழகத்தில் 28 லட்சம் ஹெக்டேர் விவசாயப் பகுதிகள் இருந்த நிலை மாறி தற்போது 22 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் மட்டுமே உள்ளத. நல திட்டங்கள் என்ற பெயரில் இவ்வாறு சிறுக சிறுக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டால் சுவாசிக்க காற்றுக்கும் , பசிக்கு உணவுக்கும் எங்கே செல்வோம்" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்று, சுவாசிக்கும் ஆக்ஸிஜனை டின்னில் அடைத்து விற்பனை செய்கின்றனர். இதன் விலை585 ரூபாய். இதனை 150 முறை பயன்படுத்த முடியும், இவ்வறான அவல நிலை தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் வரகூடாது. அதற்காகவாவது விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும்" என்றார் அவர்.

டெல்லியில் உள்ளது போல வாகன கட்டுப்பாடு இங்கு கொண்டு வரவேண்டும். ஆனால் இங்கோ வாகன கட்டுப்பாட்டு கிடையாது, வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இயற்க்கை அழிக்கப்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசு விளைநிலங்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என்றும் விளைநிலங்களை எத்தனை கோடி கொடுத்தாலும் விட்டுத்தர தயாராக இல்லை என்றும் தெரிவித்த தமிழ் செல்வன், நீருக்கும் பாலுக்கும் தட்டுபாடு வராமல் பாதுகாப்பது முக்கியம் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: