நாளிதழ்களில் இன்று: விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் தீவிரவாத குழுக்கள்- அமெரிக்கா
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி

பட மூலாதாரம், Getty Images
விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை 'தீவிரவாத மதக்குழுக்கள்' என்று அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், ''விஷ்வ இந்து பரிஷத் ஒரு தேசியவாத அமைப்பு. நாட்டு நலனுக்காக செயல்பட்டு வருகிறது. எனவே, சி.ஐ.ஏ.வின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது, பொய்யானது. சி.ஐ.ஏ. மன்னிப்பு கேட்டு, தனது தவறை சரிசெய்ய வேண்டும்'' என விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் சுரேந்திர ஜெயின் கூறியுள்ளார் என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2017-18ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகள் 1.20 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை அகற்றியுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக இந்தளவு தொகை வாராக்கடன் பிரிவில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 40,196 கோடி வாராக்கடனை அகற்றியுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் கனரா வங்கி, பி.என்.பி உள்ளிட்ட வங்கிகள் உள்ளன. மேலும் 2017-18ம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் 85,370 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமணி

பட மூலாதாரம், Getty Images
''தற்போது காவிரி நீர் 24 ஆயிரம் கன அடி வரை தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை பெய்வதால் இந்த மாதம் 10 டி.எம்.சி தண்ணீரைத் தமிழகத்துக்கு தருவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. காவிரி மேலாண்மை வாரியத்துக்குக்கான கர்நாடக உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அது சட்டரீதியானது'' என கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார் என்கிறது தினமணி வெளியிட்டுள்ள செய்தி.
தி இந்து (தமிழ்)

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் 7 குற்றவாளிகளை விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். "ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தோடு மத்திய அரசு ஒத்துப் போகவில்லை. மத்திய அரசின் பரிந்துரைபடியே முடிவு எடுக்கப்பட்டது" என்று தமிழக அரசுக்கு குடியரசுத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார் என தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












