நாளிதழ்களில் இன்று: ரஜினியின் அரசியல் - அரசு என்ன செய்ய வேண்டும்?
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Kaala
தி இந்து (தமிழ்) - 'ரஜினியின் அரசியல்'
காலா திரைப்படம் தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது தி இந்து (தமிழ்) நாளிதழ்.
"ரஜினியின் அரசியல் கருத்துகளுக்காகவோ, அந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் தொடர்பான சித்தரிப்புக்காகவோ 'காலா' படத்தை ஒரு ரசிகர் புறக்கணிக்க வேண்டுமா, கூடாதா என்பது ரசிகர்களுக்குள்ள உரிமை. எந்தவொரு கலைப் படைப்பையும் அது என்ன சொல்லவருகிறது என்று தெரியாமல் யூகங்களின் அடிப்படையில் முன்கூட்டியே தடைகளை விதிக்கக் கோருவதும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் பாசிஸத்தின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். படத்தை வெளியிடவே கூடாது என்று அழுத்தம் கொடுப்பதன் வாயிலாக மொழி, சாதி என்று பாகுபாட்டு உணர்ச்சிகளை வளர்த்தெடுப்பது கண்டிக்கத்தக்கது. 'காலா' படத்தைத் திரையிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் களைந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமை!" என்று விவரிக்கிறது அந்த தலையங்கம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடற்கூராய்வுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்'

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் ஆறு பேரில் உடல் இன்னும் உடற்கூராய்வு செய்யப்படாமல் உள்ளது. இந்த ஆறு உடல்களை உடனே உடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்தி பிரதான இடத்தை பிடித்துள்ளது.

தினமணி - '55 கல்லூரிகளில் 5,940 பி.இ. இடங்கள் ரத்து'
போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 55 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த பி.இ. இடங்களில் 5,940 இடங்களை ரத்து செய்து, அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
'தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 250 பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த கல்லூரிகளுக்கு 15 நாள் கால அவகாசம் அளித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான கல்லூரிகள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி விட்டன.
ஆனால், 55 பொறியியல் கல்லூரிகள் கால அவகாசம் முடிந்த பின்னரும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை. அதனைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிகளில் கணினி அறிவியல், இசிஇ, இயந்திரவியல், எம்.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் இடம்பெற்றிருந்த இடங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. அதாவது 5,940 இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என்று பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

உரிமையை வெச்சு சாகுபடி செய்ய முடியுமா?

பட மூலாதாரம், தி இந்து (தமிழ்)

தினத்தந்தி - 'தூத்துக்குடி: துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாரிடம் விசாரணை'
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாரிடம் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

"தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் புபுல் தத்தா பிரசாத், ராஜ்பீர்சிங், லால்பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகிய 5 பேர் வந்து உள்ளனர்.தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலையில் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் 9 போலீசார் உள்பட சுமார் 45 பேர் ஆணையம் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து அவர்களின் பதில்களையும் பதிவு செய்து கொண்டனர்." என்று விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தி இந்து - 'ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்
ரமலான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற முடிவு மத்திய அரசு எடுத்தது அதனை அனைவரும் மதிப்பார்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராம் கூறி உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து ஆங்கில நாளிதழ்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












