You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு பெண்ணின் பார்வையில் 'பத்மாவத்' திரைப்படம்
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி
சர்ச்சைகளை ஏற்படுத்திய பத்மாவத் திரைப்படத்தில் அரசி பத்மாவதி சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் ஆழமான கவலைகளை ஏற்படுத்துகிறது.
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய பத்மாவத் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வரும்போது தீக்குள் நிற்பதைப் போல உணர்ந்தேன்.
சில குழப்பங்களும் சில வன்முறை காட்சிகளும் மனதை சீற்றமடையச் செய்கின்றன.
படத்தின் கடைசி பதினைந்து நிமிடங்களில் ராணி பத்மாவதி உடன்கட்டை ஏறும் காட்சி மூளையை சூடேற்றுகிறது. நூற்றுக்கணக்கான ராஜபுத்திர மங்கைகளும் பத்மாவதியை தொடர்ந்து செல்வது மனதை பதைபதைக்கச் செய்கிறது.
செந்நிற புடவை அணிந்து, பொன்னாபரணங்களை அணிந்த பெண்கள், உடன்கட்டை ஏறுவதற்காக செந்தழலை நோக்கிச் செல்கின்றனர். அவர்களில் ஒருவர் கர்ப்பவதி. அவர்களை வெறியுடனும் கடுங்கோபத்துடன் தொடர்கிறார் அலாவுதீன் கில்ஜி.
கருப்பு வண்ண உடை உடுத்தி விரித்த முடியுடன் கோட்டையின் படிக்கட்டுகளில் பைத்தியம் போல் மூச்சிரைக்க ஓடும் காட்சி மனதை விட்டு அகலாது.
சரித்திர பதிவு
சமூக கட்டுப்பாடுகளையும் கணவரின் பெருமையையும் காப்பாற்றுவதற்காக தீயில் இறங்கும் ராணி பத்மாவதியை பார்ப்பதற்கும், கற்பழிப்பு போன்ற பாலியல் வன்முறைகளைக் நேரடியாக பார்ப்பதற்கும் எந்தவித வித்தியாசமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
உண்மையில் கடும்போக்காளர்கள் கூறியது போல இந்த திரைப்படம் ராஜபுத்திரர்களை தவறாக சித்தரிக்கவில்லை, பழம்போக்கு சித்தாந்தங்களை தவறு என்று கூறவில்லை. மாறாக அவற்றை மதிப்பதாகவும், அதுவே பெரும் தியாகம் என்றும் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதிகாசங்களில் இடம்பெற்றிருந்த உண்மையாக இருந்தாலும் கூட, யுத்தத்தில் வெற்றியடைந்தவர்களிடம் இருந்து பரம்பரை மானத்தை காப்பாற்றுவதற்காக, தோல்வியடைந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்களின் 'கற்பை' பாதுகாக்க அவர்களை தீயில் குதிக்க கட்டாயப்படுத்துவதுதான் தியாகமா?
உடன்கட்டை ஏறும் நடைமுறை பெண்ணின் சுயமான விருப்பமாக இருக்கமுடியாது அதுவொரு சமூக கட்டுப்பாடு, ஏன் சமூக அழுத்தத்தின் விளைவு என்றே சொல்லலாம்.
இந்த திரைப்படம் உடன்கட்டை எனப்படும் 'சதி'யின் பெருமையை தூக்கிப்பிடித்து சதி செய்வதாகவே எனக்கு தோன்றுகிறது.
அந்தக் கொடுமை இனி இல்லை...
பத்மாவத் திரைப்படத்திற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு, 'உடன்கட்டை' என்ற நடைமுறைக்கு எதிராக இல்லை, 'குடும்ப கெளரவம்' என்ற கடும் சுமையை பெண்ணின் கற்பில் மட்டுமே ஏற்றி, அவர்களின் உயிரை பறிப்பதற்கு எதிராக இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
மரியாதை, குடும்ப கெளரவம், கற்பு என்ற வார்த்தைகளுக்கான `தவறான` புரிதல்களுக்கு முன்பு, பெண்ணின் உயிருக்கு மதிப்பில்லை என்ற கருத்தை பிரம்மாண்ட திரையில் பார்க்கும்போது மனதில் எழும் ஆயாசம், உடன்கட்டை ஏறுவதற்காகக்கூட கணவனிடம் ராணி பத்மாவதி உத்தரவு கேட்கும்போது ஆவேசமாக உருமாறுகிறது.
உண்மையில் இந்த திரைப்படத்தில் ராணி பத்மாவதி சித்தரிக்கப்பட்டுள்ள முறை பற்றியே விவாதிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இதுவே குறைவான சித்தரிப்பு என்றா கர்ணீ சேனை அமைப்பு போர்க்கொடி உயர்த்தியது?
உடன்கட்டை ஏறுவது சிறப்பான செயலாக காட்டப்பட்டுள்ளது ஒருபுறம் சீற்றத்தை ஏற்படுத்துகிறது. மறுபுறம் ஒரு ராஜா பெண்ணை அழகான பொருளாக நினைத்து அடைய விரும்புகிறான், மற்றொருவன் தோற்கடிப்பட்டவரின் மதிப்புற்குரிய உடமையான அவனது 'மனைவியை' அபகரிக்க விரும்புகிறான் என்பது வேதனையை பன்மடங்கு அதிகமாக்குகிறது.
பெண் ஒரு உடமையா? திருமணத்திற்கு பிறகு அவளின் உலகமும் உயிரும் கணவன், குடும்பம், சாதி மற்றும் சமூகத்திற்கு அடிமைப்பட்டதா? கணவனை அவமானப்படுத்த வேண்டுமெனில் அவனது மனைவியை மானபங்கப்படுத்தினால் போதுமா?
ராஜபுத்திரர்களின் பெருமையை காப்பாற்றிய இந்த திரைப்படம் உண்மையில் யாருக்கு பங்கம் ஏற்படுத்துகிறது?
அவதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி 1540இல் எழுதிய காப்பியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் பத்மாவத். 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும், தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து எழுதப்பட்ட காப்பியம் 'பத்மாவதி'.
பத்மாவத் திரைப்படத்தில் இந்து ராணிக்கும், இஸ்லாமிய பேரரசனுக்கும் இடையில் அந்தரங்க உறவு இருந்ததாக கர்ணீ சேனை குற்றம் சாட்டியது போல் எந்த காட்சியும் திரைப்படத்தில் இல்லை.
ராணி பத்மாவதி அலாவுதீன் கில்ஜி அல்லது வேறு யார் முன்பும் நடனமாடுவது போலவோ, உடல் அங்கங்களை காட்டுவது போலவோ எந்த காட்சியும் காட்டப்படவில்லை.
உண்மையில் ராஜபுத்திரர்களை பெருமைப்படுத்தும் வகையில் அத்திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெண்ணின் மரியாதை
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ரூப் கன்வர் எனும் ராஜபுத்திர இளம் பெண் ராஜஸ்தானில் உள்ள தியோரலா கிராமத்தில், தனது கணவரின் சிதையுடன் வைத்து எரிக்கப்பட்டதை ராஜபுத்திர அமைப்புகள் ஆதரித்ததை நினைத்தால் என்று மாறுமோ மனிதர்களின் மனம் என்று என் மனம் பதறுகிறது.
இந்த திரைப்படத்திற்கு இத்தனை எதிர்ப்பும் சீற்றமும் எதற்கு என்று வியப்பாக இருந்தது. உண்மையில் கடும்போக்காளர்களின் சீற்றத்திற்கு காரணம் அச்சமே என்பது திரைப்படத்தை பார்த்த பின்பே புரிகிறது.
தங்களது பாரம்பரியத்தின் தவறான நடைமுறையை தங்களின் சொந்த கைக்கண்ணாடியில் பார்க்க விரும்பாததே இத்தனை பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு காரணம் என்றும், இன்றைய தலைமுறையினரின் முன் அதை எடுத்து வைக்க விரும்பாததுதான் காரணம் என்றும் எனக்கு தோன்றுகிறது.
உடலை மறைக்கும் ஆடைகள், தலையில் முக்காடு, உடலை அழுத்தும் கனமான ஆபரணங்களை சுமக்கும் கட்டுப்பாடுகளுடன் உடன்கட்டை என்ற சுமையும் கூடுதலானால் உண்மை அழகு வெளிப்படுமா அல்லது புழுக்கம் ஏற்படுமா?
திரைப்படங்கள் பலவிதங்களில் எடுக்கப்படலாம், அவை விமர்சனத்துக்கும், விவாதத்திற்கும் உள்ளாக்கப்படலாம்.
ஆனால் அபலைகளாக அழுத்தங்களுடன் வாழ்ந்த பெண்களை திரைப்படங்களில் மரியாதையுடனும் சிறப்புடனும் காட்டுகிறேன் என்ற முகமூடியில் மறைந்துக்கொண்டு, உண்மையை திரைபோட்டு மறைக்கக்கூடாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்