You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு திரைப்படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளிவர என்ன செய்ய வேண்டும்?
தணிக்கைச் சான்றிதழ் தரும் அமைப்பில் அரசியல் ஆதிக்கம் நிலவுவதுதான், திரைப்படங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள காரணமாக அமைகிறது என்கிறார்கள் படைப்பாளர்கள்.
பத்மாவத் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பும், அத்திரைப்படம் களத்தில் பல எதிர்ப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால், களத்தில் எதிர்ப்புகளை சந்திக்கும் முதல் படமல்ல இது. கடந்த காலங்களில் இது போன்று பல படங்கள் எதிர்ப்புகளை சந்தித்திருக்கின்றன.
களத்தில் எதிர்ப்புகளை சந்திப்பதைவிட `தணிக்கைச் சான்றிதழ்` பெறுவதிலேயே பல போராட்டங்களை சந்திக்க நேரிடுகிறது என்கிறார்கள் படைப்பாளர்கள்
கடல் குதிரைகள் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியீட்டு பணியில் இருக்கும் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் "சென்சார் அமைப்புக்கு என்று பல விதிகள் இருக்கின்றன. ஆனால், அது அனைத்தையும் கடந்து அங்கு ஆளுங்கட்சியின் ஆதிக்கம் நிலவுகிறது. அதுதான் படைப்பாளர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்." என்கிறார்.
அவர் அண்மையில் தனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை பகிர்கிறார்.
"கடல்குதிரைகள் திரைப்படத்தை தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பி இருந்தோம்.
திரைப்படத்தை பார்த்தவர்கள் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்துவிட்டார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், `இந்த திரைப்படம் `ஈழம்` குறித்து பேசுகிறது` என்பதுதான். சான்றிதழ் தர மறுக்கும் கடிதத்தில் இந்தக் காரணத்தைதான் குறிப்பிட்டு இருந்தார்கள். நான் மேல்முறையீட்டுக்கு சென்றேன், 9 பேர் திரைப்படத்தை பார்த்தார்கள். அவர்களும் அதே காரணத்தைதான் குறிப்பிட்டார்கள். பல போராட்டங்களுக்குப் பின், திரைப்படத்திற்கு 28 வெட்டுகள் கொடுத்து சான்றிதழ் கொடுத்தார்கள்" என்கிறார்.
இவர் இதற்கு முன்பே காற்றுக்கென்ன வேலி, உச்சிதனை முகர்ந்தால் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். அப்போதும் சான்றிதழ் பெறுவதில் பிரச்னைகளை எதிர் கொண்டவர்.
சென்சார் அமைப்பில் போராடி சான்றிதழ் பெற்ற பின்னும் கூட அரசு வெவ்வேறு விதங்களில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது என்கிறார்.
அரசியல் அழுத்தம்
"படம் எந்த அரசியலையும் பேசாமல் இருந்தால், சான்றிதழ் தரும் அமைப்புக்கோ அல்லது அரசுக்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், திரைப்படம் அரசியலை பேசிவிட்டால், அனைத்து அழுத்தங்களையும் அரசு தரும். சான்றிதழ் பெற்ற பின்னும் கூட, அத்திரைப்படத்தை முடக்குவதற்கு தன்னாலான அனைத்து வழிகளிலும் முயற்சிக்கும். கடல்குதிரை படத்திற்கே அதுபோன்ற அனுபவம் ஏற்பட்டது."
"படம் கூடங்குளம் மக்கள் போராட்டத்தை பற்றிப் பேசுகிறது. அதனால், அந்தப் பகுதி மக்களும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கான சிறப்பு காட்சியை அவர்களுக்கு திருநெல்வேலியில் ஏற்பாடு செய்திருந்தேன். தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின்னும் கூட அந்த சிறப்பு காட்சியை ரத்து செய்வதற்கான அனைத்து அழுத்தங்களையும் அரசு கொடுத்தது." என்கிறார்.
"சென்சாருக்கான கொள்கைகளை கடந்து, ஆளும் கட்சிகளின் கொள்கைகளுக்கு முரணாக அல்லது அந்த கொள்கைகளை விமர்சிக்கும், கேள்விக்கு உள்ளாக்கும் கருத்துகள் திரைப்படத்தில் இருந்துவிடக் கூடாது. அப்படி இருந்தால் அனைத்து அழுத்தங்களையும் சந்திக்க நேரிடும்." என்று விவரிக்கிறார் புகழேந்தி தங்கராஜ்.
இணையத்தளத்தில் அனைத்தும் கிடைக்கும் இக்காலத்தில், சென்சார் என்ற அமைப்பே தேவையில்லை என்கிறார் அவர்.
தேசிய விருதுப் பெற்ற `ஜோக்கர்` திரைப்படத்தின் இயக்குநர் ராஜூமுருகனின் கருத்தும் இதேபோலத்தான் இருக்கிறது.
அமைப்பை புதுப்பித்தல்
ராஜூமுருகன், "அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்று எல்லாம் இல்லை. அரசாங்கத்தை எந்தக் கட்சி ஆள்கிறதோ அவர்களின் குரலாகத்தான் சென்சார் அமைப்பில் இருப்பவர்கள் இருக்கிறார்கள்." என்கிறார்.
`ஜோக்கர்` திரைப்படத்திற்கு நான் பெரிதாக எந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவில்லை. அதற்காக, அவர்களுக்கு அந்த சமயத்திலேயே நன்றியும் தெரிவித்தேன் என்றாலும், அந்த அமைப்பில் அரசியல் நிலவுவதை எப்போதும் உணர முடிகிறது என்கிறார் ராஜூமுருகன்.
"ஒரு படைப்பிற்கு சான்றிதழ் தரும் அமைப்பில் முழுவதுமாக படைப்பாளிகள் மட்டும்தானே இருக்க வேண்டும்? அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் நோக்கம் கொண்டவர்கள் அங்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்புகிறார்.
எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திரைக் கலைஞர்களை மட்டுமே கொண்ட அமைப்பாக தணிக்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பு இருக்க வேண்டும். அந்த அமைப்பை புதுப்பிக்க வேண்டிய தருணம் இது என்பது ராஜூமுருகனின் கருத்து.
சட்டத்தின்படியே அனைத்தும்
திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது சட்டத்தின்படியே நடக்கிறது என்கிறார் தணிக்கைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் எஸ்.வி.சேகர்.
"திரைப்படத் தணிக்கை குழுவில் இருப்பவர்களின் கருத்து, தணிக்கை வழங்குவதில் ஆதிக்கம் செலுத்தும். ஆனால், அவர்களின் கருத்து சட்டத்துக்கு, தணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு கருத்தைச் சொல்லி படத்திற்கு சான்றிதழ் மறுத்து விட முடியாது. ஏனெனில், ஏன் மறுக்கிறோம் என்ற காரணத்தை எழுத்துப் பூர்வமாக தர வேண்டும். அந்தக் காரணம் சட்டவிதிகளுக்கு எதிரானதாக இருந்தால், திரைப்படக் குழுவினர் நீதி மன்றத்துக்கு செல்லும்பட்சத்தில் தணிக்கை குழுவுக்கு சிக்கல் வரும்" என்று விவரிக்கிறார் எஸ்.வி. சேகர்.
பத்மாவத் திரைப்படம் குறித்து பேசிய சேகர், "திரைப்படத்தை தங்கள் மாநிலத்தில் வெளியிடலாமா கூடாதா என்று முடிவு செய்வது ஒரு மாநில அரசின் அதிகாரம். ஒரு படத்தால் பிரச்சனை வரும் என்று கருதினால், அந்த திரைப்படத்தை அவர்கள் தடை செய்யலாம். தணிக்கைத் துறை சான்றிதழ் அளித்துவிட்டது என்ற காரணத்துக்காகவே ஒரு திரைப்படத்தை அனுமதித்துவிட முடியாது. ஏனெனில், அந்த திரைப்படத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை எதிர் கொள்ள வேண்டியது மாநில அரசுதான்." என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்