You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பத்மாவதி திரைப்படத்தை வெளியிட தணிக்கை வாரியம் அனுமதி
சர்ச்சையை கிளப்பிய பாலிவுட் திரைப்படமான பத்மாவதியை வெளியிடுவதற்கு இந்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இந்து ராணி மற்றும் முஸ்லீம் ஆட்சியாளரை மையமாக கொண்ட கதையான இது நாடு முழுவதும் இந்து மற்றும் சாதிய குழுக்கள் போராட்டம் செய்வதற்கு வழிவகுத்தது.
இருந்தபோதிலும், தான் எந்த காட்சியையும் நீக்குவதற்கு பரிந்துரைக்கவில்லை என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம், இந்திய உச்சநீதிமன்றம் இப்படத்தின் சர்வதேச வெளியீட்டை தடை செய்யக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது.
14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜபுத்திர சாதியை சேர்ந்த இந்து ராணி பத்மாவதி மற்றும் முஸ்லீம் அரசர் அலாவுதீன் கில்ஜி குறித்த கதைதான் இந்த திரைப்படம். பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள நெருக்கமான காதல் காட்சியை இந்து மற்றும் ராஜ்புத் சாதியை சேர்ந்த குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த குற்றச்சாட்டை படத்தின் தயாரிப்பாளர்கள் மறுத்துள்ளனர்.
பத்மாவதி என்பது ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், ராஜபுத்திரர்களிடையே பெண் கௌரவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
எதிர்ப்பாளர்களின் கருத்துக்களை கருத்தில் கொள்ள சிறப்பு குழு ஒன்றை நியமித்திருப்பதாகவும், இதுகுறித்து "நீண்ட விவாதம் மேற்கொள்ளப்பட்டது" என்று தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
"திரைப்படத் தயாரிப்பாளர்களையும் சமுதாயத்தையும் மனதில் கொண்டு சமநிலையான பார்வையுடன் இந்த படம் அணுகப்பட்டது" என்று அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் வரலாற்றை துல்லியமாக குறிப்பிடவில்லை என்று திரைப்படத்தில் குறிப்பிட வேண்டும் என்று தணிக்கை வாரியம் வலியுறுத்தியது. மேலும், இது 19 ஆம் நூற்றாண்டில் தடைசெய்யப்பட்ட விதவைகள் தன்னைத் தானே எரித்துக் கொள்ளும் சடங்கை ஆதரிக்கவில்லை என்பதை திரைப்படத்தில் குறிப்பிட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த படத்தில் முஸ்லிம் அரசனான கில்ஜி தன் கனவில், பத்மாவதியுடன் காதல் செய்வதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று வதந்தி பரவியது. எனவே, இத்திரைப்படத்திற்கு எதிராக பல அமைப்புகள் எதிராக போராடி வருகிறது. அதில் செல்வாக்கற்ற சாதிய அமைப்பான ராஜபுத்திர கார்னிக் சேனாவும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பு இந்த படத்திற்கு தடை கோருகிறது.
முன்னதாக இந்த அமைப்புதான், திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று, படப்பிடிப்புக்கு இடையூறு செய்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில், இதே அமைப்புதான், படத்தின் இயக்குநர் பன்சாலியை அறைந்தது. மேலும், ராஜபுத்திர சமூகத்தினர் பன்சாலியின் உருவபொம்மையை எரித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :