You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசியலில் ரஜினி: ட்விட்டரில் குவிந்த பிரபலங்களின் ஆதரவும் எதிர்ப்பும்!
ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை இன்று அறிவித்தார். அதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சக நடிகர்கள், மக்கள் என தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அதனை இங்கு தொகுத்து வழங்கி உள்ளோம்.
நடிகர் கமலஹாசன் தன் ட்வீட்டர் கணக்கில். "சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், கமலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் அரசியலில் வெற்றிப்பெற தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக திகழ வாழ்த்துக்கள் என நடிகர் பிரசன்னா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக், ரஜினிகாந்த் ஆனந்த அதிர்ச்சி அளித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து பின்வாங்கக் கூடாது எனவும், ரசிகர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விவேக் கூறியுள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தான் ஆதரிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே வாசன் கருத்து தெரிவித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பு நியாயமான எதிர்பார்ப்பாகதான் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ரஜினி பூர்த்தி செய்துள்ளார் என்றார் .
புதிய இயக்கதுக்கான நிர்வாக பணிகளை தொடங்க போவதாக அறிவித்துள்ளார். அந்தப் பணி நல்ல பணியாக அமைய தான் வாழ்த்துவதாக ஜி.கே வாசன் தெரிவித்தார்.
ரஜினியின் ரசிகர்களை தான் வாழ்த்துவதாக கூறினார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன். ரஜினி தன் அரசியல் அறிவிப்பை வெளியிட்டதும் முதல்முதலாக வாழ்த்தினார் தமிழிசை. தனது ட்வீட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "துணுச்சலுடன் அரசியல்களத்திற்கு வருகிறேன் என அறிவித்திருக்கும் சகோதர்ர் ரஜினிக்கு வாழ்த்துகள்" என்றுள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்." என்றார்.
மேலும் அவர், "மற்ற விஷயங்களை, அவர் தனது அரசியல் நிலைப்பாடு, கொள்கைகளை விளக்கிய பின்தான் முடிவு செய்ய முடியும்" என்றார். அதுபோல அமைச்சர் ஜெயக்குமார், இனிய சகோதரர் ரஜினிக்கு தன் வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ, "நானே ரஜினி ரசிகன்தான். இங்கு சிஸ்டம் சரியாக உள்ளது. எந்த சிஸ்டம் சரி இல்லையோ அந்த சிஸ்டத்தை மாற்றிக் கொள்கிறோம்."
"தெளிவான சில முடிவுகள். தெளிவற்ற சில சொற்கள்." என்று ரஜினியின் அரசியல் முடிவை வர்ணித்தார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன்.
ரஜினி இன்று முன்வைத்த கொள்கைகள் எல்லாம் பொத்தாம் பொதுவானவை. எல்லாரும் சொல்லக்கூடியவை என்றார்
மேலும் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு மறைமுகமாக உதவுகிறாரோ என்ற ஐயத்தையும் எழுப்பினார் வீரபாண்டியன்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி, "அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து மட்டுமே அறிவித்துள்ளார். விரிவான தகவல்கள் இல்லை. அவர் படிப்பறிவில்லாதவர். இது ஊடகங்கள் மிகைப்படுத்திய ஒன்று, தமிழக மக்கள் புத்திசாலிகள்."
பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், " இந்த அரசியல் அறிவிப்பு புரிதல் இல்லாத அறிவிப்பு. குழப்பத்தின் வெளிப்பாடு இது. இதனால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை." என்றார்.
மேலும் அவர், ரஜினி யாருக்கோ மறைமுகமாக உதவுவது போல தெரிகிறது என்றார்.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், "ரஜினி அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இப்போதுள்ள அதிமுக அரசு அகல வேண்டும் என்பதில் தெளிவாக ரஜினி இருக்கிறார். ஆனால் அதே நேரம்,அறை முழுவதும் குப்பை கூழமாக இருக்கும் போது, ஒரு மூளையை மட்டும் சுத்தப்படுத்தி எந்த பயனும் இல்லை. எப்படி தமிழக அரசைப் பார்த்து மற்ற மாநிலத்தினர் சிரிக்கிறார்கள் என்று ரஜினி கூறுகிறாரோ அதே போலதான் பா.ஜ. க அரசை பார்த்து மொத்த இந்தியாவும் சிரிக்கிறது. அதனை அகற்றவும் உழைக்க வேண்டும்."
திமுக முதன்மைச் செயலாளரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன்,"அரசியல் நிலத்தில் சதுப்பு நிலங்களும் உண்டு, பாலை நிலமும் உண்டு. இதில் நடக்க உறுதியான மனம் வேண்டும். அந்த மனம் படைத்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முதல் அம்பையே இந்த ஆட்சி மீதி எறிந்து இருக்கிறார். அவரது கணை லட்சியத்தை தேடுகிறது"
தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான். ஆன்மீக அரசியல் பாராட்டுக்குரியது என பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தை நிஜ வாழ்க்கைக்கு வரவேற்பதாகக் கூறி, அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
தனக்கு குவிந்த ஆதரவுகள் மற்றும் எதிர்ப்புகளைத்தாண்டி "என்னை வாழ்த்திய, வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்" எனக்கூறி, தன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்