You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினியும் ரசிகர்களும் - 6 சுவாரஸ்யத் தகவல்கள்
நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களைச் சந்தித்து வருவதும், அச்சந்திப்பில் வரும் டிசம்பர் 31 அன்று அரசியலில் நுழைவது தொடர்பாக அறிவிக்கவுள்ளதாகவும்கூறியிருப்பதும் அவரது அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பை மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் ரசிகர்களை அவர் சந்தித்தபோது அவர் பேசியது மற்றும் அப்போது நடந்த சம்பவங்கள் பற்றிய ஆறு சுவாரஸ்ய தகவல்கள் இதோ.
- கடந்த 2008-இல் தனது ரசிகர்களை ரஜினி சந்தித்தபோது, அந்த மேடையில் "கடமையைச் செய், பலனை எதிர்பார்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. "கடமையைச் செய், பலனை எதிர்பாராதே," என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியதை ரஜினி அவமதித்து விட்டதாக அவருக்கு சில இந்து அமைப்புகள் அப்போது எதிர்ப்புத் தெரிவித்தன.
- தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்தின்போது ரசிகர்களை அழைத்து அவர்களுக்கு திருமண விருந்து கொடுக்க விரும்புவதாகவும், முடியுமானால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்றும் 2010-ஆம் ஆண்டு அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். இன்னும் அந்த விருந்து நிகழ்ச்சி நடக்கவில்லை.
- இந்த ஆண்டு மே மாதம் ரஜினி ரசிகர்களைச் சந்தித்த போது அந்த மேடையில் வெள்ளைத் தாமரையின் உருவம் இருந்தததால் ரஜினி பாரதிய ஜனதா கட்சியிடம் நெருக்கம் காட்டுவதாக அனுமானிக்கப்பட்டது. அதே சமயத்தில், பின்னாளில் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே நகர் இடைத் தேர்தலின் பாரதிய ஜனதா வேட்பாளர் கங்கை அமரன் ரஜினியை சந்தித்ததும், குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ரஜினி அறிவிக்கப்படலாம் என்று வெளியான செய்தியும் அந்த ஊகத்தை வலுவாக்கின.
- சமீப காலங்களில் ரஜினியை நேரில் சந்தித்துப் பேசி வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் திருச்சியில் நடந்த ஒரு மாநாட்டில் கூறினார். ஆனால், ரஜினி இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை.
- தமது பிறந்தநாள் விழாவுக்காக சென்னை வந்துவிட்டு ஊர் திரும்பும்போது, 22 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் மூன்று ரசிகர்கள் மரணம் அடைந்ததால், அப்போது முதல் தனது பிறந்தநாளன்று சென்னையில் இருப்பதைத் தவிர்த்து வருவதாகக் கடந்த 2012-ஆம் ஆண்டு கூறிய ரஜினி, 12-12-12 அன்று ரசிகர்களைத் தவிர்த்தால் நன்றாக இருக்காது என்பதால் சந்தித்ததாகக் கூறியிருந்தார்.
- பாட்டாளி மக்கள் கட்சி ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்ததால், கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தமது ரசிகர்கள் பா.ம.க போட்டியிடும் ஐந்து தொகுதிகளில் அக்கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்று கூறியிருந்தார். எனினும், திமுக- காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணியில் இருந்த பா.ம.க போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்