You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாதம் விவாதம்: ‘‘பணபலத்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம். பொது தேர்தலில் சாத்தியமில்லை‘’
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் பெற்றுள்ளார்.இந்த இடைத்தேர்தல் முடிவு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக அமையுமா?மக்களின் எண்ண ஓட்டத்தை ஒரு இடைத்தேர்தல் முடிவை கருத்தில் கொண்டு கணக்கிட இயலுமா? என்று வாதம் விவாதம் பகுதியில், கேட்டிருந்தோம்.
இதற்கு, பிபிசியின் முகநூல், ட்விட்டர் ஆகிய தளங்களின் நேயர்கள் அளித்த கருத்துகளை தொகுத்தளிக்கிறோம்.
''பணபலத்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம். பொது தேர்தலில் அது சாத்தியமில்லை'' என்கிறார் மஹி இந்திரன்.
''ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணத்தை ஆர்.கே நகர் தேர்தல் பிரிதிபலிக்க வில்லை.'' என்று கூறியுள்ளார் ராமசந்திரன் பார்த்தசாரதி
''ஆர். கே நகர் தேர்தலை வைத்து ஒட்டு மொத்த தமிழகத்தையும் அளவீடு செய்வதே அபத்தமானது'' என்பது மணி பழனிச்சாமியின் கருத்து.
''மாநில ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சி, மத்திய ஆளுங்கட்சி என்ற முப்பெரும் கட்சிகளுக்கு எதிராகப் பெற்றிருக்கும் வெற்றியைப் 'பணத்தால் பெற்ற வெற்றி' என்று மட்டும் சுருக்குவது சரியாக இருக்காது'' என்பது தினகரன் மணியின் பதிவாகும்.
''தமிழனத்தை காப்பாற்ற நிச்சயம் மாற்று சக்தி புதிதாக ஒருவர் வரவேண்டும் அவர் தினகரன் அல்ல'' என்கிறார் கார்த்திகேயன் என்னும் நேயர்.
''தினகரனின் வெற்றிக்கு பணம் மட்டும்தான் காரணம் என்று சொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் ஓட்டுக்கு 6000/- கொடுத்து இந்த ஓட்டுகளை பெற்றார் என்று கணக்கிட்டாலே 53 கோடி செலவாகும் இவ்வளவு பணத்தை குறுகிய காலத்தில் இறக்கி இத்தனை கட்டுப்பாடுகள் மத்தியில் பட்டுவாடா செய்வது என்பது சாத்தியமில்லை. மக்கள் திமுக அதிமுகவை நீக்கி ஒரு சின்னத்தை தேடினார்கள். அதுவே இந்த நிகழ்வு.பொதுத்தேர்தலிலும் இதே மனநிலையில் பெரும்பான்மையினர் உள்ளனர். ஆனால் மாற்று சின்னம் இன்னும் உருவாகவில்லையே'' என்று பதிவிட்டுள்ளார் கோபால் கிருஷ்ணன்.
''டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றதற்கு காரணம் பணம் அல்ல. மக்களின் மனோபாவம் மாறி விட்டது. அரசியல்வாதிகள் ஊழல் செய்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், யாரும் நமக்கு சும்மா வேலை செய்யமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள். கொள்ளை அடித்து ஜெயிலுக்கு போனாலும் மறந்து மன்னித்து விடுவார்கள். ஓட்டு போடும்போது இருப்பவர்களில் யார் நம்பிக்கையாக பணம்,வேலை,சோறு என்று தருவார்களோ...அவரே வெற்றியாளர்'' என்று தெரிவித்துள்ளார் விவேகானந்தன் ஆனந்த்
''மொத்தத்தில் ஆர் கே நகரில் நடந்தது தேர்தலே அல்ல, அது ஒரு வியாபாரம். ஓட்டுக்கள் விலைக்கு வாங்கப்பட்டன. வரும் தேர்தலிலும் இது தொடரும். ஜனநாயகத்திற்கு இனி இடமில்லை, என்பது வேதனையான விஷயம். இதில் மக்கள் சேவைக்கு இடமில்லை'' என்பது சரோஜா பாலசுப்ரமணியனின் கருத்தாக உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :