You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வரலாறு காணாத பனியால் முடங்கி போன அமெரிக்கா மற்றும் கனடா
வட அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கனடாவில் நிலவி வரும் வரலாறு காணாத உறைய வைக்கும் பனி 2018ம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் "ஐஸ் பெட்டி" என்றழைக்கப்படும் மின்னிசோட்டா மாகாணத்தில் வெப்பநிலையானது -38.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்து காணப்பட்டது.
"உலகின் மோசமான காலநிலையின் தாயகமாக" கருதப்படும் நியூ ஹாம்ப்ஷயரிலுள்ள மவுண்ட் வாஷிங்டனில் முதல் முறை குறைந்த வெப்பநிலையாக -36.6 டிகிரி செல்சியஸ் பதிவானது.
கனடாவின் சில பகுதிகளில் வட துருவம் மற்றும் புதன் கோளில் நிலவும் வெப்பநிலையை விட குளிரான சூழ்நிலை நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியாவில் உள்ள எரீ என்ற இடத்தில் கிறிஸ்துமஸ் தினம் முதல் தொடர்ந்து பொழிந்து வரும் பனி ஐந்து அடிக்கும் அதிகமான அளவு தேங்கியுள்ளது. "நம்பமுடியாத அளவுக்கு பொழிந்துள்ள இந்த பனியை" அப்புறப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தில் இந்த வாரத்திற்கு பிறகு கடுமையான பனிப்பொழிவு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூ ஜெர்சியின் பல பகுதிகளில் புத்தாண்டு தினத்தன்று நடைபெறுவதாக இருந்த கொண்டாட்டங்கள் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகப்படியான காற்று வெப்பநிலையை மேலும் குறைந்துவிடுவதாக வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கதகதப்பான ஆடைகளை அணிவதன் மூலம் தோலுறைவு மற்றும் அசாதாரணமான வகையில் உடலின் வெப்பநிலை குறைவதை தடுப்பதற்குறிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களை எச்சரித்துள்ளனர்.
உடல் முழுவதும் மூடப்படாமல் இருந்தால் 30 நிமிடங்களில் தோல் உறைந்துவிடும் வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
பருவநிலைமாற்றம் பற்றிய தனது பார்வையை மீண்டும் வலியுறுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், "அந்த நல்ல பழைய பருவநிலை மாற்றத்தை கிழக்கு அமெரிக்க பகுதிகள் சிறிது பயன்படுத்தலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிகாகோவில் நிலவும் கடுமையான குளிரின் காரணமாக 62 வயதான ஒரு முதியவர் உயிழந்த நிலையில் அவரது காரில் கண்டெடுக்கப்பட்டார்.
கன்சாஸ் நகரில் செவ்வாய்க்கிழமையன்று கார் சேதமடைந்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்த மோசமான பனிப் பொழிவே காரணமென்று கூறப்படுகிறது.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்