You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`வான்னாக்ரை` சைபர் தாக்குதலுக்கு வட கொரியாவே காரணம்' - அமெரிக்கா
உலகெங்கும் பல்வேறு கணிணிகளை தாக்கிய `வான்னாக்ரை` (wannacry) எனும் தீங்கிழைக்கும் மென்பொருள் பரவலுக்கு வட கொரியாதான் நேரடி காரணம் என்று அமெரிக்க அரசு நிர்வாகம் குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கணிணிகளை தாக்கிய 'வான்னாக்ரை' மருத்துவமனை, மற்றும் வங்கிகளை செயல்படவிடாமல் செய்தது.
இந்த தீங்கிழைக்கும் மென்பொருள் 150 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 300,000 கணிணிகளை தாக்கியது. இதனால் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.
'வால் ஸ்ட்ரீட்' நாளிதழலில் வந்த ஒரு கட்டுரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உதவியாளர் தாமஸ் பொஸர்ட் வட கொரியாவுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக அதிபருக்கு ஆலோசனை வழங்கும் தாமஸ், இந்த குற்றச்சாட்டு 'ஆதாரங்களின் அடிப்படையிலானது'என்று கூறி உள்ளார்.
பிரிட்டன் அரசு நவம்பர் மாதம் இந்த தாக்குதல் தொடர்பாக வட கொரியாவை குற்றஞ்சாட்டி இருந்தது.
பணம் கோரப்பட்டது:
மே மாதம், விண்டோஸ் கணிணிகள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகின. கணிணிகளில் இருந்த கோப்புகளை திறக்க இயலாதவாறு பாதிக்கப்பட்டது. இந்த தீங்கிழைக்கும் மென்பொருளை கணிணியில் செலுத்தியவர்கள், கோப்புகளை மீட்க பணம் கோரினர்.
இந்த தாக்குதலுக்காக வட கொரியாவை பொறுப்பாக்க வேண்டும் என்று வால் ஸ்ட்ரீட் கட்டுரையில் தாமஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், அமெரிக்கா இது போன்ற சைபர் தாக்குதல்களை தடுக்க, வலுவான திட்டத்தைக் கையாள்வதை தொடரும் என்று கூறியுள்ளார்.
"கடந்த ஒரு தசாப்தமாக வட கொரியா மோசமாக செயல்பட்டு வருகிறது. அதனுடைய தவறான நடவடிக்கைகளும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வளர்ந்துக் கொண்டே வருகின்றன. 'வான்னாக்ரை' மென்பொருளை பரப்பியது பொறுப்பற்ற ஒரு செயலாகும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
மருத்துவ மற்றும் அஞ்சலக சேவை:
இந்த 'வான்னாக்ரை' தாக்குதலால் பிரிட்டனின் 'தேசிய சுகாதார சேவை அமைப்பு' மோசமாக பாதிக்கப்பட்டது. 48 சுகாதார நிறுவனங்கள் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறின; அறுவை சிகிச்சைகள் கூட இதனால் தள்ளிவைக்கப்பட்டது.
உலகெங்கும் பரவிய இந்த `வான்னாக்ரை` ரஷ்யாவை மோசமாக பாதித்தது. அவர்களுடைய அஞ்சலக சேவை இதனால் இடையூறுக்கு உள்ளானது.
வட கொரியா தலைவர் கிம் ஜாங் - உன் கொல்லப்படுவது போல புனைவாக ஒரு திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து, `சோனி பிக்சர்ஸ்` நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.
அந்த தாக்குதலுக்கு வட கொரியாதான் காரணம் என்று 2014-ம் ஆண்டு அமெரிக்கா கோரியது. இதனால் கோபமடைந்த வட கொரியர்கள் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவை சாடினர். ஆனால், வெள்ளை மாளிகையின் இந்த குற்றச்சாட்டுக்கு வட கொரியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்