You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அழிவின் நூலிழையில் சுமத்ரான் காண்டாமிருகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
- எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
- பதவி, பிபிசி
பூமியில் மிக மோசமாக அழியும் நிலையிலுள்ள பாலூட்டிகளில் ஒன்றான சுமத்ரான் வகை காண்டாமிருகத்தின் மரபணுவை பகுப்பாய்வு செய்ததன் மூலம் பல விடயங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பகுப்பாய்வு செய்யப்பட்ட மரபணு வரைபடமானது நீண்ட காலத்திற்கு முன்னதாகவே இவ்வகை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை காட்டுகிறது.
கடந்த பனி யுகத்தில் காண்டாமிருகங்களின் வசிப்பிடம் சுருங்கியபோது அதனுடைய பிரச்சனைகளும் தொடங்கியதாக இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு, மனித சமூகம் ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக இவ்வகை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை மேலும் குறையத் தொடங்கியது. தற்போது 250க்கும் குறைவான சுமத்ரான் வகை காண்டாமிருகங்களே இவ்வுலகில் எஞ்சியுள்ளதாக கருதப்படுகிறது.
"இந்த இனங்கள் அழிவானது மிக நீண்ட காலத்திற்கு முன்னதாகவே தொடங்கியது" என்று சின்சினாட்டி மிருகக்காட்சி மற்றும் தாவரவியல் பூங்காவின் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான மையத்தை சேர்ந்த டெர்ரி ரோத் என்ற ஆராய்ச்சியாளர் கூறினார்.
மரபணு வரிசை தரவுகளின்படி, பிளாய்டோசீன் காலம்தான் "சுமத்ரான் காண்டாமிருகத்துக்கு பெரும் சவாலாக இருந்தது" என்று மேற்கு வர்ஜீனியாவிலுள்ள மார்ஷல் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹெர்மன் மேஸ் கூறியுள்ளார்.
உலகின் மிகச் சமீபத்திய பனி யுகமான பிளாய்டோசீன் என்ற புவியியல் காலமானது 25,88,000 முதல் 11,700 ஆண்டு காலத்திற்கு முன்பு நிலவியது.
மரபுவழி எச்சம்
சின்சினாட்டி மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒரு நன்கு அறியப்பட்ட ஆண் காண்டாமிருகம் மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் மரபணு வரிசைப்படுத்தப்பட்டு ஆராய்ச்சியாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
இப்பு என்றழைக்கப்படும் இந்த காண்டாமிருகம் 1990 முதல் இப்பூங்காவில் வாழ்ந்து வந்தது. ஆனால், நான்கு வருடங்களுக்கு முன்பு தனது 33வது வயதில் உயிரிழந்தது. உலகிலுள்ள சுமத்ரான் காண்டாமிருகங்களிலேயே அதிகபட்சமாக மூன்று குட்டிகளை ஈன்றது இதுதான். இந்த காண்டாமிருகத்தின் மரபணுவானது மரபணு வங்கியில் சேமிக்கப்பட்டது.
இதன் டிஎன்ஏவை பகுப்பாய்வு செய்ததன் மூலம் சுமத்ரான் வகை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை சார்ந்த வரலாற்றை விஞ்ஞானிகளால் அறிய இயலுகிறது.
சுமார் 9,50,000 வருடங்களுக்கு முன்பு இவ்வகை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 60,000 ஆனது.
மற்ற பெரியவகை பாலூட்டிகளை போன்று சுமத்ரான் வகை காண்டாமிருகங்களின் இனமும் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது பிளாய்டோசீன் காலத்தின் முடிவில் தனக்கு பொருத்தமான வசிப்பிடங்களை இழந்தது.
போர்னியோ, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை மலாய் தீபகற்பம் மற்றும் ஆசியப் பெருநிலப்பரப்பை இணைக்கும் நில பாலங்கள் கடலினுள்ளே காணாமல் போயின.
9,000 வருடங்களுக்கு முன்னர் பருவநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இந்த எண்ணிக்கை சரியத் தொடங்கியது.
"அப்போது குறைந்த இவற்றின் எண்ணிக்கை அதன் பிறகு மீள்வதற்கான சூழலே ஏற்படவில்லை" என்று பேராசிரியர் மேஸ் கூறுகிறார்.
"சுமத்ரான் வகை காண்டாமிருகங்களின் இனமானது தற்போது அழிவின் நூலிழையில் உள்ளது" என்று கூறும் ரோத், "அவற்றை காத்திட நாம் மேலும் செயலாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஒரு காலத்தில் சுமத்ரான் காண்டாமிருகமானது பூடான் மற்றும் வடகிழக்கு இமயமலை அடிவாரத்தில் இருந்து தெற்கு சீனா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகள் வரை பரவியிருந்தது.
தற்போது சுமத்ராவில் மட்டுமே அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்வகை காண்டாமிருகமானது இன்டர்நேஷனல் யூனியன் பார் நேச்சர் கன்சர்வேஷன் (IUCN) என்னும் அமைப்பினால் அழியும் நிலையிலுள்ள விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்