You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பத்மாவத்' படம் குறித்து ராஜபுத்திரர்கள் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்?
- எழுதியவர், ராஜேஷ் ஜோஷி
- பதவி, பிபிசி
தாங்கள் கடவுளாக வணங்கும் ராணி பத்மாவதியை அவமதிக்கும் வகையில் இருப்பதாக ராஜபுத்திரர்கள் அமைப்பு அத்திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க, 'பத்மாவதி' என்று பெயரிடப்பட்ட திரைப்படம் 'பத்மாவத்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது.
வெளியான சில பகுதிகளிலும் அந்தப் படம் போராட்டங்களையே எதிர்கொண்டுள்ளது.
ஆனால், உண்மையில் ராஜபுத்திரர்களை பெருமைப்படுத்தும் வகையில் அத்திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பற்றுள்ளன. அவர்கள் கிட்டத்தட்ட 'சூப்பர் ஹியூமன்' கதாபாத்திரங்களை போலவே காட்டப்பட்டுள்ளனர்.
போர்க்களங்களை காட்டும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களே போர்க்களத்தில் நிற்பதுபோல உணர்வு உண்டாகிறது. திரைப்படத்தின் இறுதியில் ராஜபுத்திரர்களையே வாழ்த்தித்தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தங்கள் வாக்கைக் காப்பாற்ற ராஜபுத்திரர்கள் எதையும் செய்வார்கள், ஒருவரை விருந்தினராக ஏற்றுக்கொண்டபின் ராஜபுத்திரர்கள் அவர்கள் கழுத்தில் கத்தி வைக்க மாட்டார்கள், எதிரியிடம் சிக்கிக் கொண்டாலும் ராஜபுத்திரர்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள், ராஜபுத்திர படை வீரன் எதிரிகளையும் ஏமாற்ற மாட்டான் என்பன போன்றவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ராஜபுத்திர பெண்ணான ரூப் கன்வர் எனும் இளம் பெண் ராஜஸ்தானில் உள்ள தியோரலா கிராமத்தில், இறந்துபோன தனது கணவரின் சிதையில் வைத்து எரிக்கப்பட்டபோது, 'சதி' எனப்படும் உடன்கட்டையேறுதலை ஆதரித்த ராஜபுத்திர அமைப்புகள், அவ்வழக்கை கடுமையாக விமர்சித்தவர்களையும் அணிதிரண்டு எதிர்த்தனர். அவர்கள்தான் தற்போது இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்.
'பத்மாவத்' திரையப்படத்தில் இஸ்லாமிய கதாபாத்திரங்களை தீயவர்களாக சித்தரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னும் இஸ்லாமிய அமைப்புகள் கிளம்பியுள்ள செய்திகள் இதுவரை எதுவும் வரவில்லை.
எனினும் அத்திரைப்படத்தை தடை செய்த மாநில அரசுகள் ராஜபுத்திரர்கள் அமைப்புகளின் கோபத்தை அப்படியே வைத்திருக்க ஏன் விரும்புகின்றன என்றும் தெரியவில்லை.
பௌத்த மதத்தில், சிங்கள தேசத்தில் பிறந்து ராஜபுத்திர மன்னனை மணந்த ஒரு அரசியை இந்த நாட்டின் தாய் என்கிறார் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்.
தீபிகா படுகோனின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு பத்து கோடி பணம் சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கிறார் இன்னொரு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்.
அந்தப் படம் ஜனவரி 25 அன்று வெளியிடப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் பல பாரதிய ஜனதா மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.
இப்போதைய உண்மையான கையறு நிலையில் இருப்பவர்கள் ராஜபுத்திரர்களை போற்றி திரைப்படம் எடுத்தவர்கள், அந்த ராஜபுத்திரர்களுக்கே முடியாது என்று கூறும் நிலையில் இருப்பதுதான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்