மணல் கோட்டையில் வசிக்கும் ஓர் ஆச்சர்ய 'மகாராஜா'

வெற்று மணலில் வீடு கட்டுவதே கற்பனை என்னும் நிலையில், ஒரு மணல் கோட்டையில் மகாராஜா வாழ்வதை கேட்க வியப்பாக இருக்கிறதா? பிரேசிலின் 'மார்ச்சோ மிஜைல் மோடாலியா' 22 ஆண்டுகளாக மணல் கோட்டை கட்டி, அதில் வாழ்ந்து வருகிறார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ பகுதியில் கடலுக்கு அருகில் மார்ச்சோ மிஜைல் மோடாலியா வசிக்கிறார். உங்கள் கற்பனையில் இருக்கும் மன்னருக்கும் இந்த நிதர்சன மன்னருக்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. 44 வயதான மார்ச்சோவின் மகுடத்தை பார்த்தே அவர் மன்னர் என்பதை கண்டுபிடிக்கமுடியும்.

தனது பிரத்யேக கோட்டையின் முன் அமர்ந்திருக்கும் இந்த பேரரசரின் கைகளில் செங்கோல் இருக்கிறது. 'அரசர் மார்ச்சோ' என்று மற்றவர்கள் அழைக்கவேண்டும் என்று விரும்பும் அவர் ஒரு கலைஞர். இந்த கலைஞரே தனது மணல் கோட்டையை கட்டிய பொறியியலாளர்!

ரத கஜ துரக பதாதிகள் மட்டுமல்ல, பட்டத்து ராணியோ, பணியாளர்களோ இல்லாத ராஜா, தனது வேலைகளையும், கோட்டை பராமரிப்பையும் தானே செய்துக் கொள்கிறார்.

"எனது கோட்டையை அலைகள் தகர்த்துவிட்டால் நான் வருத்தப்படுவதில்லை, கடற்கரையில் வேறு பகுதிக்கு சென்று, புதிய கோட்டையை நிர்மாணிக்கிறேன்" என்கிறார் இந்த மனம் தளராத விக்ரமாதித்தன்!

கோட்டை தரைமட்டமானாலும் கவலைப்படாத மன்னரை பார்த்திருக்கிறார்களா?

இதோ இந்த வித்தியாசமான அரசர் சொல்கிறார், "என் சொந்த கோட்டையை மீண்டும் மீண்டும் உருவாக்குவதற்கு நான் சளைப்பதில்லை, களைப்படைவதுமில்லை. ஏனென்றால் நான் எந்த வேலையைக் கண்டும் அஞ்சுவதில்லை, நான் வலிமையானவன், மனம் தளராதவன்."

'இது என்னுடையது, அது என்னுடையது' என்று பலர் சொல்வதை பார்த்து எனக்கு வியப்பாக இருக்கிறது. வாழ்க்கையில் எது நிரந்தரம்? நான் எதையுமே உரிமை கொண்டாடுவதில்லை" என்று மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை சுலபமாக சொல்கிறார் இந்த மணல் மன்னர்.

வெளியில் இருந்து பார்க்கும்போது கம்பீரமாய் தோற்றமளிக்கும் இந்தக் கோட்டைக்குள் மன்னர் மார்ச்சோவின் தேவைகளை பூர்த்தி செய்யும் சில பொருட்கள் மட்டுமே காணப்படுகிறது.

ஆனால் தனது தேவைகளும் குறைவு என்று சொல்லும் மார்ச்சோ, தனது தேவைக்கு ஏற்ற அனைத்தும் இங்கேயே கிடைத்துவிடுவதாக சொல்கிறார்.

இயற்கை இவருக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தாதா? மன்னன் என்றும் சாதாரண மக்கள் என்றும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வித்தியாசம் தெரியுமா என்ன? தகிக்கும் வெயிலுக்கு தெரியுமா தன்னலமற்ற அரசருக்கும் தகிக்கும் என்பது?

''எனது வேலையில் இயற்கை அவ்வப்போது தலையிடும். அடைமழை வந்து கோட்டையை அடித்துச் செல்லும். எனவே மழை எனக்கு பிடிப்பதில்லை. அப்போது உயர்ந்த இடத்தில் வாழ்பவர்கள்தான் மகிழ்ச்சியடைவார்கள்'' என்று சொல்கிறார் மகராஜா.

அதேபோல், ''வெப்பம் அதிகரிக்கும் கோடைகால நாட்களில் மணல் கோட்டையில் உறங்கமுடியாது. அப்போது யாராவது ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றுவிடுவேன்''

இதற்காகவெல்லாம் மனமொடிந்து போகாத மாமன்னர் கூறுகிறார், "ஆனால் இயற்கை அனைத்தையும் சமநிலையுடன் பார்க்கிறது, நானே விரும்பி தேர்ந்தெடுத்த வாழ்க்கை இது. மணலில் கலைப்பணி செய்வது எனது வாழ்க்கையின் லட்சியம்".

சரி, ராஜ்ஜியம் இல்லாத இந்த ராஜா வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கிறார்? தன்னை பார்க்கவரும் மக்கள் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்கிறார். அதுதவிர, புத்தக பரிமாற்ற கடை ஒன்றையும் நடத்தி வருவாய் ஈட்டுகிறார் ராஜா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :