காஷ்மீரில் இந்தியாவுக்கு வழிகாட்டுமா இஸ்ரேல்?

    • எழுதியவர், வாப்பலா பாலசந்திரன்
    • பதவி, பிபிசிக்காக

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் அளிப்பது போன்ற பகிரங்க ஆதரவு ஆப்கானிஸ்தான், சிரியா அல்லது இராக் போன்று வேறு எந்தவொரு நாட்டிலும் காணமுடியாதது. ஆனால், இஸ்ரேலிய எல்லைகளில் பாலத்தீனர்கள் அனைவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பார்கள். எனவே இஸ்ரேலிய பிரதமரின் இந்திய வருகையின்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Twitter/pib

படக்குறிப்பு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை புதுமையான விதத்தில் வரவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி இஸ்ரேலுடன் பாரம்பரியமாக நெருக்கமான உறவுகள் கொண்டிருக்கிறது. அந்த உறவுகள் மேலும் நெருங்குவது அந்த கட்சிக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

2000ஆம் ஆண்டு ஜூன் 14இல் அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர் லால் கிருஷ்ணா அத்வானியும், இந்திய பாதுகாப்பு அதிகாரிகளும் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டனர். அது முன்னெப்போதும் இல்லாத முன்னோடி நடவடிக்கையாக இருந்தது. அத்வானியின் அந்த பயணத்திற்குப் பின்னர், ரஷ்ய உள்துறை மந்திரி விளாடிமிர் ரஷீலாவும் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டார்.

பாலஸ்தீன "சுதந்திரப் போராளிகளுக்கு" எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை முதலில் விமர்சித்த நாடுகள், பிறகு தங்கள் பின்புலத்தில் செயல்படும் "சுதந்திரப் போராளிகளை" கையள்வது குறித்த இஸ்ரேலின் அனுபவத்தை அறிந்துக்கொள்ள வரிசையில் நிற்பதாக இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ருவென் பாஸ் அப்போது கூறியிருந்தார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Twitter/pib

ஐ. நாவில் டிரம்ப்பின் திட்டங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியா

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டது அந்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் டிசம்பர் 2017இல் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவிற்கு எதிரான ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவளித்த இந்தியா, இஸ்ரேலுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

"இஸ்ரேலுடன் தீவிரமான உறவை இந்தியா விரும்பவில்லை" என்று ஹரேட்ஸ் என்ற இஸ்ரேலிய பத்திரிகை ஜனவரி 4ஆம் தேதி எழுதியிருந்தது.

இந்தியா மற்றும் இஸ்ரேலின் இருதரப்பு உறவுகளின் நிதர்சன நிலைமையை விளக்க அந்த கட்டுரை முயன்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, "வசீகரத்தில்" தொடங்கி "நெருக்கம்" கனிந்து, பிறகு "இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாடாக" மாறிவிட்டதாக அந்த தாராளவாத இஸ்ரேலிய தினசரி தெரிவிக்கிறது.

அரபு மற்றும் இஸ்லாமிய உலகோடு இந்தியா உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்றும், "இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமிய சமூகத்துடன்" உறவுகளை சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் அந்தக் கட்டுரை கூறுகிறது.

செளதி அரேபியா-அமெரிக்கா-இஸ்ரேலின் ரகசிய மற்றும் வெளிப்படையான கூட்டணி, இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

விமான நிலையத்தில் மோதிக்கு நெதன்யாகு வரவேற்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் பயணத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு வரவேற்பு அளிக்கிறார்

காஷ்மீரில் இஸ்ரேலிய கொள்கை

இஸ்ரேலில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக அந்நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பின்பற்றி, 2014இலிருந்து பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் காஷ்மீரில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

2017 மே 14ஆம் தேதியன்று ராம் மாதவ் என்.டி.டி.வி தொலைகாட்சியில் பேசியபோது, ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து தீவிரவாதிகளையும் கொல்லவேண்டும் என்றும், இஸ்ரேல் போன்று எல்லைப் பகுதிகளில் 'தண்டனைத் தாக்குதல்களை' நடத்தவேண்டும் என்றும் கூறினார்.

எனினும், இந்த முயற்சிகள் அனைத்தையும் மீறி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலை திரும்பவில்லை. கற்களை கொண்டு தாக்குதல் தொடர்கின்றன. சர்வதேச செய்தி ஊடகங்களில் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படுகிறது. இந்திய ராணுவம் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி, தனது சொந்த குடிமக்களையே குருடாக்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்திய ராணுவத்தால் வீசப்பட்ட பெல்ட் குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீர்வாசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய ராணுவத்தால் வீசப்பட்ட பெல்ட் குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீர்வாசி

தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு

2016 ஜூலை மாதத்தில் புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல்களில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் உயிர் சேதம் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு முன்பு அதாவது 2016ஆம் ஆண்டு வரை மாவோயிஸ்டுகள் தரப்பில் உயிர் சேதம் அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடும்போது நிலைமை மேலும் மோசமாகிறது. புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு, உயிரிழந்த தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ளவும், ராணுவத்துக்கு எதிராக போராடவும் சாதாரண மக்கள் பெரும் எண்ணிக்கையில் வீதிகளில் இறங்கினார்கள்.

அண்மையில் 2018 ஜனவரி 8ஆம் நாளன்று புர்காம் மாவட்டத்தில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்ட பிறகு, பாதுகாப்பு படையினருக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.

தீவிரவாதிகளுக்கு பொதுமக்களின் இதுபோன்ற பகிரங்க ஆதரவு ஆப்கானிஸ்தான், சிரியா அல்லது இராக் போன்று வேறு எந்தவொரு நாட்டிலும் காணமுடியாதது.

ஆனால், காஷ்மீரில் காணப்படுவது போன்ற சூழ்நிலையை இஸ்ரேலிய எல்லைகளில் மட்டுமே காணமுடியும். அங்கு ஒவ்வொரு பாலத்தீனியரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு இளைஞர்கள் ராணுவம் அல்லது போலிஸை பார்த்து அஞ்சுவதில்லை என்று அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, 2017 ஜூலை 28ஆம் தேதி பேசுகையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

யஷ்வந்த் சின்ஹா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, யஷ்வந்த் சின்ஹா

பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான "அக்கறையுள்ள குடிமக்கள் குழு" ஒரு விதமான விரக்தி உணர்வும் அவநம்பிக்கையும் காஷ்மீரில் அதிகரித்து வருவதாக கூறியிருக்கிறது.

அனைத்து எதிர்ப்பாளர்களும் பாகிஸ்தானின் கைப்பாவையாக விவரிக்கப்படும் அரசின் அணுகுமுறை சரியல்ல என்று யஷ்வந்த் சின்ஹா கூறியிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் பிகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், ஜனவரி எட்டாம் தேதியன்று ஸ்ரீநகரில் பேசியபோது, பேச்சுவார்த்தைகள் மூலமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று கூறினார்.

யூதப்படுகொலை அருங்காட்சியகத்தில் மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யூதப்படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை ஜெரூசலத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நெதன்யாகுவுடன் பார்வையிடும் மோதி.

எனவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த பயணத்தின்போது பாதுகாப்பு உறவுகள் முக்கியமான விவாதப் பொருளாக இருக்காது என்றே கருதப்படுகிறது.

மேலும் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் தினேஷ்வர் சர்மாவை மத்திய அரசு நியமித்துள்ளது.

(கட்டுரையாளர், அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் சிறப்பு செயலாளர் மற்றும் 26/11 மும்பைத் தாக்குதல்களில் காவல்துறையின் செயல்பாடுகளை ஆராய அமைக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.)

காணொளிக் குறிப்பு, மத்திய கிழக்கை மாற்றியமைத்த போர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :