மது போதையில் இலங்கை தேர்தல் களம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நளினி ரத்னராஜா
- பதவி, பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்
(இலங்கையில் பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, அதை ரத்து செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டது குறித்த இக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இவை பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
இலங்கையில் 16 மில்லியன் மக்கள் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வேளையில் பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்ய தடை அகற்றப்பட்டதும் மீண்டும் அந்த தடை அமலுக்கு வந்ததும் பரபரப்பாக பலராலும் விவாதிக்கப்படும் பேசு பொருளாக இன்று மாறிள்ளது. இந்த நிலை தேர்தல் களத்தில் கட்டாயம் தாக்கத்தை செலுத்தும் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் நிகழ்வாக பலராலும் பார்க்கப்படுகின்றது.
தடையை நீக்கியதோ அல்லது தடையை மீள அமல்படுத்திய செயலோ இந்த தேர்தல் காலத்துக்கு உகந்ததல்ல. இந்த சர்ந்தப்பத்தில் தேவை இல்லாத தலையீடு. வாக்காளர்களின் கவனத்தை சிதறடிக்கும் செயலாகவே சிவில் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது
சில தினங்களுக்கு முன் பெண்களும் மதுபானசாலைகளுக்கு சென்று மதுபானத்தை கொள்வனவு செய்யமுடியாது மற்றும் மதுபான சாலைகளில் பெண்கள் வேலைக்கமர்த்தபடலாம் என்று 1979ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தடை நீக்கபட்டது, அதே வேகத்தில் நீக்கப்பட்ட தடை மீண்டும் ஜனாதிபதியால் அமலுக்கு கொண்டுவரப்பட்டத்தை கூறலாம்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி நாட்டின் சட்டதிட்டங்களை மாற்றுவதில் தலையீடு செய்வது மீண்டும் நாங்கள் ராஜபக்ஷே யுகதுக்குதுக்கு திரும்புகின்றோமா என்ற ஐயப்பாடை அதிகரிகின்றது.
தடையை மீண்டும் அமல்படுத்த கூறப்பட்ட பிரதான காரணம் இலங்கை பௌத்த நாடு ஆகவே பெண்கள் மது கொள்வனவு செய்வதை, அருந்துவதை அனுமதிக்க முடியாது என்பதே. இலங்கை பௌத்த நாடு பௌத்த மதத்துக்கே முன்னுரிமை என்று சொல்வது இந்த தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளை பெற காலகாலமாக சிங்கள தலைவர்கள் பாவிக்கும் யுக்தியாகவே உள்ளது.
மற்றும் பெண்கள் மது அருந்துதல் கலாசாரத்தை பாதிக்கும் என்றும், பெண்கள் மது அருந்தினால் குழந்தைகளை யார் கவனிப்பது? குடும்ப நிலை என்னாவது போன்ற கேள்விகளை முன்வைப்பதன் மூலம் ஜனாதிபதியின் தீர்மானத்தை மற்றைய இனத்தவரும் வரவேற்கின்றனர்.
சட்டம் இருக்கு, அமலாக்கம் இல்லை
நடைமுறையை உற்று நோக்கினால் எவ்வகையான சட்டமும் கொள்கையும் சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. இதற்கு ஊழலும் லஞ்சமும் அதிகார துஷ்பிரயோகமும் சட்டத்தின் ஆட்சி இன்மையும் பிரதான காரணமாக இருக்கின்றது.
உதாரணமாக இலங்கையில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது. ஆனால் இலங்கையில் எப்பகுதிக்கு சென்றாலும் முப்பது நிமிடத்துக்குள் பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் சேவை கிடைக்கப்பெறும் அளவுக்கு நடைமுறை உள்ளது. கொழும்பு போன்ற தலை நகரங்களில் சொல்லவே தேவை இல்லை. அதே போல் கருக்கலைப்பும் சட்ட விரோதமானது. ஆனால் நடக்கின்றது. ஆகவே சட்டமும் ஒழுங்கும் ஏட்டளவில் மட்டும் இருப்பது நன்மை பயக்காது என்பது நடைமுறை யதார்த்தம்.
இலங்கையை பொறுத்த அளவில் உலக சுகாதார மையத்தின் 2014 ம் ஆண்டின் தரவின் படி 80 வீதமான பெண்கள் இலங்கையில் மது அருந்துவதே இல்லை, அதே நேரம் சுமார் 57 வீதமான ஆண்கள் மது அருந்துபவர்களாக்க் காணப்படுகின்றனர். மற்றும் national authority on tobacco and alcohol (NATA) 2016 யின் தரவுப்படி 35 வீதமான ஆண்கள் சாராயம் ( LIQUOR ) குடிக்கின்றனர், 3 வீதமான பெண்கள் மட்டுமே சாராயம் குடிக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் மாதத்துக்கு 200,000 ரூபாய்களை மதுவுக்கு செலவு செய்வதாகவும் ரூபாய் 150,000 ஐ புகைத்தலுக்கு செலவு செய்வதாகவும் இந்த தொகையானது கிராமத்தில் உள்ள சகலருக்கும் இரு மடங்கு சமுர்த்தி தொகையை கொடுப்பதற்கு சமன் என்றும் CHAIRMAN பாலித்த அபெயகொன் கூறியுள்ளார்.
முற்றாக ஒழிக்க வேண்டும்!

பட மூலாதாரம், Getty Images
இவ்வாறு மது அருந்துதல் இருபாலரின் உடல் நலத்துக்கும் சமூகத்துக்கும் எமது பொருளாதாரதுக்கும் அபிவிருத்திக்கும் கேடு விளைவிக்கும் காரணியாக உள்ளது. இதனால் எம் குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளகின்றனர். மதுவுக்கு ஆண் பெண் வித்தியாசம் பார்க்கத் தெரியாது. இவ்வாறு இருக்கும் இடத்தில் பெண்களுக்கு மட்டும் தடை விதிப்பது நகைப்புக்கு உரியது. ஆண்கள் மது அருந்துவது அதிகமாக காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பெண்கள் என்ற காரணத்தினால் உண்மையில் நாட்டில் அக்கறை இருந்தால் மதுவை முற்றாக ஒழிக்க வேண்டும்.
இங்கே ஒன்றை நினைவில் கொள்ளுதல் அவசியம். ஆணும் பெண்ணும் உடல் மூலக்கூறு ரீதியாக மாற்றமு டியாத வேறுபாட்டை கொண்டிருக்கின்றனர். 2000வருடத்துக்கு முன் வாழ்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்த வேறுபாடு அல்லது ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழும் ஆணுக்கும் பெண்ணுக்கும் அல்லது தமிழ், சிங்கள, இஸ்லாமிய ஆண் பெண்களுக்கும் உடல் ரீதியான (உயிரியல்) வேறுபாடு ஒன்றே இது மாற்ற முடியாதது.
ஆனால் இந்த வேறுபாடுகளை மையமாக வைத்து ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபட்ட வகிபாகங்கள் வாழ்க்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகிபாகங்களும் இன்னார் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற வரையறைகள், கட்டுப்பாடுகள் சமூகத்தால், கலாசாரத்தால் , சம்பிரதாயங்களினால், சமயத்தால், பழமொழிகளால், அகராதிகளினால், இலக்கியத்தினால் மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவை பெண்களை பாரபட்சப்படுத்துபவையாக உலகமெங்கும் வியாபித்துள்ளது. இந்த பாரபட்சமானது பெண்களும் ஆண்களைப்போல் சம அந்தஸ்தும் சம வாய்ப்பையும் பெற்று சம பலனை அடைவதை மறுக்கின்றது அல்லது மட்டுப்படுத்துகின்றது. இதனூடாக பெண்களுக்கும் ஆண்களைப்போல் சகல உரிமைகளையும் அனுபவிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த நிலையும் பாரபட்சத்தின் தன்மையும் நாட்டுக்கு நாடு வேறுபடலாம்.
இந்த வரையறைகளும் கட்டுப்பாடுகளும் பாரபட்சமும் ஒவ்வொரு நாட்டின் சட்டங்களிலும் கொள்கைகளிலும் ஏன் வழக்கற்று சட்டங்களில் கூட தாக்கம் செலுத்துகின்றன. உயிரியல் வேறுபாட்டை மையப்படுத்தியே இவை உருவாக்கபட்டுள்ளன என்றால் மிகையாகாது. முக்கியமாக இந்த சட்டங்கள் பெண்களின் காணி உரிமையை மறுக்கும் சட்டங்களாகவும் பெண்ணின் இனப்பெருக்க சுகாதாரத்தை மறுக்கும் சட்டங்களாகவும் காணப்படுகின்றன. (உதாரணம் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டு கருத்தரித்தால் அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்யும் உரிமை பெண்ணுக்கு சட்டத்தின் மூலம் மறுக்கப்பட்டுள்ளது)
ஆணும் பெண்ணும் இணைந்து மது அருந்தினார்களா?
கலாசாரத்தை பேணும் கடமை இருபாலருக்கும் சொந்தமானது. இருப்பினும் முழுப்பொறுப்பும் பெண்களிலேயே திணிக்கபட்டுள்ளது கண்கூடு. அதே போல் பிள்ளை வளர்ப்பும் பராமரிப்பும் பெண்களில் மீதே திணிக்கபட்டுள்ளது. நான் கூறியது போன்று உயிரியல் வேறுபாட்டின் காரணமாக பிள்ளையை கருவில் சுமந்து பிரசவித்து தாய்ப்பால் கொடுப்பதை மட்டும்தான் ஆணால் செய்ய முடியாது, மற்ற எல்லா கடைமைகளையும் ஆண்களாலும் செய்ய முடியும். பெண்கள் பிள்ளை வளர்ப்புக்கும் பாரமரிப்புக்கும் பிரத்தியேக வகுப்புக்களுக்கு போவதில்லை என்பதை ஞாபகத்தில் வைத்திருத்தல் அவசியம். இவையே சமையல் செய்வதற்கு பொருந்தும்.

பட மூலாதாரம், Getty Images
உண்மையில் தமிழர்களுடைய கலாசாரத்தை உற்று நோக்கினால் சில தலைமுறைகளுக்கு முன் ஆணும் பெண்ணும் சமாமாக கள் சாராயம் போன்றவற்றை சேர்ந்தே குடித்துள்ளனர். அக்காலத்தில் இவை பிரச்சனையாக பார்க்கப்படவில்லை. அதியமானோடு இணைந்து கள்ளுண்டு கவிபாடினார் ஔவையார் என பதிவுகள் கூறுகின்றன. அப்போ ஔவையார் காலச்சாரத்தை இழிவு படுத்தினாரா ? ஒளவையாருக்கு நாம் மதிப்பு கொடுக்கவில்லையா ?
பெண்களை பாரபட்சப்படுத்தும் சட்டங்களும், கொள்கைகளும் வழக்காற்று சட்டங்களும் காலனித்துவ ஆட்சிக்கு பின்தான் கொண்டு வரப்பட்டன. அவ்வாறே சில கலாசாரங்களும் ஊடுருவி உள்ளன. ஆனால் இந்த சட்டங்களை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் அந்தந்த சட்டங்களை பெண்களின் வளர்ச்சிக்கு தடை இல்லாதவாறு பாரபட்சத்தை களையும் வகையில் மறுசீரமைத்து நாட்டை சுபிட்சப் பாதைக்கு கொண்டு போகும் இக்காலத்தில் எங்களைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இவ்வகையான உப்புசப்பு இல்லாத சட்டங்களை மதம், கலாசாரம் என்ற போர்வையில் இன்னும் உயிர்பித்துகொண்டு இருகின்றோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












