ஒகி புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை; ரயில்கள் ரத்து, பள்ளிகளுக்கு விடுமுறை

மழை வெள்ளத்தில் முறிந்து கிடக்கும் மின்கம்பம்

குமரிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. ஒகி எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் புயலின் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

இந்த மழையின் காரணமாக மரம் விழுந்தது, வீடு விழுந்தது ஆகிய சம்பவங்களால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரிக்குத் தெற்கே 70 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல் வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து லட்சத் தீவுகளை நோக்கிச் செல்லுமெனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மரங்கள் வேரோடு சாய்வு

கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த மழையின் காரணமாக தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மரங்களை வெட்டி ஒதுக்கும் மீட்புப்படையினர்.

தூத்துக்குடியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 30க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. திருச்செந்தூர், உடன்குடி பகுதிகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் நொறுங்கின.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்துவருவதால் யாரும் வீடுகளைவிட்டு வெளியில் வர வேண்டாமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வீழ்ந்துள்ளன.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையிலான ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 130 பேர் அடங்கிய மாநில பேரிடர் மீட்புப் படையினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். இங்கு மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.

பேக்லைன் மூலம் மீட்புப்பணி

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் அபாய அளவை மீறி வெள்ளம் பாய்ந்துவருவதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் 65-75 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

காணொளி: வட கொரியாவோடு போர் ஏற்பட்டால் என்ன நடக்கும்?

காணொளிக் குறிப்பு, வட கொரியாவோடு போர் ஏற்பட்டால் என்ன நடக்கும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :