சென்னையில் உடல் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் பலி : குடும்பத்தினர் குற்றசாட்டு

உடல் எடை குறைப்புக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்துவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

உடல் பருமனான பெண்ணொருவர்.

பட மூலாதாரம், Daniel Leal-Olivas

படக்குறிப்பு, உடல் பருமனான பெண்ணொருவர்.

திருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி(46)யின் உடல் எடை 150 கிலோவாக இருந்தது. எடைக்குறைப்பு சிகிச்சை பெறுவதற்காக லைஃப்லைன் என்ற தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று (சனிக்கிழமை) இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

குடும்பத்தில் நால்வருக்கு சிகிச்சை

செய்தியாளர்களிடம் பேசிய வளர்மதியின் குடும்பத்தினர், வளர்மதி, அவரது இரண்டு மகள்கள் சரண்யா, சங்கீதா மற்றும் ஒரு மகன் சதீஸ்குமார் என அனைவருக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை நடந்தது என்றும் வளர்மதி மட்டும் கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

''கடந்த ஒரு மாதத்தில் மருத்துவமனையில் அம்மாவுக்கு ஒன்பது அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. திடிரென இன்று காலை அம்மா இறந்துவிட்டதாகக் கூறினார்கள். எங்களால் நம்பமுடியவில்லை. மூன்று நாட்களில் குணம் பெற்றுவிடுவார் என்று சொல்லித்தான் நம்பிக்கை கொடுத்தார்கள்,'' என வளர்மதியின் மகள்கள் தெரிவித்தனர்.

சலுகை விலையில் நால்வருக்கும் சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை தலைமை நிர்வாகிகள் கூறியதாகவும், விரைவில் உடல் எடைகுறைந்து நால்வரும் உடல்நலத்துடன் இருக்கலாம் என்று உறுதி கொடுத்ததால் சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

''நான் 120 கிலோ இருந்தேன்,அறுவை சிகிச்சைக்குப் பிறகு 110 கிலோ உள்ளேன். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சாதாரணமான வேலைகளை செய்யவே சிரமமாக உள்ளது. எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரும் மருத்துவமனைக்கு வந்தபிறகு நோய்வாய்ப்பட்டவர்களாக ஆகிவிட்டோம்,'' என்றார் வளர்மதியின் மகள் சரண்யா.

சதீஸ்குமார் சிகிச்சைக்குப் பின் உணவு எடுத்துக்கொள்வதில் சிரமம் இருப்தாக தெரிவித்துள்ளார். ''ஒரு நாளில் மூன்று இட்லிகூட சாப்பிட முடியவில்லை. வெகுசீக்கிரம் உடல் சோர்வு ஏற்படுகிறது. எங்கள் அம்மாவை நாங்கள் இழந்துவிட்டோம்,'' என்றார் சதீஸ்குமார்.

வளர்மதிக்கு சிகிச்சை அளித்த லைப்லைன் மருத்துவமனை அதிகாரிகளிடம் கருத்து கேட்டபோது அவர்கள் எந்த பதிலையும் தரத் தயாராக இல்லை என்று தெரிவித்தனர்.

கீழ்ப்பாக்கம் காவல்நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது வளர்மதியின் கணவர் அழகேசன் புகார் தந்துள்ளதாகக் கூறினர். முதல் தகவலறிக்கை பதிவானதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :