`முட்டாள்': டிரம்ப் - கிம் ஜாங்-உன் பரஸ்பர தாக்குதல்

கிம்

பட மூலாதாரம், REUTERS/KCNA

படக்குறிப்பு, வட கொரியாவின் அரசு ஊடகம் அறிக்கையை வாசிக்கும் கிம்மின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள் தான் வடகொரியாவிற்கு ஆயுதங்களை தயாரிப்பதற்கான உரிமையை உறுதி செய்யும் விதமாக உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் கூறியுள்ளார்.

ஐ.நா-வில் சமீபத்தில் தான் பேசிய பேச்சுக்கு டிரம்ப் தக்க விலை கொடுப்பார் என்று முன்னெப்போதும் இல்லாத வகையில் தனிப்பட்ட அறிக்கையில், அரச ஊடகங்கள் மூலம் கிம் ஜாங்-உன் கூறினார்.

செவ்வாய்கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் , அமெரிக்கா தன்னை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வட கொரியா முற்றிலும் அழிக்கப்படும் என்று கூறியதற்கு பதிலடியாக கிம் இவ்வாறு கூறியுள்ளார்.

கிம்மை தற்கொலை பணியில் ஈடுபட்டுள்ள ஒரு "ராக்கெட் மனிதன்" என்று டிரம்ப் ஏளனமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய மாதங்களில் சூடான வார்த்தைப் போரில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.

வட கொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. மேலும் சர்வதேச நாடுகள் கண்டனத்திற்கு இடையிலும் அதன் ஆறாவது அணு சோதனையை வட கொரியா நடத்தி முடித்துள்ளது.

வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங்-ஹோ, முன்கூட்டியே டிரம்பின் உரையை நாய் குரைக்கும் சத்தத்தை போன்றது என்று ஒப்பிட்டிருந்தார். மேலும் பியோங்யாங், அமெரிக்க அதிபரின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக பசிபிக் பெருங்கடலில் ஒரு ஹைட்ரஜன் குண்டு வைத்து சோதிக்க முடியும் என்று எச்சரித்திருந்தார்.

காணொளிக் குறிப்பு, வட கொரிய ராணுவத்தின் முழுத்திறனை நீங்கள் பார்த்ததுண்டா?

இது பசிபிக் பகுதியில் மிக சக்திவாய்ந்த ஒரு ஹைட்ரஜன் குண்டு வெடிப்பாக இருக்கக்கூடும்," என்று ரி கூறியதாக தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் மேற்கோளிட்டு குறிப்பிட்டுள்ளது..

இருப்பினும், என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது பற்றி நமக்குத் தெரியாது என்றும் இது குறித்து தலைவர் கிம் ஜாங்-உன் உத்தரவிடுவார் என்றும் அவர் மேலும் கூறினார்.

டிரம்ப்பின் பேச்சு தன்னை அச்சுறுத்தவோ அல்லது நிறுத்தவோ செய்யவில்லை என்றும் தான் தேர்ந்தெடுத்துள்ள பாதை சரியானது என்றும் அதனை இறுதி வரை பின்பற்ற வேண்டும் என்று தான் மேலும் உறுதிபூணும் வகையில் இருந்ததாக கிம் தனது உரையில் கூறியுள்ளாதாக அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வட கொரிய தலைவர் சர்வதேச பார்வையாளர்களுக்கு நேரடியாக உரையாற்றியுள்ளது இதுவே முதன்முறை என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அந்நாட்டின் பிரதிநிதி நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபைக்கு வந்த சிறிது நேரத்தில் இந்த அறிக்கை வந்தது. இந்த காரணத்திற்காக அது தீவிரமான மற்றும் முழுமையான கவனத்தை பெறுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கிம்மின் இந்த கருத்துக்கள் ஜப்பானிய அரசாங்கத்தில் இருந்து விரைவான விமர்சனங்களை தூண்டியது. வட கொரியாவின் கருத்துக்கள் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன, அவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும் என்று அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிஹைட் சுகா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வட கொரியா கடந்த மாதத்தில் ஜப்பான் மீது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது, பிராந்திய பதற்றங்களை மேலும் அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :