"கிம் ஜோங்-உன்னின் சொத்துகளை முடக்க வேண்டும்"- அழுத்தம் தரும் அமெரிக்கா

பட மூலாதாரம், KCNA
வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சொத்துக்களை முடக்குவது, அந்நாட்டுக்கு எண்ணெய் அனுப்பத் தடை விதிப்பது உட்பட வடகொரியாவுக்கு எதிரான புதிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடைகளை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
வட கொரியா தனது ஆறாவது அணு ஆயுத சோதனையையும், பல ஏவுகணைச் சோதனைகளையும் நடத்தியதைத் தொடர்ந்து, இந்த வரைவுத் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் வெடிகுண்டை தாங்கள் உருவாக்கியுள்ளதாகக் கூறிவரும் வட கொரியா, அமெரிக்கா மீது தாக்குவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறது.
வட கொரியா மீதான இந்தக் கூடுதல் தடைகளுக்குச் சீனாவும், ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட கொரியா மீது ஏற்கனவே மிகக்கடுமையான தடைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ளது.
தனது ஆயுத திட்டங்களை குறைக்க வேண்டும் என அந்நாட்டுத் தலைமைக்கு அழுத்தம் தரும் நோக்கில் இத்தடைகள் விதிக்கப்பட்டன.

பட மூலாதாரம், KCNA
கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட புதிய தடைகளின் காரணமாக, நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை வட கொரியா ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால், ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான வருவாயை வட கொரியா இழக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வட கொரியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்காகும்.
எனினும் வேறு சில வணிக வாய்ப்புகள் அந்நாட்டுக்கு இன்னும் இருந்துவருகின்றன.
வட கொரியாவிற்கு பலவித எண்ணெய் வகைகளை அனுப்புவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்றும், வட கொரியாவின் ஜவுளி ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் இந்த புதிய வரைவு முன்மொழிவு கூறுகிறது.
வட கொரியா அரசு மற்றும் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன்னின் சொத்துக்களை முடக்குவது, கிம் ஜோங்-உன் மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் பயணம் செய்யத் தடை விதிப்பது உள்ளிட்டவற்றைக்கும் அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது.
இத் தீர்மானம் நிறைவேறினால், வட கொரியத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பணிபுரியவும் தடைவிதிக்கப்படுவார்கள். முக்கியமாக ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதி மற்றும் சீனாவில் அவர்கள் பணிபுரிய முடியாது.
வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் செலுத்தும் வரி மற்றும் ஜவுளி ஏற்றுமதி ஆகியவை மட்டுமே தற்போது வட கொரியாவுக்கு வருமானத்தைத் தரும் இரண்டு முக்கிய துறைகளாகும். தடையால் வடகொரியாவின் மற்ற வருவாய் ஆதாரங்கள் முடங்கியுள்ளன.

பட மூலாதாரம், REUTERS/KCNA
வட கொரியாவிற்கு எண்ணெய் விநியோகித்து வரும் சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு என்ன பதிலளிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த இரு நாடுகளுக்கும் பாதுகாப்பு கவுன்சிலில் வாக்குரிமை உள்ளது.
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரண்டு நாடுகளின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனா, வட கொரியாவுக்கு எதிரான சமீபத்திய தடைகளுக்கு ஆதரவளித்திருந்தது.
இந்த விவகாரத்தில் சீனாவும், ரஷ்யாவும் மாற்றுத் தீர்வு கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
வட கொரியாவை ஆத்திரமூட்டி வரும், அமெரிக்கா- தென் கொரிய கூட்டு ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இதற்குப் பதிலாக தனது வட கொரியா தனது அணு ஆயுத திட்டத்தை நிறுத்த வேண்டும் என சீனாவும், ரஷ்யாவும் கூறுகின்றன.
தடைகளும், அழுத்தங்களும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பாதி வழிதான். பேச்சுவார்த்தையும், உரையாடலும்தான் மீதிப் பாதி வழி என்றார் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி.
சீனாவும், ரஷ்யாவும் மாற்றுத் தீர்வுகளை முன்மொழிகிறார்கள். தென் கொரியாவும் அமெரிக்காவும் வடகொரியாவை எரிச்சலூட்டும் கூட்டு ராணுவ நடவடிக்கையைக் கைவிடவேண்டும், வட கொரியா தமது அணு ஆயுதத் திட்டத்தையும், ஏவுகணைத் திட்டங்களையும் கைவிடுவதற்குப் பதிலீடாக தென் கொரியா தமது 'தட்' ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன.
இந்தக் கருத்தை அமெரிக்காவும், தென் கொரியாவும் நிராகரித்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












