வட கொரிய அணு ஆயுத நெருக்கடி: கிம் ஜோங்-உன் "போருக்காக கெஞ்சுகிறார்"

வட கொரியா சமீபத்தில் நடத்தியுள்ள மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனை மூலம் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன் "போரை உருவாக்க கெஞ்சுவதாக" ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதர் நிக்கி ஹாலே தெரிவித்திருக்கிறார்.

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்

பட மூலாதாரம், STR/AFP/Getty Images

நியூ யார்க்கில் நடைபெற்ற ஐநா பாதுகாப்பு அவையின் அவசர கூட்டத்தில் பேசுகிறபோது, "அமெரிக்கா போரை விரும்பவில்லை. ஆனால், அதனுடைய பொறுமை எல்லையில்லாதது அல்ல" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

வட கொரியா மீதான தடைகளை மேலும் கடினமாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் முடிவெடுக்க வேண்டுமென அமெரிக்கா பரிந்துரைக்கவுள்ளது.

வட கொரியாவின் முக்கிய கூட்டாளியாக விளங்கும் சீனா, வட கொரியா பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளது. இதனை மத்தியஸ்தம் செய்ய ஸ்விட்சர்லாந்து முன்வந்திருக்கிறது.

இந்நிலையில், உண்மையான குண்டு தாக்குதலுடன் நடைபெறும் கடற்படை பயிற்சியை செய்வாய்க்கிழமை தென் கொரியா நடத்தியுள்ளது. வட கொரியா ஆத்திரமூட்டினால், உடனடியாக தாக்கி, வட கொரியர்களை கடலில் மூழ்கடிப்போம் என்று இந்த ராணுவ பயிற்சி மூலம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தென் கொரிய ராணுவம் வட கொரியாவின் அணு குண்டு சோதனை நடத்தும் இடத்தின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்துவது போன்று உருவகப்படுத்திய ஒரு நாளுக்கு பின்னர் இந்தப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் நிக்கி ஹாலே

பட மூலாதாரம், Drew Angerer/Getty Images

வட கொரியா புதிய ஏவுகணை சோதனைகளை நடத்துவதற்கு தயார் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வட கொரியா நிலத்திற்கு அடியில் குண்டு ஒன்றை சோதனை செய்துள்ளது. இந்த குண்டு 50 முதல் 120 கிலோ டன் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

50 கிலோ டன் என்பது, 1945 ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரை துவம்சம் செய்த அணு குண்டை விட 3 மடங்கு பெரியதாக இருக்கும்.

இது தொடர்பாக நடைபெற்றவை

  • வட கொரியா மீது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான தடைகளை விதிப்பதற்கு அழுத்தம் கொடுக்கப்போவதாக ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்கிறார். தொலைபேசி மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசியபோது, வட கொரியா மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கருத்துக்கு மெர்கல் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
  • போர் நடைபெறுமானால். தற்போது தென் கொரியாவில் வாழுகின்ற அல்லது அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள சுமார் 60 ஆயிரம் பேரை வெளியேற்றுகின்ற நடவடிக்கையை ஜப்பான் திட்டமிட்டு வருகிறது என்று 'நிக்கெய் ஆசியன் ரிவீவ்வின்' தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணொளிக் குறிப்பு, வட கொரியாவின் அணு குண்டு சோதனைக்கு பதிலடியாக உண்மையான குண்டுகளை பயன்படுத்தி தென் கொரியா ராணுவ பயிற்சி

பிற செய்திகள்

அமெரிக்க மிரட்டலுக்கு அசராத வடகொரியா

காணொளிக் குறிப்பு, அமெரிக்க மிரட்டலுக்கு அசராத வடகொரியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :