அதிமுக அரசுக்கு தினகரன் சவாலா?: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு மற்றும் துணை முதல்வராக ஒபிஎஸ் பதவியேற்பு ஆகியவை இன்று (திங்கள்கிழமை) நடந்துள்ள சூழலில், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு, அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் செயல்பாடு, சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சென்னை லயோலா கல்லூரி பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான பெர்னார்ட் சாமி பிபிசி தமிழிடம் கூறுகையில், "தனக்கு ஆதரவாக ஏராளமான உறுப்பினர்கள் இருப்பதாக டி.டி.வி.தினகரன் கோருவது அரசியலமைப்பு ரீதியில் ஏற்புடையதாக இருக்காது. அவரது கருத்தை வெறும் அச்சுறுத்தலாகவே கருதலாம்" என்றார்.

அதே சமயம், "இந்த விஷயத்தைப் பொருத்தவரை, சட்டப்பேரவையில்தான் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் பலத்தை தினகரன் நிரூபிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

"தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் "அதிமுக" என்ற கட்சிக்காகவே மக்கள் வாக்களித்தனர் என்றும் அந்த கட்சியின் தலைவர்கள் ஒருங்கிணைந்து இருப்பதுதான் அதன் எதிர்காலத்துக்கும் சரியாக இருக்கும்" என்கிறார் பெர்னார்ட் சாமி.

அதிமுக என்ற பெரிய கட்சி உடையவில்லை என்ற செய்தி, இந்த இணைப்பு மூலம் இரு அணி தலைமைகளும் வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டும் பெர்னார்ட் சாமி, தினகரன் விவகாரத்தில் இனி அதிமுகவின் இரு தலைமைகளும் எவ்வாறு செயல்படப் போகின்றன என்பதை மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது" என்கிறார்.

மற்றொரு அரசியல் ஆய்வாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், "எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளின் இணைப்பு கடந்த 19-ஆம் தேதியே நடந்திருக்க வேண்டும். ஆனால், சசிகலா விஷயத்தில் முடிவு எட்டப்படாததால் அது தள்ளிப்போனது" என்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை, பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்கும் விவகாரம் நீங்கலாக, மற்ற விஷயங்களை பேசித் தீர்த்துக் கொள்ள கடந்த சில வாரங்களுக்கு முன்பே விரும்பினார் என்கிறார் ராதாகிருஷ்ணன்.

"அணிகள் இணைந்தால் யாருக்கு அமைச்சரவையில் பதவி, யாருக்கு கட்சிப் பொறுப்பு போன்றவை எல்லாம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்ட நடவடிக்கை என்றும், அடுத்ததாக, டி.டி.வி.தினகரனை இரு தரப்பும் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

"தினகரனுக்கு ஏற்கெனவே 16 எம்எல்ஏக்களும் மேலூர் கூட்டத்தில் 19 எம்எல்ஏக்களும் ஆதரவாக இருந்ததை நாம் மறந்து விடக் கூடாது" என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதே சமயம், "தினகரனுக்கு ஆதரவாக உள்ள சில எம்எல்ஏக்கள், ஆளும் அதிமுக அரசை கவிழ்க்கக் காரணமாக இருக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளதால், அவர்களுக்கு தினகரனால் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

"சுமார் 16 முதல் 17 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை எதிர்காலத்தில் விலக்கிக் கொண்டால் இந்த அரசு கவிழும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் என்பதால் இதை மிகவும் சிக்கலான பிரச்சனையாக பார்க்கிறேன்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

தினகரன் ஆதரவாளர்கள் அதிருப்தி

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தது பற்றி செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் நேரடியாக கருத்து வெளியிடவில்லை.

அதே சமயம், அவரது உறவினர் திவாகரன், "சசிகலா சிறைக்கு செல்ல காரணமாக இருந்த இருவரும் பச்சைத் துரோகம் இழைத்து விட்டனர்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மற்றொரு ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்தும் இதேபோன்ற விமர்சனத்தை இருவர் மீதும் முன்வைத்தார்.

பிரதமர் வாழ்த்து

இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராக பதவியேற்றுள்ள பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"தமிழகத்தின் வளர்ச்சிக்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இயன்ற எல்லா ஆதரவையும் மத்திய அரசு வழங்கும்" என்று நரேந்திர மோதி கூறியுள்ளார்.

"இனி வரும் காலத்தில் வளர்ச்சியில் புதிய உச்சத்தை தமிழகம் தொடும் என எதிர்பார்க்கிறேன்" என்றும் பிரதமர் மோதி தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :