You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான ஓ.பி.எஸ். மனு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரானமுன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று (ஜூலை 5) பரிசீலித்தது.
அப்போது பாண்டியராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பு, ஆளும் கட்சியில் இரு பிரிவுகளாக எம்எல்ஏக்கள் இருந்தனர் என்று கூறினார்.
அந்த எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள் சென்னை அருகே தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், விடுதியில் இருந்து எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்ட பிறகு, ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிட எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை பேரவை சபாநாயகர் நிராகரித்தார் என்று வழக்கறிஞர் முறையிட்டார்.
இது பற்றி கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினரை அவையில் இருந்து வெளியேற்றி சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார் என்றும் பாண்டியராஜன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
நீதிபதிகள் கேள்வி
இதைக் கேட்ட நீதிபதிகள், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் வேளையில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த மனுவை நீதிமன்றம் விசாரிக்க விரும்புவதால், அதன் மீதான விசாரணைக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குமாறு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை கேட்டுக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தமிழகத்தில் ஆளும் முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மாநில சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம்தேதி நடைபெற்றது.
அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சியான திமுக வலியுறுத்தியபோது, பெரும் அமளி ஏற்பட்டது.
அதையடுத்து, திமுகவின் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவால் பேரவைக்குச் செல்லவில்லை.
காங்கிரஸை சேர்ந்த எட்டு உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஒரு உறுப்பினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண் குமார் வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்து தமது தொகுதியிலேயே இருந்து விட்டார்.
சபாநாயகர் அறிவிப்பு
இதற்கிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆளும் பழனிசாமி அரசுக்கு ஆதரவாக 122 உறுப்பினர்களும், எதிராக 11 உறுப்பினர்களும் வாக்களித்தனர் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
ஆனால், சபாநாயகரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம்
பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் புகார் அளித்தார்.
இந்த நிலையில் அதிமுகவின் மற்றொரு அணியான ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான கே.பாண்டியராஜன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம்:
மோதி துணைபோனதாக
காங்கிரஸ் கண்டனம்
புதுச்சேரியில் மாநில அமைச்சரவையை கலந்து ஆலோசிக்காமல் மூன்று நியமன உறுப்பினர்களை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நியமித்த செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி துணை போயுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து டெல்லியில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் இன்று கூறுகையில், "அரசியலமைப்பு விதிகளின் மாண்பைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசி வரும் அதே வேளை, மூன்று பேரை நியமன எம்எல்ஏக்களாக தன்னிச்சையாக நியமித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைக்கு துணை போயுள்ளார்" என்றார்.
மரபின்படி, நியமன உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை சபாநாயகர்தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஆனால், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு நியமன உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து வைத்து அரசியலமைப்பை கிரண் பேடி இழிவுபடுத்தியுள்ளார் என்றும் சுஷ்மிதா தேவ் கூறினார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்