You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினி நல்ல தலைவரா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தான் வரவேற்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்றும், அது ஓர் ஆலமரம் என்றும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், ஒரு தலைவர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், அவர் நல்லவரா, அவரை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இன்று டெல்லி வந்துள்ள பன்னீர் செல்வம், செய்தியாளர்களிடம் இக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியினர், பிற்பகலில் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்திக்க இருக்கிறார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், சசிகலாவால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனின் நியமனம் செல்லாது என்றும், அவரது பரிந்துரைகளை வங்கிகள் ஏற்கக்கூடாது என்றும் வங்கிகளுக்கு தான் கடிதம் எழுதியதாகவும் ஆனால் அதை வங்கிகள் செயல்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து முறையிடப் போவதாகவும், வங்கிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுகுறித்து, அரசாங்கத்திடமும் முறையிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சமரச பேச்சில் முட்டுக்கட்டை ஏன்?
அதிமுகவின் இரு அணிகளுக்கிடையில் துவக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பது ஏன் என்பது குறித்துப் பேசிய பன்னீர் செல்வம், சசிகலா குடும்பத்துடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டிக்க வேண்டும் என்ற தங்கள் நிபந்தனையை எடப்பாடி பழனிச்சாமி அணியினர் நிறைவேற்றவில்லை என்றும், அதுவரை பேச்சுவார்த்தைகளைத் துவக்குவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும், 128 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் எதிர் அணி உண்மையான அதிமுக ஆகிவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு அணிகளுக்கும் இடையில் சமரச முயற்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படும் செய்திகள் பற்றிக் கேட்டபோது, "இதுவரை பாரதீய ஜனதா சமரச முயற்சியில் ஈடுபடவில்லை" என்றார்.
பிரதமரைச் சந்திக்க நேரம் கோரியிருப்பது ஏன் என்ற கேள்விக்கு, அந்த சந்திப்புக்குப் பிறகு அதுபற்றி விளக்கப்படும் என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்